• Latest News

    April 13, 2021

    தலைவிதி மாறுமா?

    எம்.எஸ்.தீன் -

    இலங்கை முஸ்லிம்களின் குரல் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியவற்றின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்புகளை காண முடியாதுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உட்பட இன்னும் சில அரசியல் கட்சிகள் தங்களை முஸ்லிம்களின் அடையாளமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன முஸ்லிம்களின் வாக்குகளினால்தான் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
     
    ஆனால், இக்கட்சிகள் முஸ்லிம்களின் குரலாக அரிதாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம்களின் காவலனாக இக்கட்சிகள் தங்களை காட்டிக் கொண்டாலும், தேர்தலின் பின்னர் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும், முஸ்லிம்களின் குரலாக செயற்படுவதிலும் தவறியுள்ளன. முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலையையும், சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற போது இற்றைக்கு 30 வருடங்களுக்கு முதல் இருந்த நிலையை விடவும் மோசமான நிலையை அடைந்துள்ளமை கசப்பான உண்மையாகும். முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நடவடிக்கைகளை தேசிய கட்சிகளின் மூலமாக மேற்கொண்ட போது முஸ்லிம்களுக்கு இருந்த பாதுகாப்பு தற்போது இல்லாதுள்ளது. இதற்கு பௌத்த இனவாத போக்கின் ஆதிக்கம் ஆட்சியாளர்கள் வரை வியாபித்துள்ளமை ஒரு காரணமாகும். அத்துடன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றொரு காரணமாகும்.

    முஸ்லிம் அமைப்புக்கள்
    **************************
    முஸ்லிம் அமைப்புக்களில் அதிகமானவை அரசியல்வாதிகளின் கைப்பாவை போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இனவாதிகளினாலும், அதனோடு தொடர்புடைய அரசியல்வாதிகளினாலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் விவகாரங்களில் மூக்கை நுளைத்துக் கொள்வதனை தவிர்த்துக் கொள்வதனை ஒரு கொள்கையாகவே பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. ரமழான் காலங்களிலும், அனர்த்தங்கள் ஏற்படும் போதும் உலர் உணவுகள் போன்றவற்றை நிவாரணமாக வழங்குவதனை மாத்திரமே சமூகப் பணியாக செய்து கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும், ஆட்சியாளர்களினதும் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்பது கூடக் கிடையாது.

    இவ்வாறு செயற்படும் முஸ்லிம் அமைப்புக்கள் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் அளவு கடந்து புகழ்ந்து கொள்வதில் போட்டி அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல்வாதிகளையும், முஸ்லிம் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி சமூகத்திற்குரிய அரசியலைச் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில்லை. அரசியலுக்கும் தங்களின் அமைப்புக்கும் தொடர்புகள் கிடையாதென்று ஒதுங்கிக் கொள்கின்றன. ஒதுங்கிக் கொள்ளும் இந்த அமைப்புக்கள் எதற்காக அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் அளவு கடந்து புகழ வேண்டும். அதற்குரிய தேவைகள் என்னவென்று கேட்கின்றோம். முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் போன்று முஸ்லிம் அமைப்புக்களுக்கும் சமூக விவகாரங்களில் அதிக பொறுப்புக்கள் உள்ளன. அவற்றை நிறைவேற்றாது பேரளவில் முஸ்லிம் அமைப்புக்களாக இருக்க முடியாது.

    முஸ்லிம் அமைப்புக்களை தவிர ஏனைய சமூகங்களில் உள்ள அமைப்புக்கள் அரசியல் கட்சிகளையும், ஆட்சியாளர்களையும் வழிப்படுத்திக் கொண்டிருப்பதனையும், அரசியல்வாதிகளின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் உள்ளன. யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த அமைப்புக்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் நிலைப்பாடு காணப்படுகின்றன.

    ஆகவே, முஸ்லிம் அமைப்புக்கள் தங்களின் நடவடிக்கைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளாது விரிவுபடுத்த வேண்டும். சமூகத்திற்கு தீங்கான விடயங்களை தடுப்பதற்குரிய அழுத்தங்களை கொடுக்கும் சக்தியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நாட்டில் ஏற்பட்டுள்ள பௌத்த இனவாதிகளின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளினால் முஸ்லிம் அமைப்புக்கள் அச்சமடைந்துள்ளன. ஆயினும், நீடித்த அச்சம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்புக்களையே கொண்டுவரும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

    போட்டி அரசியல்

    ******************
    முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகளை நோக்கும் போது சமூகத்திற்குரிய அரசியலைச் செய்யாது, முகவர் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றன. இதுதான் முஸ்லிம் கட்சிகளிடம் காணப்படுகின்ற பிரதான ஒற்றுமையாகும். ஆனால், முகவர் அரசியலால் சமூகம் நன்மைகளை விடவும் தீமைகளையே அனுபவித்துள்ளது. முகவர் அரசியலை மேற்கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பணக்காரர்களாக கொழுத்துள்ளார்கள்.

    முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருப்போமென்று தோற்றம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன முகவர் அரசியலைச் செய்வதில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இக்கட்சிகளின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஆட்சியாளர்களுக்கு குடை பிடித்துக் கொள்வதிலேயே அதிக காலத்தை கழித்துள்ளமையை கண்டு கொள்ளலாம்.
    சமூக விவகாரங்களில் ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு பதிலாக தாம் சார்ந்துள்ள பேரினவாதக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே செயற்படுகின்றன. ஆளுங் கட்சியில் இருந்தால் ஒரு விதமாகவும், எதிர்க்கட்சியில் இருந்தால் வேறு விதமாகவும் செயற்படுகின்றன.

    கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன ஆளுந் தரப்பாகவே இருந்தன. இதன்போது முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இக்கட்சிகள் இத்தாக்குதல்கள் குறித்து ஆட்சியாளர்களை நொந்து கொள்ளவில்லை. அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை பௌத்த இனவாதிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தவறி விட்டதாக குற்றம் சுமத்தவில்லை. ஆட்சியாளர்களை பாதுகாத்துக் கொள்ளும் அறிக்கைகளையே விடுத்தார்கள்.
    இதே வேளை, இக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் வசைபாடுவதிலும், அடுத்த கட்சியின் மீது குற்றம் சுமத்தும் இழிநிலை போட்டி அரசியலை இன்று வரைக்கும் செய்து கொண்டிருக்கின்றனர். போட்டி அரசியல் காரணமாக முஸ்லிம் சமூகத்தை கட்சிவாரியாக பிரித்து வைத்துள்ளார்கள். தாங்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் குரல் என்றும், பாதுகாவலன் என்றும் ஆதரவளர்களை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

    முஸ்லிம் அரசியலில் காணப்படும் இந்த போட்டி நிலை மாற்றப்பட்டு, சமூகத்திற்கான அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்கும், அவற்றைப் பெற்றுக் கொள்வதற்குரிய பொறிமுறையை வகுக்க முடியும்.

    ஓற்றுமைக்கு மறுப்பு
    **********************
    போட்டி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் அரசியல் பலத்தை மலினப்படுத்தியுள்ளன. இதற்கு அக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளிடம் காணப்படுகின்ற ஆளுந் தரப்பு மோகமே பிரதான காரணமாகும். ஆளுந் தரப்பினரின் கடைக்கண் பார்வையாவது தங்கள் மீது இருக்க வேண்டுமென்பதற்காக ஆளுந் தரப்பினருக்கு ஒத்தழைப்பு வழங்கும் ஒரு நிலைப்பாட்டை முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் தலைவர்கள் வரை கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். நிபந்தனைகள் இல்லாமலேயே ஆளுந் தரப்பை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆளுந் தரப்பு மோகம் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக பிளவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுவிடும். அதனால் முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக ஒற்றுமைப்படுதல் அவசியமென்று பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்ட போதிலும், முஸ்லிம் கட்சிகள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்பது தம்மை அழித்துக் கொள்வதற்குரிய ஒரு பொறி என்று ஒவ்வொரு கட்சியும் கணப்பிட்டுக் கொண்டன. இக்கணிப்பீட்டின் பின்னணியில் சமூகத்தின் நலனை விடவும் கட்சிகளினதும், தலைவர்களினதும் நலன்களே இருந்தன.

    முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள முஸ்லிம்கள் பற்றிய தவறான பார்வைகள், பேரினவாதக் கட்சிகளின் அரசியல் தேவைக்காக பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மதவிழும்மியங்கள், கலாசார நடவடிக்கைகள் பௌத்த இனவாத புயலில் சிக்கியுள்ளன. இவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், அரசியல் பலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கும் முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும் ஒற்றுமைப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயினும், கட்சிகளும், அமைப்புக்களும் அவற்றிக்கு தயாரில்லாத நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.

    முஸ்லிம் சமூகம் மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள தற்போதைய சூழலில் கூட முஸ்லிம் கட்சிகள் சமூக அரசியலை புறக்கணித்து கட்சி அரசியலையே செய்து கொண்டிருக்கின்றன.

    அரசாங்கத்தின் முகவர்
    *************************
    முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பது அரசாங்கத்தின் முகவர்களாக இருப்பதும் ஓரு காரணமாகும். 2010ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத அமைப்புக்கள் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் செயற்பட்ட போது முஸ்லிம் கட்சிகள் யாவும் அரசாங்கத்தின் தரப்பினராகவும், அமைச்சர் பதவிகளில் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள்.

    அதே போன்று 2015ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் கூட முஸ்லிம்களின் மீது மிகவும் மோசமான தாக்குதல்கள் பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும், கண்டனத்தையும் மேற்கொள்ளவில்லை. 

    முஸ்லிம்களின் இந்த அவல நிலையை சர்வதேசத்திடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் முறையிடவில்லை. மாறாக அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். மனித உரிமைப் பேரவையில் மஹிந்தராஜபக்ஸவின் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுக்கும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டன. அதுமட்டுமன்றி முஸ்லிம் பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

    இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின் எதிர்காலம் எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்ளவில்லை. பௌத்த இனவாத அமைப்புக்களை பேரினவாதக் கட்சிகள் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதனையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவற்றின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்குரிய அழுத்தங்களைக் கூட அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை. மாறாக பௌத்த இனவாத அமைப்புக்களுக்கு கும்பிடு போட்டு தலைகுனியும் அடிமை நிலையை நோக்கி செல்வதற்குரிய வேலைகளையே முஸ்லிம் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்டனர்.

    2010ஆம் ஆண்டு முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதம் தமது கோரப்பற்களை பதித்த போது முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும் தமது எதிர்ப்புக்களை ஜனநாயக வழியில் காட்டியிருந்தால் பௌத்த இனவாத அமைப்புக்களுக்குரிய ஆட்சியாளர்களின் அனுசரணையை கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆளுந் தரப்பினர் அந்தஸ்தை துறந்து எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் ஆட்சியாளர்களை சிந்திக்கச் செய்திருக்கும். ஆனால், மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் கடைசி நிமிடம் வரை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

    இப்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் விவகாரங்களைப் பற்றி ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் அதிகம் பேசுகின்றார்கள். மாற்றுக் கட்சிகளின் சிங்கள மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்காக பேசுகின்றார்கள். இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்பினருக்கான தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக பேசாதிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தை கோடிகளுக்கு தாரைவார்த்துள்ளார்கள். 

    நிலையான கொள்கையின்மை
    ***********************************
    முஸ்லிம் கட்சிகளினதும், அமைப்புக்களினதும் நடவடிக்கைகள் மேற்கூறியவாறு இருப்பதற்கு நிலையான கொள்கைககள் இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கட்டும், முஸ்லிம்களின் பிரச்சினைளுக்குரிய தீர்வாக இருக்கட்டும், புதிய அரசியல் யாப்பு பற்றிய விடயமாக இருக்கட்டும் முஸ்லிம் கட்சிகளிடையே ஒருமித்த கருத்துக்கள் கிடையாது. அத்தோடு, முஸ்லிம் கட்சிகளுக்கு இவை பற்றிய தெளிவான கொள்கைகளும் கிடையாது. தான் சார்ந்துள்ள சமூகம் பற்றிய நிலையான கொள்கைகளில்லாது செயற்பட முடியாது. காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு செயற்படுவதே முஸ்லிம் கட்சிகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கொள்கையாக இருந்து வருகின்றது.

    தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்காக தாங்கள் கொண்டுள்ள கொள்கைகள் இவையென்று தெரிவித்துக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தேர்தல் முடிந்ததும் அவற்றை மறந்துவிடுவார்கள். முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராகவே தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றால் முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழ முடியாதென்று பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். இன்று அவர்கள் அனைவரும் இன்றைய ஆட்சியாளர்களின் கிளிப்பிள்ளைகள் போன்றுள்ளார்கள்.

    எனவே, முஸ்லிம்கள் ஒரு பெறுமதிமிக்க சமூகமாக மீண்டும் தலையெடுக்க வேண்டுமாயின் சமூகம் பற்றிய கரிசனையும், நிலையான கொள்கைளையும் கொண்ட தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும். 

    அப்போதுதான் முஸ்லிம் அரசியலை தூய்மைப்படுத்தலாம். முஸ்லிம்கள் தமது வாக்குகளினால் பிழையானவர்களை தெரிவு செய்தமையால் தலை நிமிர முடியாதுள்ளார்கள். தாம் தெரிவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் சமூகத்திற்காக குரல் கொடுப்பாரா? கோடிகளுக்கு சோரப்போய் அரசாங்கத்தின் முகவராக மாறிவிடுவாரா? போன்றவற்றின் மீது கவனம் செலுத்தி முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை. பிரதேசவாதத்திற்கும், பொருளுக்கும், கட்சிவாதத்திற்கும், போலிப் பிரசாங்களுக்கும் ஆளாகி முஸ்லிம் சமூகத்தை சந்தி சிரிக்க வைத்துள்ளார்கள். முஸ்லிம்களின் இன்றைய நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் சமூகம் பற்றிய தெளிவானதொரு பார்வை ஒவ்வொரு தனிநபருக்கும் வருதல் வேண்டும். அதற்குரிய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை செய்வதற்கு எடுக்கும் காலதாமதம் சமூகத்தின் எதிர்காலத்தை மேலும் சிதைத்துவிடும். ஒரு சமூகம் தமது தலைவிதியை மாற்றியமைப்பதற்கு முயற்சிகளை எடுக்காத வரை அச்சமூகத்திற்கு விடிவு காலம் தோன்றாது என்பதே இறை நியதியாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைவிதி மாறுமா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top