• Latest News

    November 23, 2018

    ஒற்றுமை எனும் கூட்டல் - கழித்தல்

    எஸ்.றிபான் -
    இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோரிக்கைகள் முஸ்லிம் காங்கிரஸினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள்; மக்காவுக்கு சென்று உம்ரா கடமையை முடித்துக் கொண்டதன் பின்னர் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமூக இணையதளங்களில் வெளியானதன் பின்னரே தீவிரமடைந்துள்ளன. அது மட்டுமல்லாது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து செயற்படுவதற்கு விருப்பங் கொண்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனோ அல்லது அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, உயர்பீட உறுப்பினர்களோ எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. என்ற போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு கட்சிகளும் ஒற்றுமைப்பட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒற்றுமைப்பட வேண்டும். ஆனால், அதன் நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்திற்கு நன்மையாக இருக்கும்.

    எதற்காக ஒற்றுமை?
    முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும்தான் இன்று முஸ்லிம்கள் மத்தியில் பரவலான செல்வாக்கைப் பெற்ற கட்சிகளாக உள்ளன. அதே வேளை, இக்கட்சிகளுக்கு இடையேதான் அதிகபட்சமான முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சி எது என்பதில் பலத்த போட்டிகளும் காணப்படுகின்றன. எதிரும், புதிருமான இக்கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்றால் எதற்கா ஒற்றுமைப்பட வேண்டுமென்று ஆராய வேண்டும். இக்கட்சிகளின் ஒற்றுமை பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் சார்பில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவா அல்லது முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காகவா என்பது முக்கியமாகும்.

    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருந்தால் அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தில் சுமார் 20 இற்கும் குறையாத முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றார்கள். ஆயினும், முஸ்லிம் சமூகத்தின் மீது அடாவடிகளும், குழிபறிப்புக்களும் இடம்பெற்றுக் கொண்டே இருந்தன. இன்று கூட இதுதான் நிலையாகும். ஆதலால், முஸ்லிம் சமூகத்தின் பெயரால் ஒரு சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக கதிரைகளை சூடாக்குவதற்கு ஒற்றுமை எனும் பெயரை பயன்படுத்தி சமூகத்தை ஏமாற்ற அனுமதிக்க முடியாது.

    மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதுதான் நோக்கம் என்றால் இவ்விரு கட்சிகளும் எல்லா மாவட்டங்களிலும் இணைந்து போட்டியிட முடியாது. அவ்வாறு இணைந்து போட்டியிடுவது முஸ்லிம்கள் சார்பில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். இத்தகையதொரு நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் உள்ளது.

    மேலும், வேட்பாளர்கள் தெரிவில் கூட பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டும். ஆனால், இரண்டு கட்சிகளும் தங்களின் சார்பில் கூடுதலாக உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே விரும்புவார்கள். அது மட்டுமன்றி, தேர்தலின் பின்னர் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும் பிரச்சினைகள் எழும். ஆதலால், பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டுமென்று பதவி மோகத்தில் ஒற்றுமைப்பட்டால் அதனால் பிரச்சினைகள் ஏற்படவும், வீண் வம்புகளும், வசைகளும் கோலாட்சி செய்யவுமே வழி வகுக்கும்.

    இக்கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக ஒற்றுமைப்படுமாயின் அதனை முஸ்லிம்களும் வரவேற்பார்கள். முஸ்லிம்களுக்கு பல அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக முஸ்லிம்களின் காணிகளை மீட்டெடுக்க வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வின் போது முஸ்லிம்களுக்கும் அரசியல் அதிகாரம் தரப்பட வேண்டும். இது போன்ற விடயங்களை அடைந்து கொள்வதற்கு ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து தரும் கட்சிகளுக்கே தமது ஆதரவைத் தருவோம் என்று உறுதியாக கூறவும் வேண்டும். இந்த ஒற்றுமையில் எந்தவொரு திரைமறை நகர்வகளும் இருக்கக் கூடாது. இந்நோக்கத்தைக் கொண்டு ஒற்றுமைப்பட்டாலும் அரசாங்கத்தை அமைப்பவர்கள் அவற்றை நிறைவேற்றித் தருவார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. தமிழர்களின் பிரச்சினைகளையும், முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் தீர்த்துத் தருவோம் என்று ஜனாதிபதி கதிரைப் பிடித்துக் கொண்ட மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இதே போன்று பிரதமர் கதிரை இழந்து நிற்கின்ற ரணில் விக்கிரமசிங்க அப்பதவியில் இருந்த போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தரவில்லை. தமிழர்களின் கணிசமான காணிகளை மீள ஒப்படைத்துள்ள போதிலும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகளை முன் வைக்கவில்லை.

    முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கம் தயங்குமாயின் அல்லது ஏமாற்றுவதற்கு முற்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் எதிர்க் கட்சிக்கு செல்ல வேண்டும். ஆனால், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வார்களா என்பதும் சந்தேகமாகும். இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கூட கட்சியின் தலைமைக்கு தெரியாமல் அமைச்சர் பதவிக்காக தாவுவதற்கு தயாராக இருந்தவர்கள், ஒளித்துக் கொண்டவர்கள் எதிர்க் கட்சிக்கு செல்வதனை விரும்புவார்களா என்பதும் சந்தேகமாகும்.
    ஆதலால், இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணாத நிலையில் பேசினோம், ஒற்றுமைப்பட்டுள்ளோம் என்று இணைய முடியாது. அது மட்டுமல்லாது, இவ்விரு கட்சிகள் மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியில் இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் உள்ளவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தற்போதைய அரசியல் சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ள பக்கத்திற்கு எதிராகவே அரசியலை மேற்கொள்வார்கள். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றன.

    மட்டுமன்றி தேசிய காங்கிரஸையும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் ஒற்றுமையாக அமையும். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஹஸன்அலி தலைமையிலான குழுவினரும், மக்கள் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாக போட்டியிட்ட போதிலும், இக்கூட்டமைப்பு கட்டியெழுப்பப்படவில்லை. தேர்தலுக்காக மாத்திரம் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டமைப்பாகவே அது அமைந்திருந்தது. ஆதலால், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என்பது தேர்தலை மாத்திரம் மையப்படுத்தியதாக இருக்க முடியாது.
    ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் ஆகியோர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் போன்றே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம் கட்சிகளுடன் இணைவதற்கும் வாய்ப்பில்லை. ஹிஸ்புல்லாஹ் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படவே அதிக நாட்டங் கொண்டவர். தனி முஸ்லிம் கட்சிகளின் மூலமாக அரசியலை முன்னெடுப்பதில் நம்பிக்கையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெருக்கடியான சூழல்
    இவ்வாறுள்ள முஸ்லிம்களின் அரசியலில் ஒற்றுமை என்பது மக்களை ஏமாற்றுவதற்கு போடும் நாடகமாகவே இறுதியில் அமையும். கடந்த காலங்களில் இக்கட்சிகளின் தலைவர்கள் முதல் பாராளுமன்ற உறப்பினர்கள் வரை முஸ்லிம் சமூகத்தின் தேவைக்காக எத்துணையாக செயற்பட்டுள்ளார்கள் என்ற பார்க்க வேண்டியுள்ளது. தங்களின் அரசியல் வெற்றிக்கும், தேவைக்கும் பலவாராக முடிவுகளை எடுத்துச் செயற்பட்டுள்ளார்களே அல்லாமல் சமூகத்தின் தேவைக்காக செயற்படவில்லை.
    தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒற்றுமை என்பது அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வதற்கானது என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு கட்சிகளும் அரசியல் நெருக்கடியில் ஒற்றுமையுடன் செயற்படவே இணக்கம் கண்டுள்ளன. தங்களின் முடிவுகள் இருக்கின்ற செல்வாக்கை இழக்கச் செய்திடக் கூடாதென்பதில் இரு கட்சிகளின் தலைவர்களும் கழுகுப் பார்வையுடன் உள்ளார்கள். யாருக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தாலும் ஒன்றாகவே செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்லாது முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பதவிக்கும், பணத்திற்கும் அணிமாறும் தரப்பினர் என்ற அவப் பெயர் முத்திரை போல் குத்தப்பட்டுள்ளது. இதனை இல்லாமல் செய்ய வேண்டியதொரு அவசியமும் இக்கட்சிகளுக்கு இருக்கின்றன. இதற்கு அப்பால், முஸ்லிம்கள் மத்தியில் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அநீயாயங்களின் பதிவுகள் இன்னும் மாறவில்லை. அதனால், மஹிந்தராஜபக்ஷ முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியவராக உள்ளார். அதனை குறுகியதொரு காலத்திற் செய்திடவும் முடியாது.

    காங்கிரஸ்களின் ஒற்றுமை
    இதே வேளை, கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையையும், மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்தும் காணப்படுகின்றது. மக்கள் காங்கிரஸ் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் பல பிரதேச சபைகளில் போட்டியிட்டது. அதிலும் அம்பாரை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் ஹஸன்அலி தலைமையிலான குழுவினருடன் இணைந்து (ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு) போட்டியிட்டது. முஸ்லிம் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை என வர்ணிக்கப்படும் அம்பாரை மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸின் வசமாக இருந்த சபைகளை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது.

    2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகர சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை ஆகியவற்றை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றி கொண்டது. ஆனால், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரத்தை மக்கள் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பெற்றுக் கொண்டது. இறக்காமம் பிரதேசபையின் அதிகாரத்தை சுதந்திரக் கட்சியானது மக்கள் காங்கிரஸுடன் இணைந்து பெற்றுக் கொண்டது.

    அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் பெற்றுக் கொண்டது. கல்முனை மாநாகர சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டாலும் ஆளுந் தரப்பை விட எதிர்க்கட்சியே பலமாக உள்ளது. மேயர் பதவியை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களின் ஆதரவுடன் வாக்கெடுப்பின் மூலமாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதி மேயர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.முபீத்திற்கு வாக்களிக்கவில்லை.

