• Latest News

    July 14, 2019

    சோபிக்காத மாநாடு

    எஸ்.றிபான் -
    தற்போது நாட்டில் அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் பௌத்த இனவாதிகளையும், பௌத்த இனவாத கடும்போக்கு தேரர்களையும் கட்டுப்படுத்தாது, அது சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களையே கட்டுப்படுத்தும் என்பதற்கு இம்மாதம் 07ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டமும், அங்கு பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானங்களும் மற்றுமொரு எடுத்துக் காட்டாக உள்ளது. பொது பல சேனாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டம் முழுக்க முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும். சிங்கள மக்களிடையே முஸ்லிம்கள் பற்றி பொய்யான இனவாதக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் பொது பல சேனாவின் இக்கூட்டம் மேலும் முஸ்லிம்களின் மீது சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தும் வகையிலேயே கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதோடு, பிரகடனங்களும் செய்யப்பட்டுள்ளன. அவசர காலச் சட்டத்தின் கீழ் ஒரு இனத்திற்கு எதிராக பேசுவதோ, ஒன்று கூடுவதோ முடியாத காரியமாகும். ஆயினும், அரச பாதுகாப்பு தரப்பினர் இனவன்மத்தை தூண்டக் கூடிய இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தமையின் ஊடாக பொது பல சேனாவின் செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் அதிகாரத் தரப்பினர் இருப்பது தெரிகின்றது. மேலும், பொது பல சேனாவின் இனவாத நடவடிக்கைகளின் மூலமாக அரசியல் ரீதியாக சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற திட்;டம் உள்ளதை மறுக்க முடியாது. பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததன் பேரில் 09 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய குற்றவாளியை ஒன்பது மாதங்களுக்கும் குறைவாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களிடையே இனவாதக் கருத்துக்களை பரப்புவதற்காகத்தான் விடுதலை செய்தாரா என்று பொது மக்கள் தங்களிடையே பேசிக் கொள்ளும் நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஞானசார தேரர் விடுவிக்கப்பட்ட நாள் முதல் முன்னதை விடவும் தீவிரமாக முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு தீவிரமாக செயற்படுகின்றார் என்றால் அவருக்குப் பின்னால் மிகப் பெரிய அரசியல் அதிகாரம் இருப்பதாகவே உள்ளது.
    பொது பல சேனாவின் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பௌத்த பிக்குகளும், ஒரு இலட்சம் பொது மக்களும் கலந்து கொள்வார்கள் என்று பொது பல சேனாவினால் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முக்கியமான பல தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும், அத்தீர்மானங்களின் அடிப்படையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பௌத்த தேரர்களோ, பொது மக்களோ கலந்து கொள்ளவில்லை. இதன் மூலமாக பௌத்த இனவாத தேரர்களினதும், அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் விரோத இனவாதக் கருத்துக்கள் சிங்கள மக்களிடையே வலுவிழந்து கொண்டு சொல்லுகின்றதா என்று எண்ண வேண்டியுள்ளது. நமது இந்த கருத்தியல் உண்மையாயின் பௌத்த இனவாதிகளின் அண்மைக்காலச் செயற்பாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். அதாவது, முஸ்லிம்களின் மீது வன்முறைகளை மேற்கொண்டமை, முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் இலக்கு வைத்து தாக்கியமை ஆகியவற்றின் பின்னணியில் இனவாதத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. இத்தகைய செயற்பாடுகள் மூலமாக நியாயத்தைப் புரிந்து கொண்ட பௌத்த சிங்களவர்கள் பகிரங்கமாக அதற்கு எதி;ராக கருத்துக்களை முன் வைத்தமை. மேலும், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அஸாத்சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்களுக்கும் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டவை பொய்யானது, ஆதாரமற்றது என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை, டாக்டர் சிஹாப்தீன் ஷாபியின் மீதான கருத்தடை குற்றச்சாட்டும், அதிலுள்ள பொய்யும், அரசியலும் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. இவ்வாறு பௌத்த இனவாதத் தேரர்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதாரமற்றவை என்று புலனாய்வு பொலிஸாரின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமையால், புலனாய்வு பொலிஸார் மீது அத்துரலிய ரத்ன தேரர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்;. வெளிநாடுகளிருந்து புலனாய்வாளர்கள் அழைக்கப்பட வேண்டுமென்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    இவ்வாறு செயற்படுகின்ற பௌத்த இனவாதிகளின் உண்மையான முகத்தை சிங்கள மக்கள் புரிந்து கொண்டு வருகின்றமையே பொது பல சேனாவின் கூட்டம் தோல்வியில் முடிவதற்கு காரணம் எனலாம். இதனால் பௌத்த இனவாத தேரர்களும், அரசியல்வாதிகளும் இனவாதத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற தமது திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்று நடவடிக்கைகளை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இப்போதே பௌத்த இனவாத அரசியல்வாதிகள் தங்களின் கருத்துக்களை மாற்றியமைத்துள்ளமை தெரிகின்றது. பொது பல சேனாவின் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தாலும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி தெரிவித்துள்ளது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்திற்கு ஒப்பானதாகும். அதனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனைய துறைசார் தலைவர்களும் அத்தீர்மானங்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும். அதன் பின்னால் உள்ள ஆபத்தை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஞானசார தேரர், அத்துரலிய ரத்ன தேரர் போன்ற பௌத்த இனவாத தேரர்களின் கருத்துக்களை ஆதரிக்கின்ற அரசியல்வாதிகள் ஐக்கிய தேசிய கட்சியிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், பொது ஜன முன்னணியிலும் உள்ளார்கள். அதுமட்டுமன்றி முஸ்லிம்களைப் பற்றிய இன்றைய பிழையான கருத்துக்களை அல்ஜிஹாத் - அல்ஹைதா எனும் நூலின் மூலமாக சிங்கள மக்களிடையே விதைத்தவரும், பௌத்த இனவாத அமைப்புக்களின் தோற்றத்திற்கு காரணமாகச் செயற்பட்டவருமாகிய சம்பிக்க ரணவிக்க இன்றைய அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கின்றார். மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர். இவர் தமது சிந்தனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 2020இல் தூய பௌத்த ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருப்பவர். எதிர்காலத்தில் இந்நாடு முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்று கதை சொன்னவர். 
