• Latest News

    November 12, 2013

    உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஹலால் பிரச்சினை இலங்கையில் காணப்படுகின்றது ; ரவூப் ஹக்கிம்

    நாட்டின் பிரஜையொருவர் தாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள மூலப்பொருட்களை பற்றி அறிந்து கொள்வது அடிப்படை உரிமையாகும். இதனை பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியுமானால், ஏன் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஹலால் விவகாரத்தை பொதுபலசேனா போன்ற அமைப்புகள் பூதாகாரமாக்குகின்றன என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்.
    காலி, தலாப்பிட்டிய அலீப் குர்ஆன் மத்ரஸாவில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு நடைபெற்ற இஸ்லாமிய புது வருடத்தையொட்டிய முஹர்ரம் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். மௌலவி சாகிர் ஹூசைன் இவ் வைபவத்திற்கு தலைமை வகித்தார்.
    அவர் அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
    பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பங்குபற்றும் மாநாடு ஆரம்பமாகும் சூழ்நிலையில், அதற்கு முன்னோடியான பொதுமக்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியை அவர் உரையாற்றுவதற்கு முன்பாக நாட்டின் நான்கு இனத்தவரையும் பிரதிபலிக்கும் விதத்தில் அந்தந்த இனங்களைச் சார்ந்த சிறுவர்கள் மேடைக்கு அழைத்துச் சென்ற முக்கிய சம்பவம் இடம்பெற்றது. இதனூடாக 2015 ஆண்டை அடுத்து வரும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சிறுவர்கள் ஊடாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்வதற்கு ஜனாதிபதி இவ்வாறு தீர்மானித்திருக்கலாம். அதை அவர் தனது உரையிலும் வலியுறுத்தினார்.
    குறிப்பாக எமது நாட்டில் சிறுவர் சிறுமியர்களின் அல்லது இளைஞர்களின் யுவதிகளின் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம் உரிமைகள் என்பன தாம் பின்பற்றி ஒழுகும் சமயங்களின் ஊடாகவும், கலாசாரங்களின் ஊடாகவும் புடம்போடப்படுவதை இவ்வாறான சம்பவம் உணர்த்தி நிற்கின்றது. இதில் ஒரு பன்முகத் தன்மையை நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறு சமூகங்கள் இடையில் காணப்படும் பன்முகத் தன்மை தான் எங்களது ஒரே சக்தி என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
    இந்தப் பன்முகத் தன்மையின் ஆற்றலைப்பற்றி அறியாதவர்களும் அதன் சிறப்பைப் பற்றி தெரியாதவர்களும் தான் இயக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு இந் நாட்டில் வாழும் இனங்களிடையே கசப்பு உணர்வுகளையும், தேவையற்ற பிரச்சினைகளையும் தோற்று விக்கின்றனர். ஆனால் இன்று ஜனாதிபதி சொல்லவிழைந்த செய்திக்கு முற்றிலும் மாற்றமான முறையில் சில இனவாத சக்திகள் சமூகங்களுக்கிடையிலே விரிசலை ஏற்படுத்த எத்தனித்து வருகின்றன. இந்த அமைப்புகள் விடுக்கும் செய்திகளினால் விளையும் ஆபத்துகளைப் பற்றி நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
    இவ்வாறான அமைப்பினர் இஸ்லாத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை கற்பிக்க முனைந்து வருகின்றனர். ஆனால் இந்த விடயத்தில் நாம் மிகவும் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். எங்களது நபிகள் நாயகம் முகம்மத் (ஸல்) உச்சக் கட்ட சகிப்புத் தன்மையின் ஊடாகத் தான் இஸ்லாம் மார்;க்கத்தை வளர்த்தார்கள் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் கையாண்ட பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் வரலாறு நெடுகிலும் சான்றுகள் உள்ளன. இவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுவதற்கு இப்பொழுது அவகாசம் இல்லை.
    இந்த காலி நகரையும் அதனை சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் பொறுத்த வரை இவ்வாறான பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பண்பாடு பாரம்பரியம் என்பன மிகத் தொன்மையானவை. இவைபற்றி நாம் கருத்துப்பாரிமாற்றங்களை செய்து கொள்வதை விடுத்து வீணாகப் பிரச்சினைகளை சந்திக்கத் தேவையில்லை. இப் பகுதியில் உள்ள பஹ்ஜதுல் இப்றாஹிமியா மக்கீய்யா, வெலிகமையில் அமைந்துள்ள மத்ரஸ்துல் பாரி போன்றவை தொண்மையான அரபுக் கலாசாலைகள் ஆகும். இவற்றில் சில நாட்டிலேயே நூறு அல்லது அதற்கு மேற்பட்ட  வருடங்களுக்கு மேல் பழமையான அரபுக் கல்லூரிகள்.
    இந்த மண்ணில் கால் பதித்த அராபிய வர்த்தகர்கள் சமயம் பற்றிய உணர்வை ஊட்டுவதற்கு முதலில் காரணமாக அமைந்தனர். ஆரம்பகால முஸ்லிம்களின் முயற்சிகள் அராபிக் கல்லூரிகளின் ஊடாகத் தான் நாடெங்கும் வியாபித்தது. இப்பொழுதும் ஹலால் பிரச்சினைப் பற்றி பார்வையைத் திருப்புகின்றேன். இலங்கையில் தலைதூக்கியுள்ள ஹலால் பிரச்சினையைப் போன்று முஸ்லிம் அல்லாதவர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் ஏனைய நாடுகளிலும் இதனால் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நான் பல இணையத்தளங்களைப் பார்வையிட்டேன்.
