எஸ்.றிபான் -
கோத்தபாய
ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று கடந்த 25ஆம் திகதியுடன் நூறு நாட்கள்
பூர்த்தியாகியுள்ளது. அவர் பதவியேற்ற காலம் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளார். அவை மக்கள் மத்தியில் ஒரு வகையான ஈர்ப்பினை
ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், இன்றைய ஆட்சியாளர் குறித்து
சிறுபான்மையினரிடையே குறிப்பாக முஸ்லிம்களிடையே காணப்பட்ட அச்ச உணர்வு
நீங்கி இருந்தாலும், ஒரு சில சம்பவங்கள் முஸ்லிம்களினால் அச்ச
உணர்விலிருந்து முற்றாக விலகிக் கொள்ள முடியாததாகவே இருக்கின்றது.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட போதிலும், பௌத்த
இனவாதிகளின் ஆதிக்கமும், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளும்
முற்றாக முடியவில்லை. முஸ்லிம்களின் மீது இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள்
இந்த நூறு நாள் ஆட்சியில் நடைபெறாது இருந்தாலும், பள்ளிவாசல்
வளாகத்திற்குள்ளும், பள்ளிவாசலுக்குள்ளும் புத்தர் சிலையை வைக்கும் நிலை
இதற்கு முன்னர் காணப்படவில்லை. ஆதலால், இன்றைய ஆட்சியிலும் முஸ்லிம்களினால்
நிம்மதியாக வாழ முடியுமா என்ற அச்சமும், சந்தேகமும் முஸ்லிம்களிடையே
ஏற்படுவதனை யாரும் தவறாக கணித்து விடமுடியாது.
நீடிக்கும் அச்சம்
இலங்கை
முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஒரு போதும் நாட்டின் இறைமைக்கு எதிராக
செயற்பட்டதில்லை. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்று
திட்டமிட்டதுமில்லை. அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுக்கு ஆதரவாகச்
செயற்பட்டதுமில்லை. நாங்கள் இந்த நாட்டின் உண்மை விசுவாசிகள் என்று
சொல்லிக் கொள்வதில் முஸ்லிம்கள் ஒரு போதும் தலைக் குனிவை அடைந்ததில்லை.
ஆயினும், 2019 ஏப்ரல் 21இல் சஹ்ரான் குழுவினர் மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்
முஸ்லிம்களை தலை குனியச் செய்ததென்றே கூற வேண்டும்.
இத்ததாக்குதல்தாரிகளுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரவாகச்
செயற்பட்டதுமில்லை. இக்குழுவினருக்கு எதிராகவே முஸ்லிம்கள்
செயற்பட்டார்கள். இதனால்தான், சஹ்ரான் குழுவினரை முற்றாக அழிக்கவும், கைது
செய்து நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்பு தரப்பினருக்கு முடிந்தது.
இலங்கையில் ஜே.வி.பியினரின் ஆயுதப் போராட்டமும், தமிழ்க் குழுக்களின்
ஆயுதப் போராட்டமும் ஒரு குறுகிய காலத்திற்குள் ஒழிக்கப்படவில்லை. சஹ்ரான்
குழுவினரின் ஆயுத போராட்டமே மிகவும் குறுகிய நாட்களில் ஒழிக்கப்பட்டன.
இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஆயுதக் குழுவினருக்கு ஆதரவில்லாது
இருந்தமையே பிரதான காரணமாகம்.
