• Latest News

    October 06, 2024

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி, பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவிப்பு

     இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

    இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.


    அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

    குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

    தான்தோன்றித் தனமாக தமிழரசுக் கட்சியின் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் கட்சியை பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் ஊடாக முழுச் செயற்பாடுகளையும் நிர்வகித்து வரும் சுமந்திரன் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது.
    இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் பல தியாகங்களாலும், வீரம் செறிந்த பல போராட்ட சரித்திரங்களாலும் உருவாக்கப்பட்டது.   2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியத் தலைவரின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த  வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.

    அந்த வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, தமிழரசுக் கட்சிகளின் தூண்களையும் வெளியேற்றி, மேலும் தென்னிலங்கையின் முகவர் அரசியல் செய்வதற்கு முற்படுகின்ற சுமந்திரனின் தான் தோன்றித் தனமான செயற்பாடு ஒட்டு மொத்த தமிழரசுக் கட்சியையும் அழிக்கும்.
    துரோகத்திற்கு நான் தயார் அல்ல..

    எனவே என்னை நேசிக்கும் யாழ்.கிளிநொச்சி தேர்தல் மாவட்டம், வடக்கு - கிழக்கு மக்களுக்கு நான் அறியத் தருவது என்னவென்று சொன்னால் வீரத்தின் பால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று சோர்விழந்து சோரம் போகின்ற ஒரு ஆபத்தான நிலையில் இருக்கின்ற படியினால் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நான் விலகுகின்றேன்.

    தமிழ் தேசிய விரோதிகளின் கைகளுக்குள் சிக்குண்ட தமிழரசு கட்சியில் தொடர்ந்தும் பயணிப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த முடிவு எட்டப்படுகிறது.

    தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டு தமிழரசு கட்சி சின்னாபின்னமாகி இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் பயணிக்க முடியாது.

    தேசியத்தை கண்முன்னாலே குழி தோண்டி புதைக்கின்ற செயற்பாடுகளுக்கு துணை போகின்ற வரலாற்று துரோகத்தை நான் செய்ய தயார் இல்லை என்பதால் தமிழரசு கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

    தமிழ் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்ட என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்குண்டான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்கு முடிவெடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி, பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top