• Latest News

    July 23, 2019

    ஒலுவிலில் 20ஆம் திகதி நடந்தது என்ன?

     19ஆம்_திகதி_அம்பாரைக்கு_விஜயம்
    *********************************************************
    துறைமுகங்கள், கப்பல்துறை அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப் 19ஆம் திகதி அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்கின்றார். அன்றைய தினம் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடுகின்றார். ஆதரவாளர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொள்கின்றார்.

    இதனைத் தொடர்ந்து இரவு 9.40 மணிக்கு நிந்தவூருக்கு விஜயம் செய்கின்றார். அங்கும் கட்சியின் ஆதரவாளர்களுடன் உரையாடுகின்றார். இந்நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வின் கடந்த பல தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸோடும், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் தேர்தல் வெற்றிக்கு உழைத்த ஆதம்அலி, லாபீர், மாஹீர் உள்ளிட்ட சிலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்கின்றார்கள். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் உரையாற்றுகையில் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு சுமார் 03ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த ஆதம்அலி எம்மோடு இணைந்துள்ளார். இதன் பின்னர் நிந்தவூரில் எமது கட்சியின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கும். அடுத்த பொதுத் தேர்தலில் தவிசாளர் தாஹீர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.
    மாற்றுக் கட்சியிலிருந்து ஒருவர் தன்னுடைய கட்சிக்கு வருகை தந்தால் அவரை உயர்வாகப் பேசுவது அரசியல் தந்திரங்களில் ஒன்று அதனையே பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் செய்தார்.

    இதன் பின்னர் ஆதம் அலியின் ஏற்பாட்டில் நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் இராப்போசனம் நடைபெற்றது. இதில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர் வரும் காலங்களில் (பெயர்களைக் குறிப்பிட்டு) அவர்களும் பகிரங்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ள இருப்பதாகவும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

    இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் துறைமுக அதிகார சபையின் ஒலுவில் சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக செல்லுகின்றார்.

    ஒலுவில் சுற்றுலா விடுதியில்
    **********************************************
    20ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று முக்கியஸ்தர் பாஸீத் ஒரு சிலர் செய்தியாளர்களுடன் ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு வருகை தருகின்றார். அங்கு வருகை தந்த செய்தியாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப்பை பேட்டி காண்கின்றார்கள். இப்பேட்டி முகநூலில் நேரடியாக LIVE பண்ணப்படுகின்றது. செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்கின்றார்கள். அம்பாரை மாவட்டத்தில் உங்கள் கட்சியின் பணிகளை எவ்வாறு முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றும் கேட்கப்படுகின்றார்கள். 
    எமது கட்சியின் தலைவரின் நடவடிக்கைகளை அவதானித்த மாற்றுக் கட்சியினர் எமது கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். நிந்தவூரிலும் அவ்வாறு நேற்று இரவு இணைந்து கொண்டார்கள். அவர்கள் பைசால் காசிமின் அரசியலுக்காக சொந்தப் பணத்தை செலவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

    இப்பேட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு செல்லுகின்றார்.

    இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பதனை LIVE ஆக பார்த்துக் கொண்டிருந்த பைசால் காசிமின் அருகில் அதிக நேரங்கள் இருப்பவர்களில் சிலர் சம்பவங்ளை திரிபுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிடம் எடுத்துரைக்கின்றார்கள். அவரின் கண்களை சிவக்கச் செய்கின்றார்கள். ஆத்திரம், ஆவேசம் அடைகின்றார். தனது வாகனத்தில் சிலரை ஏற்றுகின்றார். ஆட்கள் போதாதென்று நிந்தவூர் பொது மைதானத்தில் கல்முனை பிராந்திய சுகாதார அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிக் கொண்டிருந்த சுகாதாரத் திணைக்களத்தில் கடமையாற்றும் நிந்தவூரைச் சேர்ந்த ஊழியர்களை எம்.பி எல்லோரையும் ஒலுவிலுக்கு வரச் சொல்லியுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினரோடு உள்ள சாரதி ஒருவர் அழைக்கின்றார். ஊழியர்களும் வாகனத்தில் ஏறிச் செல்லுகின்றார்கள்.
    ஒலுவில் சுற்றுலா விடுதியை அடைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் வேகமாக இறங்கிச் செல்லுகின்றார். அவரின் பின்னால் அழைத்துச் செல்லப்பட்ட பரிவாரங்களும் செல்லுகின்றனர்.


    பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் தங்கியிருந்த அறைக்குள் செல்லுகின்றார். அங்கு இருந்த நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹீர் அவர்கள் இருவரும் பேசும் வகையில் அறையை விட்டு வெளியேறுகின்றார். இதன் பின்னர் பைசால் காசிமோடு வந்திருந்தவர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கும் அறைக்குள் செல்லுவதற்கு கதவைத் திறக்கமுற்படுகின்றார்கள். இதன்போது அவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் ஏன் உள்ளே செல்ல வேண்டுமென்று கேட்கின்றார்கள். இதனைக் கேட்க நீ யார் என்று விவாதங்கள் நடக்கின்றது. காது தாங்கிக் கொள்ளாத தூசன வார்த்தைகளை நாவு கூசாமல் கொட்டுகின்றார்கள். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லாஹ் அப்போது வருகின்றார். எங்கட ஊருக்கு (ஒலுவிலுக்கு) வந்து வந்து ஆட்களை உள்ளே போகவிடாது தடுப்பதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்று கேட்கின்றார். ஊர்வாதம் பேசுகின்றார். இதனைக்கும் தனியாக நின்று கொண்டிருந்த நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹீர் கண்கள் சிவக்க, தலை திமிர்க்க அமைதியாகவே நிற்கின்றார். ஆனால், வார்த்தைகளை காதில் வாங்கிப் பதிவு செய்து கொள்கின்றார்.
    அரை மணித்தியாலங்களின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அறையை விட்டு அமைதியாக வெளியேறுகின்றார். ஐபசால் காசிமோடு வந்தவர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கின்றார்கள் பேசிக் கொள்கின்றார்கள். பின்னர் மிகவும் கீழ்த்தரமான தூசன வார்த்தைகளினால் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப்பையும், தவிசாளர் தாஹிரையும் திட்டுகின்றார்கள்.
    இவர்கள் திரண்டு வந்ததன் நோக்கம் செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்ட ஆதம்அலியும் இருப்பார் என்பதற்காகவே. அவரை ஒரு கை பார்க்க வேண்டுமென்பதற்காகவே. 
    தங்களின் திட்டம் பொய்த்துப் போய்விட்டது. ஒலுவில் சுற்றுலா விடுதிக்குள் புகுந்து கலாட்ட பண்ணி முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு மோசம் செய்தவர்கள் என்ற அவப் பெயர் தங்களைவ ந்து சேர்ந்துவிடுமென்று நினைத்து, அவ்விடத்தில் புதிய திட்டத்தை தீட்டுகின்றார்கள். 

    ஒலுவில் துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள மணலை விற்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் வந்துள்ளார் என்று ஒலுவில் மக்களிடையே கதையை கட்டிவிடுகின்றார்கள். இவர்களின் பொய்யை உண்மை என்று நம்பி சிலர் அங்கு வருகின்றார்கள். அத்தோடு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லாஹ்வின் அழைப்பின் பேரில் அவரின் எடுபிடிகளும் அங்கு வந்திருந்தார்கள்.
    தூசன வார்த்தைகளினால் ஏசுகின்றார்கள். வீதியை மறிக்கின்றார்கள். டயர் போட்டு எரிக்கின்றார்கள். சண்டையில் ஈடுபடுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப்பின் வாகனத்தின் பின் கண்ணாடி கல் எறிந்து உடைக்கின்றார்கள். நிலைமை மிகவும் மோசமாகின்றது. இதே வேளை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தவம் அங்கு வருகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 
    உறுப்பினர்கள் சிலரும் அங்கு  வருகின்றார்கள். அக்கரைப்பற்று பொலிஸார் வருகின்றார்கள். அவர்கள் நிலைமையை கட்டுப்படுத்துகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் உட்பட அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுகின்றார்கள்.

    இதன் பின்னர் பைசால் காசிமின் தலைமையில் வந்தவர்களின் முதலாவது திட்;டம் தோல்வியில் முடிந்ததனால், தமது இரண்டாது திட்டத்திற்கு அமைய சக்தி ரீவிக்கு பேட்டி கொடுக்கின்றார்கள்.
    அப்துல்லாஹ் மஹ்றூப் துறைமுக அமைச்சராக வந்த போது அவரிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தோம் அதனை அவர் நிறைவேற்றவில்லை என்று சொல்லுகின்றார்கள்.
    எமது கேள்வி: இவர் எத்தனை மாதம் துறைமுக பிரதி அமைச்சராக இருந்தார். ஒரு சில மாதங்களே இருந்தார். ஆயினும், துறைமுகத்திற்காக காணியை இழந்தவர்களின் நஸ்டஈட்டை பெறுவதற்கு உதவினார். வேறு எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. நேற்று வந்தவரிடம் இன்றைக்கு செய்து தர வேண்டும் என்பது போல் உள்ளது.

    ஒலுவில் துறைமுகத்தை நான்தான் (அப்துல்லாஹ் மஹ்றூப்தான்) கட்டினேன் என்று சொல்லுகின்றார். ஒலுவில் பல்கலைக் கழகத்தையும் கட்டியதாகச் சொல்லுகின்றார் என்று பேட்டி கொடுத்துள்ளார். இவர் இப்படி சொல்லவேயில்லை. அதற்குரிய ஆதாரங்கள் உள்ளதா? ஓலுவில் துறைமுகம், பல்கலைக் கழகம் ஆகியவற்றை தலைவர் மர்ஹும் அஸ்ரப்தான் கட்டினார் என்று நன்றாக தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார் என்று பொய் சொல்லுவது சக்தி ரீவிக்கு உண்மைச் செய்தியாகும்.
    தற்போது துறைமுகங்கள் பிரதி அமைச்சராக இல்லாத ஒருவர். அந்தப் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் உள்ள ஒருவர் எப்படி ஒலுவில் துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை விற்க முடியும்.
    அரசியல் கட்சியில் உள்ளவர்கள் கட்சி மாறுவது என்பதும், விமர்சனங்கள், மிகைப்படுத்தி பேசுவது என்பதும் சாதாரணமாக நடக்கும். ஆனால், தம்மோடு இருந்தவர்கள் நிந்தவூர் தவிசாளர் தாஹிருடன் இணைந்து கொள்கின்றார்கள் என்பதற்காக முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று ஆசைப்படும் காலத்தில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது. தன்னுடைய சுயநல அரசியலுக்காக ஒலுவில் ஊரையே பிழையாக வழிநடத்தக் கூடாது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை அறுத்தெறியும் முதல் நடவடிக்கை ஒலுவிலில் நடந்துள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒலுவிலில் 20ஆம் திகதி நடந்தது என்ன? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top