• Latest News

    August 17, 2013

    கொமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன்சிங் வருவாரா?

    சத்ரியன்-
    வரும் நவம்பர்  மாதம், கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாடு, எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அரசாங்கத்துக்கு தலைவலி நிறைந்த ஒன்றாகவே இருக்கும் போலத் தெரிகிறது.
    எல்லா  நாடுகளின்  தலைவர்களுமே கொமன்வெல்த்  மாநாட்டுக்கு வருவார்கள் என்று அண்மையில், வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகருமான சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
    கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரும், வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் கூட வருவார்கள் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார்.  ஊடகங்களில் வெளியான இந்தத் தகவலுக்கு கனடாவில் இருந்து உடனடியாகவே மறுப்பு வெளியானது.
    கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர், அவ்வாறு கனடா எந்த உறுதிப்படுத்தலையும் செய்யவில்லை என்றும், தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.அதுபோலவே, பிரித்தானியாவும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.
    கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று  விடுத்த கோரிக்கையை  பிரித்தானியா நிராகரித்திருப்பினும், எத்தகைய குழுவை கொழும்புக்கு அனுப்புவது என்று இன்னமும் முடிவெடுக்கவில்லை.
    அதுபோலவே, இந்தியாவின் நிலை குறித்த கேள்விகளும் எழும்பியுள்ளன.
    இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை கொமன்வெல்த் மாநாட்டுக்கு அழைப்பதற்காக வரும் 18ம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஒரு நாள் பயணமாக புதுடில்லி செல்லவுள்ளார். நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டாலும், அதை மன்மோகன்சிங் உடனடியாக ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கொமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு இன்னமும் சரியாக மூன்று  மாதங்கள் உள்ளன.  அதற்குள், அவசரப்பட்டு மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா முடிவெடுக்காது என்றே தெரிகிறது, இலங்கையில் பல்வேறு நடவடிக்கைகள், இந்தியாவுக்கு  ஒருபுறத்தில் எரிச்சலையும், இன்னொரு புறத்தில் மத்திய அரசுக்கு தலைவலியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
    13ஆவது திருத்தச்சட்டத்தை  ஒழிக்கும் விவகாரம், மீனவர்களின் பிரச்சினை, சீனாவின் அதிகரித்த தலையீடுகள் மற்றும் முதலீடுகள் என்பன கொழும்பின் மீது புதுடில்லியை அதிருப்தி கொள்ள வைத்துள்ளன.
    இன்னொரு பக்கத்தில், இலங்கையுடன்  இந்தியா  நட்புப் பாராட்டுவதாகவும், தமிழர்களின் நலன்களை பாதிக்கும் கொழும்பின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகவும், தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு, இந்திய மத்தியஅரசுக்கு கடும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.
    தமிழ்நாட்டு மீனவர்களைப் பிடித்து இலங்கைக் கடற்படையினர் சிறை வைத்ததை அடுத்து, கடந்தவாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அடுத்தடுத்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்குக் கடிதம் எழுதினார்.
    புதுடில்லியில் உள்ள தூதுவரை அழைத்துக் கண்டிக்க வேண்டும் என்றும், கொழும்பிலுள்ள தூதுவர் மூலம் எச்சரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது கடிதங்களில் வலியுறுத்தினார்.
    ஒரு வாரத்தில் மூன்று கடிதங்கள் புதுடில்லிக்குப் பறக்க, ஜெயலலிதா எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது.
    டில்லியில் இருந்த இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம், சவுத் புளொக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டார்.
    கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று முறைப்படியான எதிர்ப்பை பதிவு செய்தார்.
    இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது,  தமிழ்நாட்டில் இருந்து அடிமேல் அடி அடித்தால், புதுடில்லி வளைந்து கொடுக்கும் என்பதே அது.
    கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களை ஆதரிக்கும் முழுமையான மனோநிலையில் இந்திய மத்திய அரசு இருந்திராத போதிலும், தமிழ்நாட்டின் அழுத்தங்கள்,  போராட்டங்களால்  இறங்கி வந்தது  நினைவிருக்கலாம்.
    இப்போது, கொமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடப்பதற்கு எதிராக. தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
    இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு செல்லக் கூடாது என்றும்  தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.  இந்த விடயத்தில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்துமே ஒருமித்த நிலைப்பாட்டில் தான் உள்ளன.
    மன்மோகன்சிங் கொழும்பு வருவதானால், தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் ஒட்டுமொத்த கருத்தையும் புறக்கணிப்பதாக, அவமதிப்பதாக கருதப்படும்.
    அடுத்த ஆண்டு, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.
    தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளினதும், மக்களினதும் கருத்துக்களைப் புறக்கணித்து விட்டு அந்தத் தேர்தலை காங்கிரஸ் கட்சியால் எதிர்கொள்ள முடியாது.  இப்போது தமிழ்நாட்டில் கூட்டணியின்றி காங்கிரஸ் தனியாகவே இருந்தாலும், தனித்தே தேர்தலை எதிர்கொள்வதானாலும் கூட, தமிழ்நாட்டின் கருத்துக்களை அது கேட்டுத் தான் ஆக வேண்டும்.
    அடுத்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
    அதாவது, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை இலங்கை அரசாங்கம் சுதந்திரமாக – நீதியாக நடத்துகிறதா? என்பதை இந்தியா அவதானிக்கப் போவதாகவும் தகவல்கள் உள்ளன.  மேலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், 13ஆவது  திருத்தத்தைப் பலவீனப்படுத்த இலங்கை அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கிறதா? என்பதையும் இந்தியா, அவதானிக்கும் என்று தெரிகிறது.
    இந்தியாவின் எதிர்ப்பினால், 13ஆவது  திருத்தத்தைப் பலவீனப்படுத்தும்  நடவடிக்கைகளை அரசாங்கம்  தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள போதிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறுகிறது.
    தேர்தல் முடிந்த பின்னர், வடக்கு மாகாண சபை 13ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஒக்டோபர் மாதம் முழுவதும், காலஅவகாசம் இருக்கப் போகிறது. அதற்குள், வடக்கு மாகாண சபையுடன் 13ஆவது திருத்த விவகாரத்தில் இலங்கை  அரசாங்கம் முரண்டு பிடித்தாலோ, அல்லது அதில் கைவைக்க முயன்றாலோ, இந்தியப் பிரதமரின் பயணத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
    மேலும், இம்மாத  இறுதியில் இலங்கை வரப் போகும், ஐ,நா மனிதஉரிமைகள் ஆணையாளர்  நவநீதம்பிள்ளை, வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையையும் இந்தியா கவனிப்பதாகத் தெரிகிறது.
    இவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தே, கொழும்பு வருவது குறித்து மன்மோகன்சிங் முடிவெடுப்பார் என்று புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
    மன்மோகன்சிங்கை கொழும்பு வருமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமுறை அழைத்தும் அவர் இன்னமும் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை. சார்க் மாநாட்டுக்காகவே அவர் கொழும்பு வந்து சென்றுள்ளார்.
    இது இலங்கை அரசுக்கு இன்னமும் உறுத்தலாகவே இருந்து வருகிறது.
    கொமன்வெல்த் மாநாட்டுக்கான அழைப்பை, வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின்னர், மன்மோகன்சிங் சாதகமான பதிலை வழங்காது போனால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியாகவே இருக்கும்.
    ஏனென்றால், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கைக்கு சவாலான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் இரகசியமானதொரு மறைமுகப் போரை ஆரம்பித்தால், கொமன்வெல்த் மாநாட்டை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பது என்பது தலைவலி மிக்க விவகாரமாகவே இலங்கைக்கு இருக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன்சிங் வருவாரா? Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top