இவ்வாறு
முஸ்லிம்கள் செயற்பட்ட போதிலும், முஸ்லிம்களின் மீதான சந்தேகப் பார்வை
நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. முஸ்லிம்களின் மீதான சந்தேகப் பார்வை
என்பது அரசியல் தேவைக்காகவே பெரும்;பான்மையின மக்களிடையே முன்
வைக்கப்படுகின்றன. இதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று இயங்கிக்
கொண்டிருக்கும் இனவாத அமைப்புக்களும், தனி நபர்களும், தேரர்களும்,
அரசியல்வாதிகளும் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே
வேளை, முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக அடாவடி நடவடிக்கைளை மேற்கொண்ட
சக்திகளுக்கு எதிராகவே துணிச்சலுடன் செயற்பட்டும் உள்ளார்கள். வடக்கு,
கிழக்கு முஸ்லிம்களின் மீது விடுதலைப் புலிகளும், ஏனைய தமிழ் ஆயுதக்
குழுக்களும் தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை
தங்களின் ஆயுதங்களினால் அடக்கியாள நினைத்தார்கள். வடமாகாணத்திலிருந்தும்,
கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் இருந்தும் முஸ்லிம்களை விடுதலைப்
புலிகள் விரட்டினார்கள். முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை சூறையாடிக்
கொண்டார்கள். இதனால், முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதொரு
நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள்
தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையே காணப்பட்ட உறவில் விரிசல்களையும்,
சந்தேகங்களையும் ஏற்படுத்தி இருந்தது. இன்று வரைக்கும் அச்சந்தேகங்கள்
நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
விடுதலைப்
புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட போது, முஸ்லிம்கள் அரசாங்கம்
தங்களை பாதுகாக்கும் என்று நம்பிக்கை கொண்டார்கள். ஆனால், முஸ்லிம்களிடம்
காணப்பட்ட இந்த நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆட்சியாளர்கள்
செயற்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். 2009ஆம் ஆண்டு விடுதலைப்
புலிகளை இராணுவத்தினர் தோற்கடித்த போது, முஸ்லிம்களும்
மகிழ்ச்சியடைந்தார்கள். வடக்கு, கிழக்கு பூமியில் எங்களினால் நிம்மதியாக
வாழ முடியுமென்று முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால், வடக்கு, கிழக்கு
மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழ முடியாத
சூழலே ஏற்பட்டது. பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் கலாசார விவகாரங்களில்
தலையீடுகளை மேற்கொண்டார்கள். பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் வர்த்தக
நிலையங்களையும் தாக்கினார்கள். பள்ளிவாசல்களின் உள்ளே பன்றியின் இரத்தம்
மற்றும் மாமிசத்தை வீசினார்கள்;, ஹலால் உணவுக்கு தடை வேண்டுமென்று
போராட்டங்களை மேற்கொண்டார்கள். முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா மற்றும்
புர்காவுக்கு தடைகளை போட வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
முஸ்லிம்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள்.
பள்ளிவாசல்களிலும், குர்ஆன் மத்ரஸாக்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். மத்ரஸாக்களை தடை
செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இவையாவும்
ஆட்சியாளர்களின் அனுசரனையுடனே நடைபெற்றன.
பௌத்த
இனவாதிகளின் இத்தகைய நடவடிக்கைகளினால் முழு இலங்கையிலும் வாழும்
முஸ்லிம்கள் அச்சமடைந்தார்கள். இந்நிலை இன்னும் மோசமாகியது.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் ஓங்கி வளர்ந்து கொண்டிருந்த பௌத்த இனவாத
அமைப்புக்கள், களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, தர்காநகர் போன்ற
பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும்
தாக்கினார்கள். இதனால், முஸ்லிம்கள் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் மீது
வெறுப்புக் கொண்டார்கள். ஆட்சி மாற்றமே நிம்மதியைக் கொடுக்கும் என்று
நம்பினார்கள். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்
கட்சிகள் மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துக் கொண்டிருந்த
வேளையில், முஸ்லிம்கள் தாமாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு
வழங்குவதற்கு தீர்மானித்தார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட
போதிலும், முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவர்களி;டம்
காணப்பட்ட அச்சம் மேலும் அதிகரித்தது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட
மைத்திரிபால சிறிவேனவும்;, பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ரணில்
விக்கிரமசிங்கவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. இவர்கள்
முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் நன்றி கெட்டதனமாகவே செயற்பட்டார்கள்.
அம்பாரை, கண்டி, திகன, கிந்தோட்ட என பல இடங்களில் முஸ்லிம்களின் மீது
தாக்குதல்கள் நடைபெற்றன. பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் சொத்துக்களும்
அழிக்கப்பட்டன. உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன. அரசாங்கம் வெறும்
பொம்மையாகவே இருந்தது. இதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களின்
பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்தார்கள்.
