• Latest News

    July 16, 2013

    மு.கா.வுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் மற்றுமொரு பிளவு ஏற்படக்கூடுமென அச்சம்


                                                                        எம்.சஹாப்தீன்

    இலங்கை முஸ்லிம்களின் உச்சமான ஆதரவைப் பெற்றதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் திடீர் மரணத்தையடுத்து இக்கட்சி பல பிளவுகளைக் கண்டது. ஆனாலும், அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளும் குழி பறிப்புக்களும் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்ட உறுப்பினர்களிடையே பலத்த கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.
    இந்நிலையில் தலைவர் ரவூப் ஹக்கிமுக்கும், தவிசாளர் பசீர் சேகுதாவூத்திற்குமிடையே பாரிய அளவில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் மற்றுமொரு பிளவு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கனிந்து வருவதாகவும், விரைவில் இக்கட்சிக்குள் மற்றுமொரு பிளவு ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
    இந்தக் கருத்துக்களை நிருபிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் கருத்துக்கள் அமைந்துள்ளன. அதாவது 'என்னைப் பொறுத்த வரை கட்சியின் தலைமையும் சில பிழைகளை விட்டிருக்கின்றது. ஒரு புரிந்துணர்வு இல்லாததன் காரணத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியானது. அரசாங்கம் எட்டுப் பேரின் ஒற்றுமையை உடைக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கின்றது. இந்தக் கட்சியை உடைத்து பலவீனப்படுத்த வேண்டும் எனக் கருதுகின்றார்கள். பஷீருக்கு அமைச்சர் பதவி கூட முஸ்லிம் காங்கிரஸினுள் கேள்விகளுக்கு மத்தியில்தான் வழங்கப்பட்டது. அமைச்சர் பஷீருக்கும், தலைவர் ஹக்கிமுக்கும் இடையில் இருந்த கட்டுக்கோப்பான நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. அன்று இருவரும் கூடிக் கதைத்து செய்த எத்தனையோ தீர்மானங்கள் கட்சிக்கு நன்மை, தீமைகளை அளித்துள்ளன என்பதற்கு அப்பால் இன்று இருவரின் மனக் கசப்பு ஒரு கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.'
    பைசால் காசிமின் மேற்படி கருத்துக்களை அவதானிக்கின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் எந்தளவிற்கு கருத்து முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதென்பது தெளிவாகின்றது.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் எந்த வேளையிலும், எந்த மாற்றமும், பிளவும் ஏற்படலாமென்பதனை மிகவும் சூசகமாக பைசால் காசிம் தெரிவித்துள்ளார். மேலும், பஷீர் சேகுதாவூத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட விடயம் இன்னமும் கட்சிக்குள் பிரச்சினையாகவே இருந்து கொண்டிரு;கின்றது என்ற செய்தியையும் பைசால் காசிம் மறைமுகமாகச் தெரிவித்துள்ளார்.
    அரசாங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் மற்றுமொரு பிளவை ஏற்படுத்துவதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அரசியலாகப் பார்க்கின்ற போது பிழையாக கருத முடியாது. எந்த அரசியல் கட்சியும் மற்றொரு அரசியல் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு காய்களை நகர்த்தத்தான் செய்யும். அதில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டு தமது அரசியலை வெற்றிகரமாக மெற்கொள்வதுதான் அரசியலாகும். ஆதலால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கின்றதென்றால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பலவீனங்கள் காணப்படுகின்றன எனலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்ள எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவி மீது அளவுகடந்த ஆசை இருக்கின்றது. இந்தப் பலவீனத்தையே அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே காணப்படும் அமைச்சர் பதவி ஆசையைப் பயன்படுத்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே காணப்படும் ஒற்றுமையை உடைப்பதற்கு அதிகார தரப்பினர் திட்டமிட்டுள்ளார்கள். அவர்களின் திட்டத்தின் ஒரு நகர்வே பஷீர் சேகுதாவூத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தெரியாமல் அமைச்சர் பதவி வழங்கியமையாகும். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய போது கட்சிக்குள் பலத்த கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. ஹக்கிமுக்கும் ஏனைய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் ரவூப் ஹக்கிமை சந்திப்பதனையே தவிர்த்து வந்துள்ளார்கள். இதனை கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
