• Latest News

    August 30, 2013

    டிசிடி, வே புரோட்டின் இல்லாத பால்மா; அடையாளம் காண லேபல் முறை

    பாவனையாளர்களுக்கு டி. சி. டி. மற்றும் வே புரோட்டின் அற்ற பால் மா உற்பத்திகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக புதிதாக லேபல் முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பால்மா தொடர்பான விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. சிரேஷ்ட அமைச்சர் டியு. குணசேகரவின் தலைமையிலான 7 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
    இதன்படி, டி. சி. டி. மற்றும் வே புரோட்டின் விவகாரத்தின் பின்னணி குறித்து மக்களை அறிவூட்டும் விளம்பரமொன்றையும் பத்திரிகைகளில் வெளியிடவும் பாவனைக்கு உகந்த டி. சி. டி., வே புரோட்டின் அற்ற உற்பத்திகளை அடையாளம் காணும் வகையில் லேபல் முறையொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சினூடாக விளம்பமொன்றை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பால் மா தொடர்பான விவகாரம் பெருமளவு முடிவுக்கு வந்துள்ள போதும் தொடர்ந்து அவற்றை பரிசோதனைக்குட் படுத்தவும் அதற்காக ஐ. ரி. ஐ. நிறுவனம், மருத்துவ ஆய்வு நிறுவனம் அடங்கலான உள்நாட்டு ஆய்வு கூடங்களின் வசதிகளை மேம்படுத்தவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
    சிறந்த உற்பத்திகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நிபுணர் குழுவினூடாக இலங்கையிலுள்ள உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடத் தொகுதிகளை பரிசோதனை செய்யவும் அமைச்சரவை உப குழு பரிந்துரை செய்துள்ளது.
    சுகாதார அமைச்சு மற்றும் தொடர்புள்ள நிறுவனங்களுடன் இணைந்து உள் நாட்டு பால் பாவனையை ஊக்குவிக்க தேசிய மட்ட திட்டமொன்று முன்னெடுக்கப்படும். உணவு சட்டத்தை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ஐ. ரி. ஐ. நிறுவனத்திற்கு புதிதாக இயந்திரம் கொள்வனவு செய்யவும் டி. சி. டி. உள்ள உற்பத்திகளை சந்தையில் இருந்து அகற்ற சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முன், சுங்கத் திணைக்களம், மருத்துவ ஆய்வு நிறுவனம், ஐ. ரி. ஐ. நிறுவனம் என்பன இணைந்து உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பரிசோதனை முறையொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.- தினகரன்
    .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிசிடி, வே புரோட்டின் இல்லாத பால்மா; அடையாளம் காண லேபல் முறை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top