• Latest News

    December 13, 2013

    கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் இழுபறியில்! போலி ஆவணங்கள் காட்சிப்படுத்தல்! ஜனாதிபதியின் கவனத்திற்கு விடயம் செல்லுகின்றது!

    சிரோமி ;
    பிழையான தகல்களை வழங்கி கூட்டத்தினை பிழையாக வழி நடத்தக் கூடாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதயில் நடைபெற்ற கூட்டத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி தெரிவித்தார்.

    பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடந்தவைகளாவது ,

    கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பிலான கூட்டம் ஆரம்பமான போது பொதுநிருவாக அமைச்சரின் மேலதிக செயலாளரினால் சமர்பிக்கப்பட்ட கல்முனை படத்தில் கல்முனை பிரதேசம் 50 சதுர கிலோ மீட்டர் எனக்காட்டப்பட்டுள்ளது. அதனை ஹரீஸ் வன்மை யாக எதிர்த்து. அவ்வாறு கூட்டிக் காட்ட முடியாது எனவும் நான் கல்முனை மாநகர முதல்வராக இருந்தபோது 'ஜெய்க்கா' திட்டத்தில் 9 சதுர கிலோ மீட்டரே காட்டப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கூட்டத்தை பிழையாக நடத்துகின்றார் என ஹரீஸ் சபையில் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

    இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து அங்கு உரையாற்றும் போது, கல்முனையில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என்றும், நிதிவிடயங்கள் தாமதப்படுத்தப்படுவதாகவும், 29 கிராம சேவகர் பிரிவு உள்ள தமிழ்ப்பிரிவுக்கு தனி பிரதேச செயலகம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இதற்குப் பதிலளித்த றவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ், அவ்வாறென்றால் காரைதீவு, நாவிதன்வெளி பிரதேங்களின் விடயம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அங்கு எம்மால் ஒத்துப் போக முடியும் என்றால் ஏன் கல்முனையில் அதனை செய்ய முடியாது. அங்கு நாம் உபசெயலகம் கேட்காமல் உங்களுடன் இணைந்து செயற் படுகின்றோம். அதிலும் முஸ்லிம் மக்களுக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டுள்ளது 20,000 வாக்காளர்களை கொண்ட தமிழர் பிரதேசத்துக்கு 29 கிராம சேவகர் பிரிவும் 35,000 வாக்காளர்களை கொண்ட முஸ்லிம் பிரதேசத்துக்கு 29 கிராமசேவகர் பிரிவே உள்ளது.

    இந்த விடயத்தை நாம் இலகுவாக பேசிவிட முடியாது. உங்களால் சமர்பிக்கப்பட்டிருக்கும் வரைபடத்தின்படி கல்முனை தரவை கோவில் வீதியில் இருந்து முஸ்லிம்களின் பொருளாதார மையமான கல்முனை நகரத்தை தமிழ் பிரதேச செயலகத்துக்குள் எடுத்து முