கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்துள்ள 48 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, இன்று (08) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் பல தடவைகள் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
நியமனத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் 6 வருடங்களுக்கு மேல் ஒவ்வொரு நாளும் இந்த நியமனத்திற்காக காத்திருந்ததாகவும், இந்த நியமனம் எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
இதன் போது ஆசிரியர்கள் கருத்து வெளியிடுகையில், “எமக்கு பின்னர் ஆசிரியர்
பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கூட நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எமது நியமனம் குறித்து நாம் கடந்த கால ஆளுநர்கள், அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு வெற்றி பெற்றும் எமக்கு நியமனம் வழங்கப்படுவில்லை. தொடர்ந்து இழுத்தடிப்புகள் இடம்பெற்று வந்தது. கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு அவர் நியமனங்களை வழங்கியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த எமது குடும்பம் இந்த நியமனத்தின் மூலம் இனி ஓரளவு மூச்சுவிடும். இந்த நியமனம் எமது வாழ்க்கைக்கு அர்த்தம் பெற்று தந்துள்ளது. எமக்காக கடவுளை வணங்கும் போது இனிமேல் ஆளுநருக்காகவும் சேர்த்து வழிபடுவேன்" என தெரிவித்தார்.”இதேவேளை, மற்றும் ஒருவர் கருத்து வெளியிடுகையில், "ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்ததுடன், நீண்ட காலமாக எமக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தது. தனது மகன் தனக்கு sweets (இனிப்புகளை) வாங்கித்தருமாறு அடிக்கடி கூறுவார். ஆனால், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக வாங்கிக்கொடுக்கவில்லை . இன்றைய தினம் நியமனம் கிடைத்துள்ளது மகிழ்சியுடன் வாங்கி செல்வேன்" என்றார்.




0 comments:
Post a Comment