இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, வீதி மற்றும் மின்சாரத் துறைகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 316 வீதிகளும் 40 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்பட்ட நஷ்டம் 75 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இவற்றை முழுமையாகப் புனரமைக்க 190 பில்லியன் ரூபா தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உலக வங்கியிடம் 2 பில்லியன் ரூபா கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மின்சார சபைக்கு (CEB) சுமார் 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், லெகோ (LECO) நிறுவனத்திற்கு 252 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு 5.6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 156 நீர் வழங்கல் திட்டங்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியின் மானியங்கள் ஊடாகப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்சார சபை போன்ற நிறுவனங்கள் மேலதிகக் கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக வெளிநாட்டு நிதியுதவிகளை நாட வேண்டும் என்றும், வீதிகளைப் புனரமைக்க முறையான நிதி ஒதுக்கீட்டு பொறிமுறையை அமைச்சு உருவாக்க வேண்டும் என்றும் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தினார்.

0 comments:
Post a Comment