    ரவூப் ஹக்கிமின் தலைமைத்துவம் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் கட்சியின் தலைமைத்துவப் பதவியை துறக்க வேண்டுமென்ற அளவில் அந்த விமர்சனங்கள் அமைந்துள்ளன. ஆயினும், அதிகார தரப்பினர்களுக்கும், பேரினவாதிகளுக்கும், பௌத்த கடும் போக்காளர்களுக்கும், மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கிம் இருக்கக் கூடாதென்பதாகும். ரவூப் ஹக்கிமை இலகுவில் வளைத்துப் போட முடியாதென்பதே இவர்களின் இறுதி முடிவாகும். இதனால்தான் தங்களது பேரினவாத அரசியலை இலகுவாக முன்னெடுப்பதற்கு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரைவப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகவுள்ள ரவூப் ஹக்கிமுக்கு பதிலாக தங்களின் அபிலாசைகளுக்கு ஒத்துழைக்கின்ற ஒருவரைத் தலைவராகக் கொண்டு வரவேண்டுமென்பதே அதிகாரத் தரப்பினரின் விருப்பமாகும்.
    இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ரவூப் ஹக்கிமுக்கு எதிரான ஒரு குழுவினை அதிகாரத் தரப்பினர் உருவாக்கியுள்ளனர். இவர்கள் ரவூப் ஹக்கிமை நேரடியாக எதிர்க்க மாட்டார்கள், ஆனால், ரவூப் ஹக்கிம் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென்பதில் ஆசை வைத்துள்ளார்கள். ரவூப் ஹக்கிம் அரசாங்கத்தை விட்டுவிலகும் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்ள அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டுவிலகாது இருப்பார்கள். இவர்கள் விலகாது இருப்பதற்கு பரிசாக அமைச்சர் பதவிகளோ அல்லது வேறு சலுகைகளோ வழங்கப்படும்.
    இந்த திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட ரவூப் ஹக்கிம் அரசாங்கத்தை விட்டுவிலக மாட்டோம். முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு போராட்டங்களைச் செய்வோம். எங்களை விலக்கி (கட்சிக்குள்ளும், வெளியேயும் உள்ள) எதிரிகள் இலாபம் அடையவும், இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தவும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
    இந்த நிலைப்பாட்டை ஒரு பக்கத்தில் நின்று பார்த்தால் அடிமைத்தனமாக இருந்தாலும், மறுபக்கத்தில் நின்று பார்த்தால் சரியான முடிவாகவும் தோன்றுகின்றது.
    அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து தனியே பிரித்து எடுப்பதென்பது இலகுவான காரியமாகும். இவ்வாறு பிரித்து எடுக்கின்றவர்களின் மூலமாக எதிர் பார்க்கின்ற அடைவு மட்டங்களை காண முடியாது. ஆதுலால், ரவூப் ஹக்கிமிடம் இருந்து கட்சியை பிரித்து எடுக்க வேண்டும். ரவூப் ஹக்கிம் தனித்து விடப்பட வேண்டும் என்பதுதான் பேரினவாhதிகளின் மகிழ்ச்சிக்குரிய முடிவாகும்.
    ரவூப் ஹக்கிம் தனது தலைமைப் பதவிக்கும், கட்சிக்கும் மக்களை நம்பிக் கொண்டிருக்கின்றார். அதே வேளை, அதிகார தரப்பினர் முஸ்லிம்களின் அதிக பட்ச வாக்குகளை சிரமின்றி பெற்றுக் கொள்ளுவதற்கு ரவூப் ஹக்கிம் இல்லாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எதிர் பார்க்கின்றார்கள்.
    அரசாங்கத்தோடு இருந்தால்தான் தமது தலைமைத்துவப் பதவியை காப்பாற்றிக் கொள்ள இயலும் என்ற சுயநலத்தில் ரவூப் ஹக்கிம் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும், ரவூப் ஹக்கிம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பொறுத்தமற்ற தலைவர் என்ற விமர்சனம் இருக்கின்ற நிலையில் அவரையே பேரினவாதிகள் விரும்பாது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கின்ற வேறு நபர் ஒருவரை தலைவராக்க வேண்டுமென்று திட்டமிட்டால் அக்கட்சியின் இன்றைய நிலையை விடவும் மோசமான நிலையையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடைந்து கொள்ளும் என்று உறுதியாக சொல்லலாம். பேரினவாதிகள் சிறுபான்மையினத் தலைவர்களை விரும்புவதும், வெறுப்பதும் பேரினவாதத்தின் நன்மைகளுக்காக என்பதே இலங்கையின் அரசியல் வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கருத்து