• Latest News

    October 06, 2013

    முஸ்லிம்கள் சமூகம் சிங்கள சமூகத்தையோ அரசாங்கத்தையோ பகைத்துக் கொள்ளாமலேயே தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் ; ஜெமீல்

    gp.vk;.vk;.V.fhjh;
    எமது நாட்டின் ஒற்றையாட்சிக்குள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடாகும். இதில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை. இது பிரிவினைக் கோஷமும் இல்லை.

    இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.


    கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

    "தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்காமலும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரை பகைத்துக் கொள்ளாமலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.

    சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்றும் இன்றும் உறுதியான் நிலைப்பாடுடனேயே செயற்பட்டு வருகின்றது. எமது நாட்டின் ஒற்றையாட்சிக்குள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடாகும். இதில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை.

    இந்த விடயத்தில் மாற்று சக்திகளின் அழுத்தங்களுக்கும் இடம் கிடையாது. அத்தகைய சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய எத்தகைய தேவையும் எமது முஸ்லிம் காங்கிரசுக்கு கிடையாது. இது விடயத்தில் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை அடியொற்றியதாகவே முஸ்லிம் காங்கிரஸ் தனது பணிகளை இன்றும் மேற்கொண்டு வருகின்றது.

    நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டுடன்- மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகின்ற இந்த மேன்மையான சபையில் சொல்லிக் கொள்கின்றேன்.

    தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முஸ்லிம் சமூகமும் அதன் அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரசும் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டாது.

    அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தினால் 13ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போது முஸ்லிம் சமூகம் கணக்கில் எடுக்கப்படாமல் முற்று முழுதாக புறக்கணிப்பு செய்யப்பட்டு அநீதியிழைக்கப்பட்டமை எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அதனைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று முன்னின்று குரல் கொடுக்கிறது என்றால் அது தமிழ் சமூகத்தின் அபிலாசைக்கு மதிப்பளித்துத்தான் என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்பட்டு- பலமடைய வேண்டும் என்பதே எமது கட்சியின் நோக்கமாகும்.

    ஆனால் 18ஆவது திருத்த சட்ட மூலத்தின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கும் கிழக்கில் அரசாங்க தரப்பு ஆட்சி அமைப்பதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்த போது எமது கட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்து கண்டித்தது.

    உண்மையில் முஸ்லிம் சமூகமானது சிங்கள சமூகத்தையோ அரசாங்கத்தையோ பகைத்துக் கொள்ளாமலேயே தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது. இந்த யதார்த்தத்தை உணர்ந்தே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு செயற்பட்டது என்பதை தமிழ்த் தரப்பு இந்த சந்தர்ப்பத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

    தேசிய இனமுரண்பாட்டு விடயங்களில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கத்தியில் நடப்பது போன்றே காரியமாற்ற வேண்டியுள்ளது. அதற்காக எமது கட்சி நிறைய விட்டுக் கொடுப்புகளை செய்வது மட்டுமல்லாமல் சேதங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

    அன்று புலிகள் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தே போராடி வந்தனர். இன்று தமிழ் கூட்டமைப்பு அக்கோரிக்கையைக் கைவிட்டு ஒற்றையாட்சிக்குள் சமஷ்டித் தீர்வைக் கோருகிறது. இவ்வாறு சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய தேவை தமிழ் தரப்பினருக்கும் எழுந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    இந்த சூழ்நிலையில்தான் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பிலான பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இந்த சபையில் சமர்ப்பித்துள்ளேன்.

    இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு தேவையான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளக் கூடியதும் சமூக ரீதியான காப்பீடுகளை தரவல்லதுமான அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு பேரினவாத சக்திகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவற்றை முறியடிப்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது..

    13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான பிரேரணைகள் சில மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கு மாகாண சபை அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம் சமூகங்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்த கிழக்கு மாகாண சபை 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் இப்படியொரு சபை நமக்குத் தேவையில்லை.

    மாகாண சபை முறைமையானது இலங்கை மக்களுக்கு தங்களது மாகாண ரீதியான தேவைகளினை அவ்வப்போது நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

    மாகாண சபையானது எப்போதும் இந்த நாட்டின் அதிகாரத்தினையும், இறைமையையும் பேணி பாதுகாத்துள்ளதுடன் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரம் மக்களுக்கு மாகாணரீதியாக தங்களது தேவைகளினை இனம் கண்டு தாங்களே அதற்குரிய தீர்வையும் கண்டு கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டதானது வரவேற்கத்தக்கது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண சபைக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.

    அது மாத்திரமல்லாமல் புலிகள் ஆயுதப் போராடத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவார்களானால் 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவதற்கு தான் தயார் என்று யுத்த காலத்தில் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் கூறியதையும் நான் இங்கு ஞாபகமூட்டுகின்றேன்.

    அதேவேளை அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநாட்டின் இடைக்கால அறிக்கை 13 வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் ஒரு இறுதித்தீர்வு எட்டும் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 13வது திருத்தம் சாத்தியமானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே இந்த சபையானது 13 வது திருத்தத்தினை யாப்பில் இருந்து நீக்கிவிடுவதற்கோ அல்லது அதிகாரங்களினை குறைத்து விடுவதற்கோ எந்த விதத்திலும் அனுமதியோ ஆதரவோ வழங்கக் கூடாது என வலியுறுத்துவதோடு 13வது திருத்த சட்டத்தினை பலப்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.

    தற்போது வடக்கில் ஜனநாயக ரீதியாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையொன்று தெரிவாக்யுள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை அதிகாரங்களுடன் கூடிய சுயாதீன சபைகளாக இயங்குவதற்கு வழியேற்படுத்தப்பட வேண்டும்.

    இதன் ஊடாக அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக மாற்றப்பட வேண்டும். அவர்கள் மீண்டுமொருமுறை விரக்தி நிலைக்கு சென்று ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது. இது அரசாங்கம் மேற்கொள்கின்ற தீர்மானங்களிலேயே தங்கியிருக்கிறது என்பதை இந்த சபையில் மிகவும் அழுத்தமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்கள் சமூகம் சிங்கள சமூகத்தையோ அரசாங்கத்தையோ பகைத்துக் கொள்ளாமலேயே தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் ; ஜெமீல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top