இப்னு செய்யத்- வட மாகாண சபையின் தேர்தலை நடத்த வேண்டாம் நாடு பிளவுபட்டுப் போய்விடுமென்று கருத்துக்களை முன் வைத்தவர்கள் இன்று வாயடைத்துப் போயுள்ளார்கள். வட மாகாணத்தில் ஜனாதிபதி மக்களின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று (09.11.2013) காலை காரைதீவுக்கு விஜயம் செய்தார். அவர் காரைதீவில் உள்ள புகழ் பெற்ற கண்ணகி அம்மன் கோயிலில் விசேட பூசையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயற்பாடுகளை அம்பாரை மாவட்டத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு அவர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.காரைதீவு பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல மொழிகளையும், மதங்களையும் பேசுகின்ற நாடுகள் இன்று மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றன. நாம் பாரிய யுத்தத்தினை எதிர் கொண்டு, அதனை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் மக்களிடையே ஒருமைப்பாட்டையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நாட்டில் உள்ள எல்லா இனங்களுக்கும் அதிகாரங்களை வழங்க வேண்டுமென்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
வட மாகாண சபைக்கு ஜனநாயகமானதொரு தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்தத் தேர்தலை நடத்த வேண்டாமென்று ஜனாதிபதியிடம் பலரும் கேட்டுக் கொண்டார்கள். வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றால் அங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும். அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்தி விடுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். இவர்களின் எந்தக் கதைக்கும் ஜனாதிபதி அடிபணியவில்லை. வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்தி அங்குள்ள மக்களுக்கு அரசியல் அதிகாரத்தினை அவர் வழங்கியுள்ளார். ஆனால், இன்று வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்த வேண்டாமென்று சொன்னவர்கள் வாயடைத்துப் போயுள்ளார்கள்.
ஜனாதிபதி வடக்கில் சமாதானத்தையும், சக வாழ்வையும் ஏற்படுத்தியுள்ளார். அங்கு மக்களின் ஆட்சியை உருவாக்கியுள்ளார். ஜனநாயகம் என்பது மக்களின் ஆட்சி முறைமையாகும். ஜனநாயகம் என்பது மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதாகும். ஜனநாயகம் என்பது ஒருவரை ஒருவர் மதித்து கௌரவமளிப்பதாகும். ஜனநாயகம் என்பது சிறுபான்மை மக்களுக்குரிய மதிப்பைக் கொடுப்பதாகும். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களிடையே ஏற்றத் தாழ்வை பார்க்கக் கூடாது.
இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்கள மக்களுக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் மற்ற மக்களுடன் சமத்துவமாக வாழ வேண்டும். அதற்கான வழி வகைகளைச் செய்ய வேண்டும். ஏனைய மக்களும் சிங்கள மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
நாம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்றன. ஆனால், அவர்களின் வல்லமை இன்னும் வீழ்ச்சியடையவில்லை. அதனால், அவர்களுடன் இணைந்து செல்ல வேண்டியுள்ளது. நாம் அவர்களுக்கு அடிமைப்பட்டுவிடாhல் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டியுள்ளன.
நாடுகள் தமது மக்களிடையே ஒருமைப்பாடுகளை அடைந்து கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. நாம் நம்மிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். எம்மிடையே காணப்படும் ஊனமுற்றவர்களுக்கு சக்தி வழங்க வேண்டும். அவர்களை மற்றவர்களும் மதிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும்.



0 comments:
Post a Comment