    இத்தகையவர்கள் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தமது திட்டத்தை அமுல்படுத்தவே முயற்சிகளை எடுப்பர். ஆதலால், இத்தகையவர்கள் ஆட்சியில் பங்காளி என்று வரும் போது அந்த ஆட்சியில் முஸ்லிம்களும் பங்காளிகள் என்று இருக்க முடியாது. அத்தகையதொரு நிலை நெருப்பை மடியில் கட்டி வைத்துக் கொண்டிருப்பதற்கு சமமாகும். ஆதலால், பொது பல சேனாவின் கண்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் அலட்சியமாக இருந்து விடமுடியாது. 
    பொது பல சேனாவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான் சிங்கள அரசாங்கத்தை ஏற்படுத்தல் என்பதாகும். சிங்கள அரசாங்கத்தை அமைக்காது போனால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த துறவி மாத்திரமல்ல எந்த மதத்தைச் சேர்ந்த துறவியானாலும் இனவாதம் பேச முடியாது. ஆனால், பௌத்த துறவரம் கொண்டதே சிங்கள அரசாங்கத்தை ஏற்படுத்தவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை மூலமாக பௌத்த துறவரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் தேவைக்காகவே பௌத்த துறவரத்தை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிகின்றது. 
    இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட எல்லா அரசாங்கமும் இதுவொரு பௌத்த நாடு என்ற கொள்கையிலும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும், சிங்கள மொழிக்கு முதலிடமும் கொடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் சிறுபான்மையினரின் காணி மற்றும் சுயநிர்ணய உரிமைகளை மறுத்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துக் கொண்டாலும் சிங்கள மக்களின் தேவைளையே அதிகம் நிறைவேற்றிக் கொண்டு வரும் போக்கு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மறைமுகமாக சிங்கள அரசாங்கம் ஒன்றே இருந்து வருகின்றது. இவ்வாறு ஆட்சியாளர்களின் நிலைப்பாடு தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கையில் சிங்கள அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்று பிரகடனம் செய்திருப்பதன் ஊடாக பௌத்த இனவாத தேரர்கள் சிறுபான்மையினரை மேலும் ஒடுக்கக் கூடியதொரு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார்கள் என்று தெரிகின்றது. 
    மேலும், அரசாங்கம் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் சபையுடன் பேசக் கூடாது. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய அதிகாரத்தை தேரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும். 1950ஆம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனையே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். சிங்கள தாய்மார்களை இலக்கு வைத்து கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹலால் உணவை தடை செய்ய வேண்டும் என்று மெற்கொள்ளப்பட்ட பிரகடனங்கள் முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பதற்குரியதாகவே இருக்கின்றன. 
    இத்தீர்மானங்கள் யாவும் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு சிங்கள மக்கள் ஆதரவு தர வேண்டும். சிங்கள தலைவரை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டவைகள் மூலமாக முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறித்து, அவர்களை அடிமைகள் போன்று நடத்துவதற்கு பௌத்த இனவாத தேரர்கள் திட்டமிட்டுள்ளார்கள். பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் பாதுகாத்தல் என்ற இனவாத சகதிக்குள் நின்று கொண்டு, அந்த சகதியையும், துர்நாற்றத்தையும் நல்லது போன்று காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இனவாத சகதிக்குள் மாட்டியுள்ள கால்களை வெளியே எடுப்பதற்கு முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் புத்தரின் அழகிய கொள்கைளை வீசிவிட்டு புதிய கொள்கைளை புத்தரின் கொள்கைகளாக காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், பௌத்தத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது. எந்தவொரு மதமும், கொள்கையும் அதன் அடிப்படையை விட்டு விலகியதன் பின்னர் நிலைத்திருக்க முடியாதென்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. மேலும், இனவாதத்தை மேலும் எண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டிருப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை மேலும் படுபாதாளத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். இனவாதிகள் ஒரு போதும் நாட்டையும், இன ஒற்றுமையையும், எதிர் காலத்தையும் சிந்திப்பதில்லை. இனவாதம் என்பது பைத்தியத்திற்கு ஒப்பானது. இலங்கை எப்போது இனவாதப் பைத்தியத்திலிருந்து விடுபடுமோ அன்றுதான் நாடு மகிழ்ச்சியடையும். இனவாதிகள் எல்லா இனங்களிலும் உள்ளார்கள். ஆனால், பௌத்த இனவாதிகள்தான் முன்னணியில் உள்ளார்கள். இவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கின்றது. ஆதலால், பௌத்த இனவாதிகள் தன்நிலையை மாற்றிக் கொண்டால், அரசாங்கம் பௌத்த இனவாதிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஆதரவை விலக்கிக் கொண்டால் ஏனைய சமூகத்தில் உள்ள இனவாதிகள் பனிபோல் தானாகவே மறைந்து போய்விடுவார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சோபிக்காத மாநாடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top