இதே வேளை, முஸ்லிம்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மஹிந்தராஜபக்ஷ ஆதரவு
அமைப்புக்களே மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் அரசியல்வாதிகளினால்
தெரிவிக்கப்பட்டன.
முஸ்லிம்களின் பாதுகாப்பு
இத்தகைய
பின்னணியில் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. முஸ்லிம்களில்
பெரும்பான்மையினர் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி வந்தால், மேலும் ஆபத்துக்கள்
ஏற்படலாமென்று அச்சமடைந்தார்கள். முஸ்லிம்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்த
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வர் சஜித்தை ஆதரிப்பதற்கு
முடிவு செய்தார்கள். முஸ்லிம்களின் இந்த முடிவுக்கு கடந்த கால அனுபவமே
காரணமாகும். அதனால், புதியவர் ஆட்சியின் தலைவராக வந்தால் தங்கள் மீதான
பௌத்த இனவாதிகளின் தாக்குதல்கள் நிறுத்தப்படுமென்று முஸ்லிம்கள்
நம்பினார்கள்.
ஆயினும், ஜனாதிபதித்
தேர்தலில் பௌத்த இனவாத அமைப்புக்கள் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்தன.
சிங்கள மக்களிடையே மிகவும் மோசமான வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக்
கருத்துக்கள் பரப்புரை செய்யப்பட்டன. இனவாத பரப்புரைக்கு ஏப்ரல் 21இல்
நடைபெற்ற தற்கொலை தாக்குதல் மிகவும் துணையாக இருந்தது.
ஜனாதிபதித்
தேர்தலில் பௌத்த இனவாதிகளின் பிரச்சாரம் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்கு
துணை செய்தது. கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றதும், சில பௌத்த இனவாத
அமைப்புக்கள் நாட்டிற்கு சிறந்த பௌத்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார்.
அதனால் தங்களின் அமைப்பை கலைத்து விடுவதாக அறிவித்தன. ஜனாதிபதி கோத்தபாய
ராஜபக்ஷவின் அதிரடி நடவடிக்கைகள் முஸ்லிம்கள் உட்பட நாட்டு மக்களை
கவர்ந்தன. சிறந்ததொரு ஆட்சி நாட்டில் ஏற்படும் என்று மக்கள் நம்பினார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிராக எந்தத் தாக்குதல் நடவடிக்கைகளும் நடைபெறவில்லை.
இதனால், பொதுஜன பெரமுனவில் உள்ள முஸ்லிம் பிரமுகர்களும், அக்கட்சியின்
ஆதரவாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களை புகழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கு
பாதுகாப்பை இன்றைய ஆட்சியாளர்களினால்தான் உறுதி செய்ய முடியுமென்று
தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால், ஒரு குறுகிய கால பகுதியிக்குள்
முஸ்லிம்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதனை வைத்துக் கொண்டு ஒரு
முடிவுக்கு வர முடியுமா என்பதுதான் கடந்த கால அனுபவமாகும்.
2015ஆம்
ஆண்டு ஆட்சி மாறிய போதும், அவ்வாட்சியின் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் மீதான
அனைத்து எதிர் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன. இதனால், முஸ்லிம்கள்
ஆட்சி மாற்றம் பாதுகாப்பை தந்துள்ளதென்று நம்பினார்கள். முஸ்லிம்களின் மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தவர் என்ற
சந்தேகத்தின் பேரில் அமீத் வீரசிங்க கைது செய்யப்பட்டார். இதனால்,
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அதிக நம்பிக்கை கொண்டார்கள்.
என்ற போதிலும், முஸ்லிம்களின் இந்த நம்பிக்கை நீடிக்கவில்லை.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியை விடவும் மோசமாக முஸ்லிம்களின் மிது பௌத்த
இனவாதிகள் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். கண்டி, திகன பகுதியில்
மூன்று நாட்களாக முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. பாதுகாப்பு
தரப்பு அத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்யவில்லை.
