• Latest News

    August 26, 2019

    அமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்திற்கு பிரேசில் அதிபர் உத்தரவு

    பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த அந்த நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார்.
    "பூமியின் நுரையீரல்' என்றழைக்கப்படும் அமேசான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு பிரேசில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமேசான் காட்டுத் தீ குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து, தனது அமைச்சரவைக் கூட்டத்தை பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவசரமாகக் கூட்டினார்.
    அப்போது நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, காட்டுத் தீயை அணைக்கும் பணியிலும், அமேசான் காட்டுப் பகுதியில் தீப்பற்றுவதற்குக் காரணமாக குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையிலும் ராணுவத்தை ஈடுபடுத்துவதற்கான உத்தரவை அவர் பிறப்பித்தார்.
    உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான், பூமிக்கு 20 சதவீத ஆக்ஸிஜனை அளித்து வருகிறது. இதன் காரணமாக "பூமியின் நுரையீரல்' என்று அந்த மழைக்காடு அழைக்கப்படுகிறது. உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமேசான் மழைக்காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது.
    இந்த நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் பிரேசிலில் இதுவரை 76,720 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும். இந்தக் காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சாவ்பாலோ உள்ளிட்ட பல்வேறு பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த காட்டுத் தீ தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பிரேசிலின் அமேசான் காட்டுத் தீ உலகளாவிய அவசர நிலை எனவும், தங்கள் நாட்டில் ஆக.24-ஆம் தேதி தொடங்கும் ஜி7 மாநாட்டில் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ, அமேசான் காட்டுத் தீ சம்பவங்கள் தங்களது உள்நாட்டு விவகாரம் எனவும், இதில் தலையிடுவதன் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தனது காலனியாதிக்க மனோநிலையை வெளிப்படுத்துவதாகவும் சாடினார்.
    அதையடுத்து, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை முடக்கப்போவதாக மேக்ரான் எச்சரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாகவே, அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு ராணுவத்தை அனுப்ப ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்திற்கு பிரேசில் அதிபர் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top