• Latest News

    December 13, 2013

    கென்யாவின் 50 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு!

    நைரோபியின் புறநகரான கசரானியிலுள்ள மொய் சர்வதேச விளையாட்டுக் கட்டிடத்தொகுதியில் நேற்று காலை நடைபெற்ற கென்யாவின் 50வது சுதந்திரதின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதற்பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

     சுதந்திரதின கொண்டாட்டங்கள் உஹூரு பூங்காவில் கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவினால் கொடியேற்றப்பட்டு ஞாபகார்த்த மரம் நடப்பட்டு வியாழன் நள்ளிரவு ஆரம்பமானது.
    1942 ஆம் ஆண்டு கிகுயூ, எம்பூ, மெரூ மற்றும் கம்பா கோத்திரங்களின் உறுப்பினர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கு உறுதியெடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து கென்யாவின் சுதந்தர இயக்கம் ஆரம்பமானது. இதுவே மவ்மவ் இயக்கமாக வளர்ச்சியடைந்தது.

    அவ்வியக்கத்தில் ஈடுபாடுகாட்டியமைக்காக தற்போதைய கென்ய ஜனாதிபதியின் தந்தை ஜோமோ கென்யாட்டாவுக்கு 1952 ஆம் ஆண்டு 7 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

    10 வருடங்கள் சிறையில் கழித்த அவர் 1962 ஆம் ஆண்டு விடுதலையானதைத் தொடர்ந்து கென்யாவின் முதலாவது பிரதமரானார். 1963 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 12 ஆம் திகதி கென்யா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து ஜோமோ கென்யாட்டா நாட்டின் முதலாவது ஜனாதிபதியானார்.

    இந்த கொண்டாட்டங்களில் நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜொனதன் நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒபசஞ்சோ, மாலாவியின் ஜனாதிபதி ஜொய்ஸ் பண்டா, தன்சானியா ஜனாதிபதி ஜகாயா கிக்வீட், கொங்கோ ஜனாதிபதி ஜோசப் கபீலா, எரிட்ரியாவின் ஜனாதிபதி இஸ்ஸாயாஸ் அபவெர்க்கி ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு ஆபிரிக்கத் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதற்பெண்மணியும் பங்குபற்றினர்.

    கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி மவாய் , பாக்கி மற்றும் கென்யாவின் உப ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கென்யாவின் 50 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top