• Latest News

    November 21, 2025

    நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு கோரமில்லாததால் ஒத்திவைப்பு


    நூருல் ஹுதா உமர்-
    நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (21) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை அமர்வை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டு தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 
     
    இன்று காலை 10 மணிக்கு தவிசாளரை தெரிவு செய்வதற்கான சபை அமர்வு நடைபெறுவதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ எல் எம் அஸ்மி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமும், உறுப்பினர்களுக்கு பதிவு தபாலினூடாக கடிதம் மூலமும் தெரிவித்திருந்தார். இருந்த போதும் இன்றைய அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலையில் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டும் வேறு உறுப்பினர்கள் யாரும் 10.30 மணிவரை சமூகமளிக்கவில்லை.
     
    இந்த நிலையில் தவிசாளர் தெரிவினை நடத்துவதற்கான சபை அமர்வுக்கான கோரம் 50 வீதம் என்பதால், 07 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதனால் 50 வீத கோரமின்றி புதிய தவிசாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் இன்றைய சபை அமர்வு இருந்தமையால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ எல் எம் அஸ்மி தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என்றும் அதற்கான பணிகளை தான் முன்னெடுப்பதாகவும் தெரிவித்து இன்றைய அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தார்.
     
    நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பனவும் தமது உறுப்பினர்களை கொண்டுள்ளது. இன்றைய அமர்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி இரு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உப தவிசாளரும் சமூகம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     
    இன்றைய அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி, தேசிய அமைப்பாளர் எம்.ஏ. தாஹீர் எம்.பி, தேசிய மக்கள் சக்தி பிராந்திய அமைப்பாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட குழுவினர், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் அடங்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு கோரமில்லாததால் ஒத்திவைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top