எம்.சஹாப்தீன் -
எதிர்வரும் 2013 செப்டம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் நடைபெற இருக்கின்ற வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருப்பதனால் அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிடும் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும் தமது மரச் சின்னத்தில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஒரு எதிர்க்கட்சியைப் போல அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இதனால் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இறுதியில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றியதொரு நாடகமாகவே அரசாங்கத்தை அக்கட்சி விமர்சனம் செய்தமையை பலரும் கருதுகின்றார்கள்.
மக்களிடம் காணப்படுகின்ற மேற்படி அபிப்ராயத்தின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமென்று எதிர் பார்க்கப்பட்டது. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான விருப்பம் அக்கட்சியின் சிலரிடம் இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதனால் கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் அதிக அளவில் கிடைக்காது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை எவரும் அரசாங்கத்தினால் கைது செய்யப்படவில்லை. மட்டுமல்லாது பள்ளிவாசல்களின் மீதான தாக்குதல்களும், முஸ்லிம்களின் மீதான அழுத்ததங்களும் குறைவில்லாது நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே வட மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றிக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.
இதே நிலைதான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இருந்தது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைப் பற்றியும், அரசாங்கத்தின் பிற்போக்கு தனத்தைப் பற்றியும் சூடான கருத்துக்களின் மூலமாக அரசாங்கத்தை விமர்சனம் செய்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டதனைப் போன்று, தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தலின் பிரச்சாரங்களின் போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்து யுக்தி நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலில் பழிக்காது என்றே கூறலாம். ஏனெனில், அரசாங்கத்தை விமர்சனம் செய்வது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொளவதற்காக, பின்னர் தொடர்ச்சியாக அரசாங்கத்தில் இருப்பது பதவிகள், கொந்தராத்துக்கள் மற்றும் கொமிஷன்களுக்காக என்பதனை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.
முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தில் இணைந்து ஒரு பங்காளிக்கட்சியாக இருந்தாலும், அக்கட்சிகளுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா என்று கேட்க வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் மீது பௌத்த கடும் போக்காளர்களின் கெடுபிகெளும், அடாவடித்தனங்களும் ஓய்வில்லாது நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றைச் செய்து கொண்டிருப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அழுத்தம் திருத்தமாக எந்த முஸ்லிம் கட்சியும் அரசாங்கத்தைக் கோரவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் சுதந்திரமாக உலாவுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடாது தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தாலும், அது கூட அரசாங்கத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக பள்ளிவாசல்களுக்கு எதிரான செயற்பாடுகளையும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் விமர்சனம் செய்யும் என்பது தெளிவானதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் போது பௌத்த இனவாதப் போக்குடையவர்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிட்டால் அரசாங்கத்தை விமர்சனம் செய்யாது பிரச்சாரம் செய்ய வேண்டும். அரசாங்கமும் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் உறுதியான வாக்குறுதிகளை வழங்க வேண்டும். இதனை பௌத்த கடும் போக்காளர்கள் விரும்பமாட்டடார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் போது எதனைப் பற்றி பேசுவதென்பதும் அக்கட்சிக்கு பெரிய சிக்கலாகும்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடாது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமாயின் முஸ்லிம்கிளிடைமிருந்து கிடைக்கும் வாக்குகளின் வீதத்திலும் பாரிய பின்னடைவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் நோக்க வேண்டியேற்படும் என்பதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கணிப்பாகும்.
மறுபுறத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடாது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமாயின் அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இலாபம் கிடைக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் எதனையும் அரசாங்கம் தடுத்து நிறுத்தவில்லை. அதற்கான அழுத்தங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எந்த முஸ்லிம் கட்சியும் செய்யவில்லை. முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை. ஆனால், முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் கேட்பார்கள் என்று முஸ்லிம்களை உணர்வு பூர்வமாக தட்டிவிடுவார்கள். இதனால், முஸ்லிம்களும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் மு};லிம்களுக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறெல்லாம் நடைபெறலாமென்று கூட்டல், கழித்தல்களை மேற்கொண்டதன் பின்னர்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் அரசாங்கம் இலாபம் அடைந்தாலும். ஐக்கிய தேசிய கட்சி இலாபம் அடைமந்து விடக்கூடாது என்பதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனை அமைந்திருக்கின்றது.
