• Latest News

    August 30, 2013

    முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கூறியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் - நவநீதம்பிள்ளை

    ´முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்து நீங்கள் என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களுடைய பிரச்சினையை பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில் நீங்கள் முன்வந்துள்ளமையை நான் பாராட்டுகிறேன்.
    இவ்வாறு ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
     இன்றைய சந்திப்புப்ற்றி அததெரண இணையம் வெளியிட்டுள்ள செய்தியைத் தருகின்றோம்

    இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் உண்மையை கண்டறிய சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நவநீதம்பிள்ளைக்கு இடையில் இன்று (30) காலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

    இதன்போதே நவநீதம்பிள்ளையிடம் இவ்வாறு வலியுறுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.

    இன்றைய சந்திப்பு குறித்து அத தெரண தமிழிணையத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த செவ்வியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறுகையில்,

    'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முறையாக செயற்படுத்தப்படவில்லை என்பதை நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைத்துள்ளோம். அத்துடன் உள்ளூரில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சரியாக செயற்படுவதில்லை என்பதை தெரிவித்தோம். மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் கொலை சம்பவம்,திருகோணமலை மாணவர்கள் கொலை சம்பவம் போன்றவற்றை சுட்டிக்காட்டினோம்.

    காணாமல் போனவர்கள் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை. யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டோம்.

    மேலும் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் உண்மையை கண்டறிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.

    காணி பிரச்சினைஇ வடக்கில் இராணுவம் காணிகளை சுவீகரித்துள்ளமை அதனால் மீள்குடியேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள தடை போன்ற விடயங்கள் குறித்தும் எடுத்துரைத்தோம்.

    இதற்கு பதிலளித்த நவநீதம்பிள்ளை வடக்கு பகுதிக்குச் சென்று தான் உண்மை நிலையை கண்டறிந்ததாகவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐநா பேரவையில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்பித்து பின் அடுத்த வருடம் மார்ச் மாதம் பூரண அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் உறுதி அளித்தார்.

    அத்துடன் ஐநா அரசியல் குழுவிற்கு தனது இலங்கை விஜயம் குறித்தும் வடக்கு நிலைமை குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ஐநா மனித உரிமை அலுவலகம் ஒன்று இலங்கையில் திறக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம்.' என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

    முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்து நவநீதம்பிள்ளையிடம் பேசப்பட்டதா என அத தெரண தமிழிணையம் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியது.

    அதற்கு பதிலளித்த அவர் ' ஆம் முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைத்தோம். பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டமை, கோயில்கள் உடைக்கப்பட்டமை, தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, பர்தா உடை பிரச்சினை போன்றவை தொடர்பில் விளக்கமளித்தோம்.

    அதற்கு பதிலளித்த நவநீதம்பிள்ளை, ´முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்து நீங்கள் என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களுடைய பிரச்சினையை பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில் நீங்கள் முன்வந்துள்ளமையை நான் பாராட்டுகிறேன்´ என்று கூறினார்.'

    இதேவேளை, மலையக மக்கள் குறித்து நவநீதம் பிள்ளையிடம் பேசப்பட்டதா என சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது, 'மலையக மக்கள் குறித்து பேசப்படவில்லை' என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கூறியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் - நவநீதம்பிள்ளை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top