    ஹிஜாப் பிரச்சினை பற்றியும் நான் கவனம் செலுத்தினேன். ஹிஜாப் விடயத்தில் சில நாடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டன. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டைக் கூறலாம். அங்கு ஹிஜாப் விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்தது. அங்குள்ள அரசியல் கட்சியொன்று ஹிஜாப் விவகாரத்தை தூக்கிப்பிடித்து அந் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரிய பிரசாரத்தை முன்னெடுத்தது.
    அந்த அரசியல் கட்சி  இன்றும் அங்கு செயல்படுகிறது. பிரான்ஸ் நாட்டிலும் ஹலால் பிரச்சினை இருக்கிறதா என்று நான் தேடிப்பார்த்தேன். ஆனால் எங்கும் இல்லாத பிரச்சினை தான் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளி;ல்  இல்லாத ஹலால் பிரச்சினை தான் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
    பிரான்ஸ் நாட்டிலும் ஹலால் உணவு சம்பந்தமாகவும் வர்த்தக ரீதியாக ஹலால் உணவுகள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாகவும் பிரச்சினை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினை ஏற்பட்ட போது அதில் அந்த நாட்டு அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டது. அந் நாட்டு அரசாங்கம் அதில் தலையிட்டு அதற்கு ஒரு தீர்வைக் கண்டது. அதாவது, எந்தவொரு பிரஜைக்கும் தான் உட்கொள்ளும் உணவில் என்ன மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன என்பதை அறிந்து கொள்வது ஓர் அடிப்படை உரிமை என்ற தீர்வை அந்த அரசாங்கம் வழங்கியது.
    தாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ளவற்றை மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் அறிந்து கொள்ளும் உரிமை போன்றே ஹலால் விடயமும் உள்ளது. நோயாளர்களைப் பொறுத்தவரை நீரிழிவு, அதி இரத்த அமுக்கம், இருதய நோய்கள், சிறு நீரக நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றுக்கு ஏற்றவாறான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். அது எவ்வாறு அவர்கள் உரிமையோ அவ்வாறே முஸ்லிம்களும் தமது சமயம் வலியுறுத்தும் காரணத்தால் நலன் கருதி ஹலால் உணவை உண்பது உரிமையாகும். ஆகவே முஸ்லிம்களுக்கு தமது சமயத்துக்கு அனுகூலமாக ஹலால் உணவை உட்கொள்வது பிரான்ஸ் நாட்டில் நிருபணமாகியிருக்கிறது.
    ஹலால் பிரச்சினையை இங்கு தோற்றுவித்துள்ள இயக்கங்கள் என்னை ஒரு பயங்கரவாதியாக சித்திரித்து வருகிறார்கள். இதில் நான் மிகவும் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேவையற்ற விதத்தில் அநாவசியமாக வாய் திறப்பதில்லை. தேவையற்ற மோதல்களில் ஈடுபட வேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஆனால் சர்வதேசத்தில் எங்குமில்லாத பிரச்சினையைத் தான் பொதுபல சேனா இந்த நாட்டில் ஏற்படுத்தி வருகின்றது.
    அதாவதுஇ இந்த ஹலால் பிரச்சினை கசினோ சூதாட்ட விடயத்தை விட பாரதூரமானதென்று அந்த அமைப்பு கூறுகிறது. அது எவ்வாறான முட்டாள் தனம். அதைப் பற்றி பேச வேண்டுமானால் எவ்வளவும் பேசலாம். கசினோ சூதாட்டத்திற்கு செல்பவர்கள் மற்றவர்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அல்லது தங்களது பணத்தை பறிகொடுத்து விட்டு வருகிறார்கள். இவைதான் உண்மையில் நடக்கின்றன. இதைவிடப் பயங்கரம் தான் ஹலால் உணவு உட்கொள்வதாம். என்ன விசித்திரம் இது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்யைமான சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றி பிழையான கருத்துக்களைப் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    இந்த நாட்டின் ஒருமைப்பாடு ஐக்கியம் என்பவற்றுக்கு மதிப்பளிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்த பொதுபல சேனா போன்ற தீய சக்திகள் கங்கணம் கட்டியுள்ளன.
    இந்த நாட்டின் பன்முகத் தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் நாம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல் ஊடாக பரஸ்பரம் பிரச்சினைகளுக்கு ஏற்ற புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளவும், தீர்வுகளைக் காணவும் முன்வர வேண்டும். இவ்வாறான கருத்துப் பரிமாறலுக்கு விரும்பாத சக்திகள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

    இதில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். எமது ; அமைச்சரவையில் உள்ள பலரும் இந்தப் பிரச்சினையை மேலும் வளர விடாமல் முற்றிலும் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தினோம்.
    இந்தப் பிரச்சினைய நாம் ஆழமாக உற்றுநோக்க வேண்டும். இதில் குறுகிய உள்நோக்கம் பொதிந்துள்ளது. அரசாங்கத்தின் ஸ்திரத் தன்மையை சீர் குழைப்பதற்கு எத்தனிக்கும் தீய சக்திகள் தான் இதன் பின் புலத்தில் உள்ளன என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
    எந்த அடிப்படையும் இல்லாமல் முஸ்லிம்கள் உட்கொள்ளும் உணவு பற்றி தேவையற்ற பிரச்சினையை எழுப்பி, குழப்பத்தை ஏற்படுத்த அந்தச் சக்திகள் தொடர்ந்தும் எத்தனித்து வருகின்றது. இவர்களோடு முட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.  ஆனால், பிரச்சினைகளை உரிய முறையில் கலந்துரையாடி  அவற்றுக்கான   தீர்வுகளை காண்பதற்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.
    டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஹலால் பிரச்சினை இலங்கையில் காணப்படுகின்றது ; ரவூப் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top