(எஸ்.எம்.அறூஸ்)
இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த என்.எம்.ஆசீக் அவர்கள் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

நேற்று பிரதேச சபையில் உதவித்
தவிசாளருக்குரிய ஆவணங்களில் என்.எம்.ஆசீக் கையொப்பமிட்டதுடன் சபையில் கடமை
புரியும் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் சினேகபூர்வ சந்திப்பிலும்
பங்கேற்றார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர்களான தாஹீர், தாஹா செய்னுதீன், ஏ.மர்சுக், சஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இறக்காமம் பிரதேச சபைக்கு மூன்று தடவைகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட என்.எம்.ஆசீக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதும் இப்பிராந்தியத்தில் மட்டுமல்ல மாவட்ட மட்டத்திலும் பங்களிப்புச் செய்த ஒருவராவார்.
இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் என்.எம்.ஆசீக் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் கே.எல்.சமீம் ஆகியோரின் பெயர்கள் உதவித் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இங்கு மீறப்பட்டு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன். அதனால் சபையைவிட்டு வெளியேறுவதாக கே.எல்.சமீம் அவர்கள் உரையாற்றிவிட்டு சபையைவிட்டு வெளியேறினார்.
இதன் காரணமாக உதவித் தவிசாளருக்கு போட்டியில்லாததன் காரணத்தினால் ஏகமனதாக என்.எம்.ஆசீக் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.முஸ்மி தவிசாளராகவும், அதேகட்சியைச் சேர்ந்த என்.எம்.ஆசீக் உதவித் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளராகவும், உதவித் தவிசாளராகவும் இளம் வயதைக் கொண்ட இருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இறக்காமத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனர்.
கடந்த மூன்று தடவைகள் இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினராக செயல்பட்ட என்.எம்.ஆசீக் தனது சொந்த நிதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னடுத்துள்ளதுடன் சமூக ரீதியான செயல்பாடுகளையும் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் உடனடியாக அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நிசாம் காரியப்பரின் அறிவிப்பு தொடர்பில் உதவித் தவிசாளர் என்.எம்.ஆசீக் அவர்களிடம் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்,
நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரன்தான் அதில் மாற்றுக்கருத்தில்லை. கட்சியினதும் தலைவரினதும் விசுவாசியாகவே எனது பயணத்தைத் தொடர்கின்றேன். கட்சியின் முடிவை மதித்து எம்.எல்.முஸ்மி அவர்களை வழிமொழிந்து தவிசாளராக தெரிவு செய்துள்ளோம். அதேபோன்றுதான் என்னை உதவித் தவிசாளராக தெரிவு செய்வதில் தவிசாளர் முஸ்மி உட்பட மூன்று உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர். இவ்வாறு இருக்கின்ற நிலையில் நான் கட்சிக்கு எதிராக செயற்பட்டேன் என்பது பிழையான கருத்தாகும்.
இறக்காமம் பிரதேச சபைக்குட்ட சகல கிராமங்களினதும் அபிவிருத்திக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன். இதற்கு எமது கட்சியின் தேசியத் தலைவர் ஹக்கீம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவார் எனவும் தெரிவித்தார்.
தவிசாளர் கதிரையில் அமர நான் ஆசைப்பட்டிருந்தால் அதனை செய்திருக்கலாம். ஆனால் கட்சியின் முடிவை என்றும் மதிப்பவன் என்பதால் அதனை விரும்பவில்லை. கட்சி பிழையான ஒரு தீர்மானத்தை எடுக்காது என்பதில் நான் உறுதியாக நம்புவதாகவும் என்.எம்.ஆசீக் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட என்.எம்.ஆசீக்கை கட்சியைவிட்டு இடைநிறுத்தி அவரது கட்சி உறுப்புரிமையையும், பிரதேச சபை உறுப்பினர் பதவியையும் நீக்க வேண்டுமெனவும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம்.முசாரப் ஆகியோர் கட்சித் தலைவர் மற்றும் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் வரிப்பத்தான்சேனைக்குக் கிடைத்த உதவித் தவிசாளர் பதவியைப் பறிப்பதற்காக யார் முயற்சி செய்தாலும் அதனை கடுமையாகக் கண்டிப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இன்று காலை நம்மிடம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment