• Latest News

    December 14, 2013

    இ.போ.ச.வுக்கு மேலும் 2000 பஸ் வண்டிகள்!

    இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 2000 பஸ்களை இறக்குமதி செய்து அரச போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தத் தீர்மா னித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று (13) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
    இதற்கான நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பஸ் டிக்கட் பண மோச டிகளைத் தடுக்கும் வகையில் முற்கொடுப்பனவு அட்டை ‘ப்ரிபைட் காட்’ முறையை நடை முறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    டிக்கெட் மோசடியினால் ஒரு டிப்போவில் சுமார் 50,000 ரூபா வரை நட்டத்தை எதிர்கொள்ள நேரிடுவதாக குறிப்பிட்ட அமைச்சர், பயணிகளுக்குச் சேர வேண்டிய மிகுதிப் பணம் கிடைக்காமை உட்பட அசெளகரியங்களுக்கு நிவர்த்தியாக இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் நேற்று போக்குவரத்து அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் வெல்கம தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

    ரயில் சேவை தற்போது மிக முன்னேற்றமடைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தற்போது ரயிலிலேயே பயணம் செய்கின்றனர். சிறந்த சேவை குறைந்த கடடணமே இதற்குக் காரணமாகும். இதனால் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    மதவாச்சிக்கும் காங்கேசன் துறைக்குமான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு தற்போது மடுவரை ரயில் சேவை இடம்பெறுகிறது. காங்கேசன் துறைக்கான ரயில் சேவையின் முதற்கட்டமாக கிளிநொச்சி வரை தற்போது ரயில் சேவை நடைபெறுகிறது.

    இதுவரை ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் ஒரு அங்குலமாவது ரயில் பாதையை நிர்மாணித்ததில்லை. தற்போது அரசாங்கம் வடக்குக்கு மட்டுமன்றி தெற்கில் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான ரயில் பாதையும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. நானுஓயா பதுளை ரயில்கள் அழகானவையாகவும் சொகுசானதாகவும் உள்ளன.

    அரசாங்கம் நல்லவற்றைச் செய்யும் போது அதனை எதிர்க் கட்சியினர் நன்மையாகப் பேச வேண்டும். குறைகள் எங்கும் உள்ளன. தவறுகள் எவராலும் நடக்க முடியும் எனினும் நல்லவற்றை அரசாங்கம் செய்யும் போது அதனை எதிர்க் கட்சி விமர்சிக்கக்கூடாது. நாம் செய்வது 100 ற்கு 100 நல்லது என நான் ஒருபோதும் கூறவில்லை. எனினும் சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு நாம் முடிந்தளவு முயற்சித்துள்ளோம். அதன் பிரதிபலன்களை மக்கள் பாராட்டுகின்றனர்.

    ரயில் என்ஜின் விவகாரம் இக்காலத்தில் பெரிதாகப் பேசப்படுகிறது. அது தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். ‘தினமின’ பத்திரிகையானது 1913 ஆம் ஆண்டிலும் இது போன்ற சம்பவமொன்று நிகழ்ந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. சிலவேளை ஆவிகளின் செயற்பாடோ எனவும் சிலர் பேசுகின்றனர். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஆபிரகாம்லிங்கன் நடமாடுவதாகவும் ஹிட்லர் போன்றோர் ஆவியாக திரிவதாகவும் கூறப்படுகின்றது. இது எந்தளவு உண்மையோ தெரியாது.

    இ.போ.ச. துறையில் குறைபாடுகள் உள்ளன. எனினும் ஐ.தே.க. காலத்தில் அதனை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறந்த நிலையில் இயங்கிய வெறெஹெர டிப்போ அக்காலத்தில் விற்கப்பட்டதையும் குறிப்பிட முடியும். அரச போக்குவரத்துத் துறையை அழிக்க முற்பட்டது ஐ.தே.க.வே. நாங்கள் அதனை மீளக்கட்டியெழுப்பி வருகிறோம்.

    டிப்போக்களில் 4,50,000 ற்கும் மேல் இலாபம் பெற முடியும் எனினும் சில டிப்போக்களில் டிக்கட் மூலம் பண மோசடிகள் இடம்பெறுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடிகளை தடுக்கவே ‘ப்ரிபைட்’ காட் முறையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கும் பெரும் நன்மையாக அமையும் எனவும் பழைய பஸ்களை டெண்டர் மூலம் விற்பனை செய்து அந்த பணம் மூலம் இ.போ.ச. ஊழியர்களின் ஊழியர் சேலாப நிதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இ.போ.ச. ஊழியர்களின் கொடுப்பனவுகளை துரிதமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இ.போ.ச.வுக்கு மேலும் 2000 பஸ் வண்டிகள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top