• Latest News

    March 13, 2024

    அண்ணன் வழியில் தம்பியும்.....(வீரகேசரி 10.03.2024 கட்டுரை)


     

    அண்ணன் வழியில் தம்பியும்......

    *****************************
    எம்.எஸ்.தீன் -
    இலங்கையின் நிர்வாக சேவையில் சிரேஸ்ட உயர் அதிகாரிகள் பலர் முஸ்லிம்களிடையே இருக்கின்ற போதிலும் அவர்களை அமைச்சுக்களின் செயலாளர்களாகவோ, அரசாங்க அதிபராகவோ அரசாங்கம் நியமனம் செய்வதில்லை.

    அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதனால்தான் இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளுக்குரிய அந்தஸ்து வழங்கப்படாமைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் காரணமென்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
    இத்தகையதொரு பின்னணயில்தான் கிழக்கு மாகாணத்திலும் நிர்வாக சேவையில் உள்ள சிரேஸ்ட முஸ்லிம் அதிகாரிகளுக்கு அநீயாயம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
    அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் முதுநபீன் அட்டாளைச்சேனையில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது கிழக்கு மாகாணத்தில் நிர்வாக சேவையில் உள்ள சிரேஸ்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களை அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளுக்கு ஆளுநரினால் நியமனம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் முதுநபீனின் கருத்துக்கள் முஸ்லிம்களிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது வரைக்கும் பேசு பொருளாகி, விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் முதுநபீன் கருத்துக்கள் முஸ்லிம்களிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது வரைக்கும் கடும் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    இக்கேள்விக்கு பதிலளித்த முஷரப் நிர்வாக சேவையில் உள்ள முஸ்லிம் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதுடன், ஒரு சிலர் நிர்வாக சேவை சிரேஸ்ட அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயலாளர் பதவியை பெற்றுக் கொடுக்கலாமென்று ஒருவரை கொழும்புக்கு அழைத்துச் சென்ற போது அவருக்கு சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இரண்டு சதவீதம் கூட பேசுவதற்கு முடியாதவர் என்பதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
    அதனால் பொத்தாம்பொதுவில் முஸ்லிம்கள் புறக்கணிப்படுகின்றார்கள் என குற்றச்சாட்டுக்களை முன் வைக்க முடியாதென்ற கருத்துப்பட தெரிவித்திருந்தார்.
    பாராளுமன்ற உறுப்பினரின் இந்த பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற எடுகோளின் அடிப்படையில் பதிலளித்துள்ளார். ஆனால், நிர்வாக சேவையில் உள்ள சிரேஸ்ட முஸ்லிம் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பது நீண்ட கால உண்மையாகும்.
    ஆட்சியாளர்கள் தங்களின் இனவாத செயற்பாடு காரணமாகவும், அவர்களின் ஒரு சில திட்டமிட்ட நடவடிக்கைகளுக்காகவும் நிர்வாக சேவை உயர் பதவிகளை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு மறுத்தலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    ஆதலால், பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்காக முஸ்லிம்களில் உள்ள சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பிற மொழிகளிகளில் ஆற்றல் கிடையாது என்று தெரிவித்துள்ளாரே அல்லாமல் அதனை பொறுப்பு வாய்ந்த பதிலாகக் கொள்ள முடியாது. பொது வெளியில் சொல்லத்தக்க கருத்துமல்ல அது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    1981ஆம் ஆண்டு எம்.எம்.மக்பூல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். இன்றைய நிர்வாக சேவை முறைமையில் நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் அரசாங்க அதிபராவார். இவரை ஆயுதக் குழுவினர் 1988.01.22ஆம் திகதி தலைமன்னாரில் சுட்டுக் கொன்றனர். அக்காலப் பகுதியில் முஸ்லிம்களிடையே இருந்த பல சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை ஆயுதக் குழுவினர் சுட்டக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.
    அதன் பின்னர் சுமார் 30 வருடங்களின் பின்னர் 2018.07.06ஆம் திகதி ஐ.எம்.ஹனீபா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். ஆயினும், 2020.01.27ஆம் திகதி வரையும்தான் அவரால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக செயற்ட முடிந்தது.
    முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் அவரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் செய்தது. ஆகவே, முஸ்லிம்களில் தகுதியானவர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்குரிய உயர் பதவிகளை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் புறக்கணிப்பு செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாரை மாவட்டத்திற்கு இதுவரை முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்கவில்லை. ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதற்காக முஸ்லிம்களிடையே தகுதியானவர்கள் கிடையாதென்று எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் சொல்லிவிட முடியாது.
    அதே வேளை, கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு தகுதியான பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கும் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. அதனை பேணுவது இன்றைய ஆளுநருக்கு சிறப்பாக இருக்கும்.
    இதே வேளை, முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் நல்ல பரீட்சயம் இருப்பது கட்டாயமாகும். மறுபுறத்தில் பெரும்பான்மையினத்தில் நிர்வாக சேவையில் உயர்பதவிகளில் உள்ள எத்தனை பேருக்கு தமிழ் மொழி தெரியும். அதுமட்டுமன்றி எத்தனை பேருக்கு ஆங்கில மொழியில் நல்ல பர்pட்சயம் இருக்கின்றது என்ற கேள்விகள் உள்ளன. அவர்கள் பெரும்பான்மை இனத்தவர் என்பதால் உயர் பதவிகளில் அமர்வதில் நெருக்கடி காணப்படவில்லை என்பதே இலங்கையின் போக்காகும்.
    ஆதலால், பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் தமக்கு முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது எதிர்விளைவுகளை மனதிற் கொண்டு பதிலளிக்க வேண்டும். சில வேளைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் முஷரப்பின் மேற்படி பதிலை தங்களின் இனவாத நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கு ஆதாரமாகவும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
    மேலும், நிர்வாக சேவையில் உள்ள முஸ்லிம் உயர் அதிகாரிகளுக்கு இரண்டு சத வீதம் கூட பிற மொழிகளை கையாள்வது இயலாத காரியம் என்பது அவர்களை கொச்சைப்படுத்தும் ஒன்றாகும்.
    இதே வேளை, பாராளுமன்ற உறுப்பினர் முஷரப்பின் பொறுப்பற்ற கருத்தை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளையும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸரப் சிரேஸ்ட முஸ்லிம் உயர் அதிகாரிகளை கொச்சைப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை விமர்சனமாக்கி அவரை அரசியலிருந்து துடைத்தெறிவதற்கு முற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் புஹாரி முஷரப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென்றும் ஊடகங்களில் அறிக்கைவிடுத்துள்ளார்.
    அது ஒரு புறமிருக்க பாராளுமன்றத்தில் சுமார் 20 வருடங்கள் முதல் 30 வருடங்கள் வரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகள் என்னவென்று சொல்ல முடியுமா?
    முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாரை மாவட்டத்திற்கு முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டுமென்று கடந்த 40 வருடங்காக பேசப்படுகின்றது. இக்காலங்களில் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் பங்காளிகள், அமைச்சர்கள் என்றுதானே இருந்தார்கள். ஏன் அவர்களால்; முஸ்லிம் ஒருவரை அம்பாரை மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக நியமிக்க முடியவில்லை.
    அம்பாரை மாவட்டத்தில் கரையோர மாவட்டம் அமைய வேண்டுமென்று சொல்லிக் கொள்பவர்கள், அதனை தங்கள் கட்சியின் நீண்ட காலக் கோரிக்கை என்றும் தெரிவிக்கின்றார்கள்.
    ஆனால், தற்போது வரை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியாதுள்ளார்கள். ஆயினும் ஆட்சியாளர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றீர்கள்.
    கடந்த காலங்களில் சிரேஸ்ட நிர்வாக சேவை முஸ்லிம் அதிகாரிகளுக்குரிய உயர்பதவிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தால் இன்று இத்தகைய கேள்விகள் எழுந்திருக்காது.
    கடந்த காலங்களில் முஸ்லிம்களின் பல உரிமைகள் ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்டன. அப்போதெல்லாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
    கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்த நிலையிலும் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
    ஆகவே, மொத்தத்தில் அனைவரும் சமூக உணர்வு, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற சிந்தனை இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டு தங்களின் சுயதேவைகளை நிறைவு செய்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முஸரப்பும் விதிவிலக்கல்ல.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அண்ணன் வழியில் தம்பியும்.....(வீரகேசரி 10.03.2024 கட்டுரை) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top