மோதல் என்பது காலத்திற்கு காலம் காணப்படுவதும், அதனால் பிளவுகள் ஏற்படுவதும் வழக்கமானதாகும். ரவூப் ஹக்கிமுக்கும் கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலிக்கும் இடையே பாரிய அளவில் கருத்து மோதல்கள் காணப்பட்டன. இன்றைய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதனை ஹஸன்அலி ஒரு போதும் விரும்பவில்லை. ரவூப் ஹக்கிம் கூட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிர்ப்பந்த்தின் காரணமாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். நிர்ப்பந்த இணைவைக் கூட ஹஸன்அலி விருமபவில்லை. கட்சியை ஆதரவாளர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றே அவர் வாதிட்டார். இதனால், ஹஸன்அலி காட்டமான அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுத்து ரவூப் ஹக்கிமை சங்கடப்படுத்தினார். கட்சியின் உயர்பீட கூட்டமொன்றின் போது ரவூப் ஹக்கிமுக்கும் ஹஸன்அலிக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஹஸன்அலி நீங்கள் பொறுப்பற்ற வகையில் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று சாடும் அளவிற்கு இவர்கள் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன.
    ஆனால், தற்போது ஹஸன்அலி கூட அரசாங்கத்தை விட்டுவிலக முடியாதென்று ரவூப் ஹக்கிம் பாணியில் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார். கட்சியினை அரசாங்கத்தில் இருந்து தூரமாக்குவதனைப் போன்று தூரமாக்கி ரவூப் ஹக்கிமை தலைமைப் பதவியில் இருந்து அகற்றிவிடுவதற்கு எடுக்கப்படும் சூழ்ச்சியானது கட்சியின் இன்றைய நிலையை விடவும் மோசமான நிலைக்கு கொண்டு போய்விடுமென்ற அச்சத்தை ஹஸன்அலி கொண்டிருப்பதாக அவருடன் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
    இதே வேளை, கட்சியில் தம்மை ஒரு சூழ் நிலை கைதியாக வைத்திப்பவர்களின் பிடியில் இருந்து விடுபட ரவூப் ஹக்கிம் துணிவு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்ற போது என்னைப் பற்றி எது வேண்டுமாலும் கூறுங்கள். எதனைக் காட்ட வேண்டுமானாலும் காட்டுங்கள் அவை பற்றி கவலையில்லை. இனியும் இந்த சமூகத்தை ஏமாற்ற முடியாது. கட்சியை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற கருத்துப்பட  ரவூப் ஹக்கிம் கோப ஆவேசப்பட்டுக் கொண்டதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
    தனக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குமாரிக் கதையை தூக்கி எறிந்து கட்சியை பாதுகாத்துக் கொண்டவர்கள், இவர்களின் அடிபணிய வைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தையும் தூக்கி எறிந்து கட்சியை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ரவூப் ஹக்கிம் உறுதியாக நம்புகின்றார் எனலாம்.
    இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையையும், அதிகார தரப்பினருக்கு எதிராக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வையும் பயன்படுத்தி கட்சியில் தம்மை அடிமைப்படுத்த எண்ணிக் கொண்டிருப்பவர்களை கட்சியில் இருந்து விலக்குவதற்கு ரவூப் ஹக்கிம் திட்டமிட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.
    பைசால் காசிம் தெரிவித்து இருப்பதனைப் போல் அமைச்சர் பஷீருக்கும், தலைவர் ஹக்கிமுக்கும் இடையில் இருந்த கட்டுக்கோப்பான நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் வலுக்குமாக இருந்தால, அதனால் ஒரு பிரிவு ஏற்படுமாக இருந்தால், இவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேரை தங்களின் பக்கத்திற்கு இழுத்துக் கொள்கின்றார்கள் என்பதல்ல வெற்றி. யார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை வைத்துள்ளாரே அவருக்கே வெற்றி. அரசாங்கம் தனிநபர்களை விடவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை வளைத்துப் போடவே எண்ணங் கொண்டுள்ளது. கட்சியின் மூலம் கிடைக்கும் அரசியல் இலாபம், தனிநபர்களினால் கிடைக்காது என்பதே அரசாங்கத்தின் இறுதி முடிவாகும்.
    நன்றி வீரகேசரி வாரவெளியீடு (14.07.2013)



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.கா.வுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் மற்றுமொரு பிளவு ஏற்படக்கூடுமென அச்சம் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top