சஹாப்தீன் -
புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்குரிய மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை தோல்வி அடையச் செய்யப்பட்டுள்ளதேயன்றி, புதிய தேர்தல் முறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. பழைய தேர்தல் முறைப் படி விகிதாசார முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதானால் மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதனை மறந்து புதிய தேர்தல் முறையை மாற்றி விட்டோம் என்று யாரும் தம்பட்டம் அடிக்க முடியாது.
புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்குரிய மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை தோல்வி அடையச் செய்யப்பட்டுள்ளதேயன்றி, புதிய தேர்தல் முறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. பழைய தேர்தல் முறைப் படி விகிதாசார முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதானால் மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதனை மறந்து புதிய தேர்தல் முறையை மாற்றி விட்டோம் என்று யாரும் தம்பட்டம் அடிக்க முடியாது.
இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக கலப்புப் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டால் அது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் பலத்தையும் இல்லாமல் செய்துவிடும். ஆதலால், விகிதாசார தேர்தல் முறையே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும், முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பொருத்தமான தேர்தல் முறையாகும். இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் கலப்பு தேர்தல் முறைக்கு ஆதரவு வழங்கக் கூடாதென்று நாம் கட்சியின் தலைமையிடமும், உயர்பீடக் கூட்டங்களின் போதும், தேர்தல் முறை தொடர்பாக கட்சியினால் நடத்தப்பட்ட கருத்தரங்குகளின் போதும் வலியுறுத்தி வந்தோம்.
ஆனால், எங்களின் கருத்துக்கள் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கலப்பு தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு சாதமாகவே அமையும். அதற்குரிய மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கத்தை கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்கள். ஆயினும், முஸ்லிம்களுக்கு விகிதாசார தேர்தல் முறையே சிறந்தென்று நாம் தெரிவித்தோம்.
தேர்தல் முறை மாற்றம் மற்றும் கட்சியின் ஒரு சில நடவடிக்கைகள் குறித்தும் நாம் சந்தேகங்களை முன் வைத்தோம். இதன் போது எங்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் அளிக்கப்படாமல் ஒரு சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய கேள்வி கேட்ட என்னைப் போன்றவர்களை உயர்பீடத்திலிருந்து நீக்கினார்கள். எங்களின் அரசியல் எதிர் காலத்தை அழிப்பதற்கு திட்டங்களை தீட்டினார்கள்.
ஆனால், இன்று மாகாண சபைத் தேர்ததலை விகிதாசாரப் படியே நடத்த வேண்டுமென்று மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். குறிப்பிட்ட அறிக்கை 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இப்போது குறிப்பிட்ட அறிக்கை எங்களினால் தோல்வி அடையச் செய்யப்பட்டதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிட்ட தேர்தல் முறை மாற்றம் பற்றிய சட்ட மூலத்தை ஆரம்பத்திலேயே தோற்கடிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காது இருந்து விட்டு, குறிப்பிட்ட தேர்தல் முறை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கும், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கு முடியாத நிலையில் இருந்தவர்கள் கண்களை மூடிக் கொண்டு கலப்பு தேர்தல் முறைக்கு ஆதரவாக வாக்களித்து வரலாற்றுத் தவறுகளில் இன்னும் அத்தியாயத்தை செய்து விட்டு தற்போது நாங்கள்தான் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை தோல்வி அடையச் செய்தோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது முஸ்லிம்களிடம் வீழ்ச்சியடைந்துள்ள தமது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு எடுக்கும் தந்திரமாகும்.
மேலும், மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை தோல்வி அடைந்தாலும் இத்துடன் இந்த விவகாரம் முடிந்து விடுவதில்லை. இதன் பின்னர் பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை ஜனாதிபதிக்கு செல்ல உள்ளது. இறுதி முடிவினை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு சட்ட மூலங்களுக்கு கண்களை மூடிக் கொண்டு ஆதரவு அளித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்னர் தாங்கள் கண்களை மூடிக் கொண்டே பாதாளத்தில் விழுந்ததாக தெரிவித்துக் கொண்டதனை யாரும் மறக்க முடியாது. இதனையே மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப் படியே நடத்த வேண்டுமென்று சிறுபான்மையினக் கட்சிகள் எல்லாமே முயற்சிகளை எடுத்துக் கொண்டன. அத்தோடு தேசிய கட்சிகளில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பழைய முறைப் படியே தேர்தலை நடத்த வேண்டுமென்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஆதலால், மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை தோல்வி அடைவதற்கு தனியே முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் காரணமல்ல. எல்லா சிறுபான்மைக் கட்சிகளும், ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு துணையாக செயற்பட்டுள்ளார்கள்.
என்ற போதிலும், ஜனாதிபதியும், ஜே.வி.பியும் புதிய முறைப்படி தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்குரிய மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை தோல்வி அடையச் செய்யப்பட்டுள்ளதேயன்றி, புதிய தேர்தல் முறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. பழைய தேர்தல் முறைப் படி விகிதாசார முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதானால் மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதனை மறந்து புதிய தேர்தல் முறையை மாற்றி விட்டோம் என்று யாரும் தம்பட்டம் அடிக்க முடியாது.
0 comments:
Post a Comment