மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம்
கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும்
சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமய
கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர், இலங்கை
முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்ததுடன் அல்குர்ஆனிய வசனங்களுக்கும் தவறான அர்த்தங்களை
முன்வைத்து உரையாற்றினார். எனினும் இதனைத் தொடர்ந்து உரையாற்றி அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, ஓமல்பே
சோபித தேரரின் கருத்துக்களை மறுத்ததுடன் இஸ்லாம் குறித்தோ அல்குர்ஆன்
குறித்தோ தவறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள்
விடுத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக முஸ்லிம் லீக் செயலாளர்
நாயகம் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா உள்ளிட்ட
முக்கியஸ்தர்கள் மேடையில் இருந்த நிலையிலேயே ஓமல்பே சோபித தேரர் இக்
குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
ஓமல்பே சோபித்த தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சமாதானத்தை
ஏற்படுத்த அனைத்து இன மக்களும் ஐக்கியமாக ஒன்றுபோல் வாழவேண்டும்.
சிங்கள, தமிழ் கத்தோலிக்க மக்கள் அதன் பிரகாரம் செயற்படுகின்றனர்.
ஆனால் முஸ்லிம்கள் அனைத்து விடயங்ளிலும் வித்தியாசமாகவே
செயற்படுகின்றனர். குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம், அவர்களின்
ஆடை, உணவு போன்றவற்றில் தனித்துவமாகவே செயற்படுகின்றனர்.
இவ்வாறு சென்றால் எதிர்காலத்தில் தனி அரசாங்கம் தனி நாடு என்ற நிலைக்கே
இது இட்டுச் செல்லும். அத்துடன் அல்குர்ஆனில் சில வசனங்கள்
நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.
அவைதொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
ஓமல்பே சோபித்த தேரரின் இந்த உரையைத் தொடர்ந்து உரையாற்ற வந்த அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவரது
குற்றச்சாட்டுக்களுக்கு மேடையிலேயே பதிலளித்தார். அவர் அங்கு
தெரிவிக்கையில், இஸ்லாம் ஒருபோதும் அடிப்படைவாதம், இனவாதத்தை
அனுமதித்ததில்லை. நல்லிணக்கத்தையே இஸ்லாம் போதிக்கின்றது.
அத்துடன் ஓமல்பே சோபித்த தேரர் அல்குர்ஆனின் வசனங்கள் குறித்து
தெரிவித்த கருத்துக்கள் பிழையானவையாகும். அவ்வாறான சில வசனங்கள்
சில அல்குர் ஆன் இறக்கப்பட்ட யுத்த காலத்துடன்
தொடர்புபட்டவையாகும்.
அது தொடர்பில் நாங்கள் சிங்கள மொழியில் புத்தகம் ஒன்றை எழுதி
வெளியிட்டிருக்கின்றோம். அதனால் குர்ஆன் வசனங்கள் தொடர்பில்
தெளிவின்மை இருந்தால் அதுதொடர்பில் எம்மிடம் கேட்டிருந்தால்
தெளிவுபடுத்தியிருப்போம் என்றார்.
மாநாட்டு நிகழ்வுகள்
இலங்கையில் இனங்களுக்கிடையில் சமாதானம் சகவாழ்வு இடம்பெறுவதை உலக
நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
குறித்த மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
விசேட அதிதியாக உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் கலாநிதி முஹம்மத்
அப்துல் கரீம் அல் ஈஸா, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த மத விவகார
அமைச்சர் காமினி ஜய விக்ரம பெரேரா, இந்து மத விவகார அமைச்சர் மனோ
கணேசன், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
நிகழ்வின் வரவேற்புரையை நிகழ்த்திய மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம்.
முஸம்மில் தெரிவிக்கையில் இந்த நாடு பௌத்த நாடு என்பதை நாங்கள்
அனைவரும் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் ஏனைய
மத்தவர்கள் தாங்கள் பின்பற்றும் மதத்தை பின்பற்றி நடக்க சகல உரிமையும்
வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து அமரபுர கொடகொட தர்மாவங்ச மகாநாயக்க தேரர் ஆசியுரை
வழங்கும்போது, அடிப்படைவாதிகள் குழப்பங்களை ஏற்படுத்தினாலும்
மகாநாயக்க தேரர்கள் அதற்கு அனுசரணை வழங்கக்கூடாது.
அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும் இருக்கின்றனர். அதனால்
சிங்கள மக்களால் மாத்திரம் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது, அனைத்து
இன மக்களும் இதற்காக ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அத்துடன்
சிங்கள முஸ்லிம் மக்களிடையே வரலாற்று காலம் முதல் இருந்து வந்த
ஒற்றுமையை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
என்றார்.
அதனைத்தொடர்ந்து இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களும்
தங்களின் ஆசியை தெரிவித்தனர். அத்துடன் இன ஒற்றுமையை வலியுறுத்தும்
பல கலாசார நிகழ்வுகளும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
இந் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்ட உலக முஸ்லிம் லீக்கின்
செயலாளர் நாயகத்தின் விசேட உரை இடம்பெற்றபின்னர் உயிர்த்த ஞாயிறு
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று அவ்வமைப்பினால் 5
மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன்
ஜனாதிபதிக்கு விசேட அதிதி நினைவுச்சின்னமும் வழங்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவின் உரையை
இடம்பெற்றதை தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் மாநாடு நிறைவுக்கு வந்தது.
இம் மாநாட்டின் இறுதியில் ஓமல்பே சோபித தேரரிடம் அல்குர்ஆனின் சிங்கள
பிரதி, உலமா சபை பிரதிநிதிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.எம்.வஸீம்

0 comments:
Post a Comment