தாக்குதல்தாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்று நின்று
கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு முஸ்லிம்களின்
மீது மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும், அதனை விட மோசமாக மைத்திரிபால
சிறிசேனவின் ஆட்சியிலும் தாக்குதல்கள் நடைபெற்ற போதிலும், பள்ளிவாசல்கள்
தாக்கப்பட்ட போதிலும், பள்ளிவாசல்களுக்குள் புத்தர் சிலை வைக்கப்படவில்லை.
மஹர பள்ளிவாசலில் புத்தர் சிலை
புதிய
ஆட்சியாளர்களை பெரும்பான்மையின முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. நாம்
ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு
வாக்களித்திருக்க வேண்டுமென்ற கவலை முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்பட்ட
நிலையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சில சம்பவங்கள் முஸ்லிம்களிடையே
ஏற்கனவே இருந்த அச்சநிலையை மேலும் வலுப்படுத்தும் நிலையை
ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு – கண்டி
வீதியில் கேகாலை மாவட்டத்தில் நெலுந்தெனிய உடுகும்புறவில் உள்ள நூர்
ஜும்ஆபள்ளிவாசல் வளாகத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலை ஒன்று கடந்த 2019
டிசம்பர் 29ஆம் திகதி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் பொலிஸ் மற்றும்
நீதிமன்றம் வரை சென்ற போதிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சட்ட
விரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் நோக்கில் வரகாபொல பொலிஸார்
சுமூகமாக தீர்த்து வைப்பதறக முயற்சிகளை எடுத்துக் கொண்டனர். அதற்கு
பெரும்பான்மையினத்தினர் இணங்கவில்லை. அவர்களின் சார்பில் பொலிஸார்
முன்னிலையில் ஆஜராகிய பௌத்த மதகுரு புத்தர் சிலையை பள்ளிவாசல்
வளாகத்திலிருந்து அகற்றுவதற்கு இணங்கவில்லை. இதனால், இவ்விவகாரம்
நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில் நீதியை எதிர்பார்த்தால் ஒரு
குழப்பமான சூழல் ஏற்படலாமென்று கருதிய நூர் ஜும்ஆபள்ளிவாசல் நிர்வாகிகள்
ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தார்கள். அதற்கு அமைய பள்ளிவாசல் வளாகத்தில்
வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதில்லை என்றும், புத்தர்
சிலைக்கும், பள்ளிவாசல் வளாகத்திற்குமிடையே மதில் சுவர் ஒன்றினை
ஏற்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
முஸ்லிம்கள்
அங்கு காணப்பட்ட சூழலைக் கருத்திற் கொண்டு இணக்கிக் கொண்டார்களே அன்றி,
அதனை நீதியாகக் கொள்ள முடியாது. இவ்விவகாரத்தில் அரசாங்கத்தினர் எந்தக்
கருத்துக்களையும் வெளியிடவில்லை. எதுவும் தெரியாதவர்கள் போலவே இருந்து
கொண்டார்கள். முஸ்லிம்கள் புத்தர் சிலை விவகாரத்தில் விட்டுக் கொடுப்பை
செய்துள்ளார்கள். ஆயினும், இத்துடன் இப்பிரச்சினை முடிவடைந்து விட்டதென்று
கருத முடியாது. அதற்குரிய எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. இதற்கு முதல்
திடீரென்று புத்தர் சிலைகள் வைக்கப்பட்டாலும், அவை பள்ளிவாசல்
வளாகத்திற்குள் வைக்கப்படவில்லை. அதனால், நெலுந்தெனிய உடுகும்புறவில்
வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் முஸ்லிம்களிடையே ஆட்சியாளர்கள்
குறித்து மீண்டும் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இதே வேளை, இவ்விவகாரம்
குறித்து எதிர்கட்சியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் கூட வாய்
திறக்கவில்லை. மேலும், எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் கட்சிகளும்,
முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக சுமாராக குரல் கொடுத்த
போதிலும், ஆட்சியாளர்களை ஆதரித்துக கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்
கட்சிகளும், தலைவர்களும் வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்கு இந்த
ஆட்சியில்தான் பாதுகாப்பு உள்ளதென்று குரல் கொடுத்தவர்கள், இவ்விவகாரத்தில்
மௌனத்தை பேணிக் கொண்டார்கள்.
