சஹாப்தீன் -
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் மிகவும் பொறுப்புடன்
முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை டிசம்பர் மாதம் 07ஆம்
திகதி நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக் குழு
அறிவித்துள்ளது. இந்நிலையில் பொது ஜன முன்னணியின் வேட்பாளராக
கோத்தபாய ராஜபக்ஷவே களம் இறங்குவார் என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவே
இருக்கின்றது. எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பொது ஜன முன்னணியின்
மாநாட்டில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சிக்கும் பொது ஜன முன்னணிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்
தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து
வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி மற்றுமொரு பிளவை அடைந்து கொள்ளும்
நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதே வேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு
செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு
செய்ய வேண்டுமென்று கட்சிக்குள் உள்ளகப் போராட்டம் ஏற்பட்டுள்ளது. சஜித்தை
வேட்பாளராக நிறுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க,
ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, கரு ஜயசூரிய உள்ளிட்டவர்கள் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளார்கள். ஆயினும், கட்சிக்குள் சஜித்தின் கை
ஓங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் இளம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இதனால், கட்சியின் தலைமைப் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்குரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதொரு சூழலை ரணில் எதிர் கொண்டுள்ளார்.
இவ்வாறு தேசிய கட்சிகளுக்குள் ஜனாதிபதி தேர்தல் குறித்த
கருத்துக்களும், முரண்பாடுகளும் காணப்பட்டாலும் இக்கட்சிகளின் சார்பில்
நிறுத்தப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்படுவார். ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் சிறு;பான்மையினரின்
பிரச்சினைகளைத் தீர்ப்போம், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் தருவோம்,
முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று வாக்குறுதிகளை அளிப்பார்கள்.
தேர்தல் முடிந்ததும் தான் ஒரு பௌத்தன் என்ற தோரணையில் பௌத்த மதத்தையும்,
பௌத்த மக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை
மேற்கொள்வார்கள். சிறுபான்மையினரின் உரிமைகள் பௌத்த இனவாதிகளின் கோரப்
இனவாத பசிக்கு தீனியாகிக் கொண்டிருப்பதனை தடுக்காது இருப்பார்கள். இத்தகைய
செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும்
வழங்குவார்கள். இதுதான் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்
கொண்டிருக்கும் அநீயாயமாகும்.
ஆதலால், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களில் எவர் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தமது
திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பாரோ அவருக்கே ஆதரவு வழங்க வேண்டும். அவர்
தேர்தலில் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது என்பது இரண்டாவதாகவே
இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் உள்ளன. அவை
தீர்க்கப்பட வேண்டுமென்று பௌத்த இனவாதிகளுக்கு அச்சம் கொள்ளாது, தமக்கு
சிங்களவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் தடைகள் ஏற்படும் என்றெல்லாம்
கருத்திற் கொள்ளாது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாக தெரிவிக்கின்றாரோ
அவரையே ஆதரிக்க வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஏற்றுக் கொண்ட
ஒருவருக்கு வாக்களிக்காது வெற்றி பெறும் ஒருவருக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க
வேண்டுமென்று முடிவுகளை எடுப்பது கண்களை குத்திவிட்டு, கண்ணாடி தாருங்கள்
என்று கேட்பதற்கு சமமாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல்களில்
முஸ்லிம்களின் அதிகபட்ச வாக்குகள் அக்கட்சி ஆதரிக்கும் ஒருவருக்கே
அளிக்கப்பட்டு வந்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றதன் பின்னர்
சந்தித்த முதலாவது ஜனாhதிபதி தேர்தலில் அக்கட்சியின் அன்றைய
தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் ஆர்.பிரேமதாஸாவுக்கு வாக்களிக்குமாறு
முஸ்லிம்களை கேட்டுக் கொண்டார். அதற்குரிய பலனாக 12 வீதமாக இருந்த வெட்டுப்
புள்ளியை 05 வீதமாக ஆர்.பிரேமதாஸ மாற்றினார். இதனால், சிறுபான்மையினர்
தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்
கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் மர்ஹும் அஸ்ரப் சந்திரிகா பண்டார
நாயக்காவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து 17 வருடங்கள் ஆட்சி பீட ஏற
முடியாதிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்.
ஜனாதிபதியாக வெற்றி பெற்ற சந்திரிகா பண்டார நாயக்க மர்ஹும்
அஸ்ரப்புக்கு துறைமுகங்கள், கப்பல்துறை, புனர்வாழ்வு அமைச்சை வழங்கினார்.
இந்த அமைச்சைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும்,
தென்கிழக்கு பல்கலைக் கழகம், தொழில் நுட்ப கல்லூரி போன்றவற்றை அமைத்தார்.