இத்தகைய நிலைப்பாட்டை ஜனாதிபதியும் வரவேற்பார். காரணம் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களிடம் இருந்து அளிக்கப்படும் வாக்குகள் முழுவதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்லாது இருக்க வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும். இதற்காக அரசாங்கத்தில் இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தனது ஆசிர்வாத்தையும் வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் ஜனாதிபதி இந்த யுக்தியையே கையாண்டார். எக்காரணம் கொண்டும் முஸ்லிம்கிளின் அதிகப்படியான வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்லக் கூடாதென்றே கருதினார். இதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட சம்மதம் தெரிவித்தார். இதனையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தனித்துப் போட்டியிட ஜனாதிபதி தங்களுக்கு பூரண ஆசீர்வாதம் வழங்கியுள்ளதாக பெரியதொரு சாதனையாக மக்களுக்கு தெரிவித்தது. எந்த பேரினவாதத் தலைவராக இருந்தாலும் அரசியலில் அதுவும் முக்கியத்துமிக்க மாகாண சபை ஒன்றின் தேர்ததலில் தம்மோடு இருக்கின்ற கட்சியொன்றை தனித்துப் போட்டியிட அனுமதிக்கின்றார் என்றால், அவர் சார்ந்த கட்சிக்கு இலாபம் இல்லாது அனுமதிப்பாரா என்பதனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
ஆகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தின் ஒரு திட்டமாகவே கருத வேண்டியுள்ளது.
இதே வேளை, வடமாகாணத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த கருத்தை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் வரவேற்றுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தகையதொரு நல்ல முடிவுக்கு வருமாக இருந்தால் அது பற்றி பேசி செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான அழைப்பினை விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, தாம் அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக இருப்பதனால் அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிட இருப்பதாக தேசிய காங்கிரஸின் செயலாளர் ஐ.ஏ.ஹமீட் தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து என்றும் அடக்கி வாசித்துள்ளார்.
உண்மையில் வட மாகாணத்தில் மட்டுமல்ல வடமத்தி, மத்திய மாகாணங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒற்றுமைப்பட்டு ஒரு பொதுச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும். இன்று உள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும், கட்சிகளும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதாகயில்லை. அதனால், முஸ்லிம்கள் மிகவும் கொதிப்படைந்து இருக்கின்றார்கள். இவர்களுக்கும், இவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடாதென்றும் பேசிக் கொள்கின்றார்கள். இது ஆத்திரத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
ஆயினும், நாட்டில் இன்று பௌத்த இனவாத சக்திகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரச்சாரங்களும், நடவடிக்;கைகளையும் கருத்திற் கொண்டு அவதானிக்கும் போது, அவர்களின் எதிர்காலச் திட்டங்கள் பற்றி சிந்திக்கின்ற போது முஸ்லிம்கள் தங்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.
முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டுமென்று முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் கருத்துக்களை முன் வைத்தாலும், அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கவி;ல்லை. நாங்கள் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கின்றோம் என்று காட்டுவதற்காகவே அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டுமென்று இருக்கின்ற ஒரு சில ஆயிரம் வாக்குகளை எல்லா கட்சிகளும் ஒவ்வொரு திசையில் நின்று கொண்டு குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதையாக வாக்குகளை பங்கு போட்டால் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவங்களை மாகாண சபைகளில் பெற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே, முஸ்லிம்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு முஸ்லிம் கட்சிகளையோ, தலைவர்களையோ நம்ப முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வகையில் பேரினவாதிகளின் வெற்றிக்கும் அதிகாரத்திற்கும் துணையாக நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கைகள் வாங்கிய கைகளாக மாறி இருப்பதனால் முஸ்லிம்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தலையைக் காப்பாற்றுவது எப்படி என்றே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (21.07.2013)
0 comments:
Post a Comment