இந்நிலையில்
கடந்த வாரம் மஹர தேர்தல் தொகுதியில் ராகமை எனும் அமைந்துள்ள மஹர
சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் புத்தர் சிலை ஒன்று
வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் முஸ்லிம்களிடையே காணப்பட்ட அச்ச நிலையை
மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. சுமார் 100 வருடங்களுக்கு முன்னர்
அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த இப்பள்ளிவாசல் 1967ஆம் ஆண்டு முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட
பள்ளிவாசல் சிறைச்சாலையின் வளாகத்தில் அமைந்துள்ள போதிலும், பள்ளிவாசலின்
நிர்வாக நடவடிக்கைகளையும், பராமரிப்பையும் இப்பிரதேசத்தில் வாழும்
முஸ்லிம்களே மேற்கொண்டு வந்துள்ளார்கள். இப்பிரதேசத்தில் உள்ள 250 முஸ்லிம்
குடும்பங்கள் தங்களின் தொழுகைகளை இப்பள்ளிவாசலிலே மேற்கொண்டுள்ளார்கள்.
ஏப்ரல்
21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் இப்பள்ளிவாசலில் தொழுகை
நடத்துவது தடை செய்யப்பட்டது. மேலும், இப்பள்ளிவாசலில் உள்ள ஜனாஸாவுக்கு
பயன்படுத்தப்படும் சந்தூக்கு, குளிப்பாட்டும் கட்டில் ஆகியவற்றையும்
பயன்படுத்துவதற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின்
காலத்தில் விதிக்கப்பட்டிருந்த இத்தடையை அகற்றுவதற்கு அன்றைய அரசாங்கமோ,
முஸ்லிம் அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ நடவடிக்கைகளை
எடுக்கவில்லை.
இத்தiடைகளினால் இப்பிரதேச
முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கும், ஜனாஸாக்களை கையாள்வதிலும் பலத்த
சிரமங்களை எதிர்கொண்டார்கள். இதே வேளை, மஹர சிறைச்சாலையின் அதிகாரிகள்
இப்பள்ளிவாசலை தமது ஓய்வு இடமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். இந்தப்
பின்னணியில் கடந்த 05ஆம் திகதி பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை
வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின்
ஓய்வறையாக பயன்படுத்துவதற்கும் திர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பிரதேச
முஸ்லிம்கள் மாத்திரமின்றி முஸ்லிம்கள்; மிகப் பெரிய அநீதியொன்று
நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, இதுபற்றி
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுக்கும்;
முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு சமிக்கையாகவே முஸ்லிம்களினால் கருதப்படுகின்றது. கடந்த ஆட்சிக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமாக தாக்குதல் நடவடிக்கைகளை பௌத்த இனவாhதிகள் மேற்கொண்டார்கள். ஆனால், அவர்கள் பள்ளிவாசல் வளாகத்திலும், பள்ளிவாசலுக்குள்ளும் புத்தர் சிலையை வைக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு தரப்பினரே பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை வைத்து, அதனை தங்களின் ஓய்வறையாக மாற்றி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஆதலால், ஆட்சி மாறினாலும் தங்களின் மீதான கெடுபிடிகளும், புறக்கணிப்புக்களும் குறையாது என்ற நிலையை முஸ்லிம்கள் அடைந்துள்ளார்கள். ஆதலால், இதற்குரிய நடவடிக்கைகளை இன்றைய ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டுமென்பதே முஸ்லிம்களின் விருப்பமாகும். இவ்விவகாரத்திற்கு எடுக்கப்படும் நடவடிக்கைதான் முஸ்லிம்களை மாத்திரமின்றி ஏனைய சிறுபான்மையினரையும் ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும். அதனால், இவ்விவகாரம் ஆட்சியாளர்களுக்கு ஒரு சத்திய சோதனையாகும்.
Vidivelli 28.02.2020
0 comments:
Post a Comment