    2011ஆம் ஆண்டு நிந்தவூர், பொத்துவில், இறக்காமம் ஆகிய உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 50 வீததிற்கும் அதிகமான வாக்குகளைப் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சுமார் 49 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. ஆனால், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மேற்படி இடங்களில் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக் கொண்டது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சுமார் 30 வீத வாக்குகளையே பெற்றுக் கொண்டது. அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில்; பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

    இது போலவே மட்டக்களப்பு மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் தமது செல்வாக்கை சரி செய்து கொள்வதற்கு மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளுவது அவசியமானதொரு தேவையாக இருக்கின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி என்பது எதிர்மறையாகவே அமையும். கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான சாய்ந்தமருது தனிப் பிரதேச சபைக்கான கோரிக்கையை முன் வைத்து அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி பள்ளிவாசலின் கட்டுப்பாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், அங்கு பாராளுமன்ற எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றி எவ்வாறு அமையும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

    இதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சொந்த ஊரான நிந்தவூர் பிரதேச சபையின் அதிகாரத்தை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் ஊரான சம்மாந்துறை பிரதே சபையின் அதிகாரத்தையும் மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் இவரின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நிச்சயப்படுத்திக் சொல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு கடந்த காலத்தை விடவும் வீழ்ச்சியடைந்து இருந்தாலும், மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை விடவும் அதிகமாகவே இருக்கின்றது. இதனால், முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கொள்ளுமாயின் அதனால், மிகக் கூடிய வெற்றியை முஸ்லிம் காங்கிரஸே பெற்றுக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இதனால்தான், அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலர் இரண்டு கட்சிகளும் ஒற்றுமைப்பட வேண்டுமென்று விரும்புகின்றார்கள். அத்தோடு அதற்கான பேச்சுக்களிலும் திரைமறைவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசியல் பகை கொண்டவர்களை உசுப்பேத்தும் நடவடிக்கைகளையும் ஒரு சில முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
    முஸ்லிம் காங்கிரஸ் மிகப் பெரிய செல்வாக்கில் இருந்த போது ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் ஒற்றுமைப்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிப்பெரும் சொல்வாக்குப் பெற்றுள்ள இக்கட்சியினால் மாற்றுக் கட்சிகளை அழிக்க முடியுமென்று கற்பனை செய்து கொண்டது. நேரடியாக முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணையுமாறு அழைப்புவிடுத்தது.

    இன்றைய ஒற்றுமை
    இன்று முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஆட்சியை மீண்டும் நிறுவதற்கு ஒற்றுமையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உம்ராவுக்கு ஒற்றுமையாகச் செல்லுகின்றார்கள். 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றார்கள் என்பவற்றை வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு விட்டதாக பலர் கற்பனை செய்து சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இரு கட்சிகளும் ஒற்றுமைப்படுதல் நல்லது என்று வைத்துக் கொண்டாலும் அரசியல் ஒரு வியாபாரம். இலாப, நட்;டம் பார்க்காது கட்சிகள் இணைந்து கொள்ளாது என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    மேலும், இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் ஜனநாயகம் பெரிய அச்சுறுத்தலுக்குள் அகப்பட்டுள்ளது. அதனை மீட்டு எடுக்க வேண்டும். இல்லாது போனால் எதிர் காலத்தில் சிறுபான்மையினர் அடிமைகளாக மாற வேண்டியேற்படும். பௌத்த இனவாதிகளில் உள்ள கடும் போக்காளர்கள் சட்டத்தை கையில் எடுத்து மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். பொதுவாக எல்லா இன மக்களும் அதிகாரம் பெற்றவர்களினால் நசுக்கப்படுவார்கள். நாடு சர்வதிகாரத்தை நோக்கி செல்லும். ஆதலால், ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது அவசியமாகும்.

    இன்று இலங்கை சர்வதேசத்தின் முன்னால் தலை குனிந்து நிற்கின்றது. பதவி மோகம் கொண்டவர்கள் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று ஒரு முடிவு, நாளை வேறொரு முடிவு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். பாராளுமன்றம் கூடும் போது என்ன நடைபெறுமோ என்று பொது மக்கள் பயங்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே வேளை, இன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், பதவிக்கான போட்டி ஆகியவற்றினால் நாட்டில் பெருங் குழப்பங்கள் ஏற்பட்டுவிடுமோ என்று பொது மக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் அச்சம்  கொண்டுள்ளார்கள். இதே வேளை, இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்படாது போனால் இலங்கையின் மீது அழுத்தங்களையும் கொடுப்பதற்கும் சர்வதேச நாடுகள் பலவும் தயாராக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதலால், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்வது என்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதற்காக போராடிக் கொண்டிருக்கும் கட்சிகளை பாராட்டவும் வேண்டும்.
    Thanks : Vidivelli 23.11.2018
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒற்றுமை எனும் கூட்டல் - கழித்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top