அத்தோடு பல அபிவிருத்திப் பணிகளையும் செய்தார்.
இன்று முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதனைப் போன்று
அன்று மர்ஹும் அஸ்ரப்புக்கு எதிராக இனவாதம் பேசினார்கள். ஆயினும்,
முஸ்லிம்களின் பாதுகாப்பு ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களிலும் முஸ்லிம்களின் ஆதரவைப்
பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றார். மஹிந்தராஜபக்ஷவின் இரண்டு
தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு அளிக்காது ஐக்கிய தேசிய
கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது. அதே வேளை, அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறச்
செய்தன. இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் மஹிந்தராஜபக்ஷ வெற்றி பெற்ற
போதிலும், அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான
அனைத்து அதர்மங்களையும் அங்கிகரித்துக் கொண்டே இருந்தார். அவற்றை
தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. யுத்த வெற்றியினால் எற்பட்ட
வறட்டு ஜம்பத்தினால் தன்னை யாரும் அசைக்க முடியாதென்று இருந்தார். சிங்கள
பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற முடியுமென்றும்
நம்பினார். இதனால்தான் அவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடும் எற்பாடுகளைச் யாப்பில் செய்தார். அதன்படி தமது பதவிக்காலம்
முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிட்டு அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற
நிலையில், மைத்தரிபாலசிறிசேன 2015ஆம் ஜனாதிபதித் தேர்தலில்
சிறு;பான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றார். ஆனால், வெற்றி
பெற்றதும் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதனை விடவுடம்
மோசமாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இனவாதிகளினால்
மேற்கொள்ளப்பட்டன. பகிரங்கமாக ஜனநாயக விரோத செயற்பாடுகளை முஸ்லிம்களுக்கு
எதிராக பௌத்த இனவாத தேரர்களும், அவர்களின் அபிமானிகளும் செய்த போதிலும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பௌத்த இனவாத தேரர்களுடன் தோழமை
கொண்டிருந்தார். முஸ்லிம்களின் அதிக வெறுப்புக்குள்ளாகியுள்ள பொது பல
சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தஞான சார தேரர் நீதிமன்றத்தை அவமதித்த
குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவரை
பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார். இப்போது முஸ்லிம்கள் இந்த
ஆட்சியிலும் வெறுப்புக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற இவர்களினால்;
முஸ்லிம்களுக்கு நியாயத்தையும், பாதுகாப்பையும் கொடுக்க விருப்பமில்லை
என்றால் எதற்காக ஆட்சியின் பங்காளிகள் என்று அரசாங்கத்தில் இருக்க
வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளில் உள்ள பலவீனமே முஸ்லிம்களின் இந்த
நிலைக்கு காரணமாகும். முஸ்லிம் சமூகத்திற்காகவே அமைச்சர் பதவிகளைப்
பெற்றுக் கொண்டோம் என்று தெரிவித்துக் கொண்டவர்கள் மஹிந்தராஜபக்ஷவின்
ஆட்சியிலும், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட
போது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு முஸ்லிம்களின்
பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.
அமைச்சர் பதவிகளை இழந்துவிடக் கூடாதென்பதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிரான
வன்முறைகளை சகித்துக் கொண்டிருந்தார்கள்.
அண்மையில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவியை இராஜினாமாச் செய்தமையை
அவர்களின் ஆதரவாளர்கள் பெருமையாக பேசிக் கொண்டாலும், அந்த இராஜினாமாவில்
நிறைய அரசியல் நகர்வகள் இருக்கின்றன. ஒரு பக்கத்தில் அமைச்சர் றிசாட் மீதான
நெருக்குவாரங்கள் அவருக்கு முஸ்லிம்களின் செல்வாக்கை
அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் றிசாட் தனித்து அமைச்சர் பதவியை
இராஜினாமாச் செய்யும் போது, அதன் எதிரோலியாக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும்
அதன் தலைமையின் மீது முஸ்லிம்களிடையே எதிர்ப்பு ஏற்படும் என்ற காரணத்தினால்
முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்களும் பதவியை இராஜினாமாச்
செய்தார்கள். அதே வேளை, பௌத்த இனவாதிகளின் எதிர்வினையில் இருந்து தம்மை
பாதுகாத்துக் கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழி அமைச்சர் பதவியை இராஜினாமாச்
செய்வதுதான் என்ற காரணத்தினால்தான் றிசாட் அமைச்சர் பதவியை இராஜினாமாச்
செய்தார்.
இப்போது அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தவர்களில் ஹரீஸ், பைசால்
காசிம், அலிசாஹிர் மௌலானா ஆகியோர்களை தவிர ஏனையவர்கள் அமைச்சர் பதவிகளைப்
பெற்றுள்ளார்கள். இது கூட அரசியல் நகர்வாகவே இருக்கின்றது. கல்முனை
விவகாரத்தில் தமது தலையை பாதுகாத்துக் கொள்வதற்கு ஹரீஸ்
அமைச்சர் பதவி வேண்டாமென்று ஆடிய நாடகம் வெற்றிகரமாக ஓடக்
கூடாதென்பதற்காகவே ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் பைசால் காசிம்,
அலிசாஹிர் மௌலானா ஆகியோர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்
கொள்ளாதிருக்கின்றார்கள். ஆயினும், ஹரிஸை தவிர ஏனைய இருவரும் விரைவில்
அமைச்சர்
பதவிகளைப் பெறுவார்கள் என்று தெரிகின்றது.
முஸ்லிம்களின் வாக்குகளை பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பெற்றுக்
கொடுத்துவிட்டு ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து அடிமைசாசனம் எழுதிக்
கொடுத்தவர்களைப் போன்று செயற்படுகின்றார்கள் என்றால், தலைவர்களின்
ஆளுமையில் உள்ள குறைபாடு என்றுதான் எம்மால் அடையாளப்படுத்த
வேண்டியுள்ளது.
இத்தகையதொரு பின்னணி உள்ள நிலையில்தான் ஜனாதிபதி தேர்தல்
நடைபெறவுள்ளது. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் மற்றும்
இனவாத தேரர்களினால் முன் வைக்கப்பட்டு வரும் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு
மத்தியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் போது, பிரச்சாரங்களில்
சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களும், பொய் வாக்குறுதிகளும்தான்
அதிகமாக கருப் பொருளாக இருக்கப் போகின்றன.
இதனால், முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு திசையை நோக்கி மாத்திரம்
இருக்குமாயின் பெரும் நெருக்கடியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும்.
முஸ்லிம்களின் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுக் கொள்ளாத வேட்பாளரின்
ஆதரவாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படலாம். மறுபுறத்தில்
முஸ்லிம்களின்
அதிகபட்ச ஆதரவைப் பெற்றுக் கொள்ளாத வேட்பாளர் வெற்றி பெற்றால் அதன்போதும்
முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்.
இந்நிலையிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின்
முஸ்லிம்களின் வாக்குகள் இரண்டு பேருக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான்
முஸ்லிமக்ளுக்கு பாதுகாப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
முன்னாள் கல்வி அமைச்சர் பதியூதீன் மஹ்மூத் முஸ்லிம்களின் முட்டைகள்
(வாக்குகள்) ஐக்கிய தேசிய கட்சியின் கட்சியின் கூடையிலும், ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் கூடையிலும் இருக்க வேண்டும்;. ஒரு கூடை
தவறிவிழுந்தாலும், மறு கூடையில் இருக்கும் முட்டைகள் பயனைக் கொடுக்கும்
என்ற கருத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே, முஸ்லிம் காங்கிரஸும், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒரு கட்சியின் வேட்பாளரை ஆதரிக்காதிருப்பது
சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால், கடந்த காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகள் இரு பிரதான
வேட்பாளர்களுக்கு ஏறத்தாள சமமாக அளிக்கப்பட வேண்டுமென்ற கொள்கை தோல்வி
அடைந்துள்ளதைப் பார்க்கின்றோம். மஹிந்தராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில்
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது இருந்த போதிலும், தேசிய காங்கிரஸ்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர் எதிர் திசைகளிலேயே
ஆதரவு வழங்கியது. ஆயினும், முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். நல்லாட்சியை
ஏற்படுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்
ஒரு திசையில் நின்ற போதிலும், முஸ்லிம்களின் பாதுகாப்பை
உறுதி செய்து கொள்ள முடியவில்லை.
ஆகவே, முஸ்லிம்கள் தமது வாக்குகளை எப்படி பயன்படுத்திக் கொண்டாலும்
பாதுகாப்பற்ற சூழலே காணப்படுகின்றது. முஸ்லிம் தலைமைகளின் மீதுள்ள ஆளுமைக்
குறைபாடுதான் இதற்கெல்லாம் காரணமாகும் என்பது ஒரு மிகையான கற்பனையல்ல.
அதுவே உண்மையாகும். ஆதலால், ஆளுமையுள்ள தலைவர்கள்தான்
முஸ்லிம் சமூகத்தின் இன்றைய தேவையாக இருக்கின்றது. மேற்படி உண்மைகளை
முஸ்லிம் தலைவர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை
ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் ஏமாறிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நல்ல தலைவர்கள்
உருவாக்கப்பட வேண்டும்.
Virakesari 11.8.2019
Virakesari 11.8.2019

0 comments:
Post a Comment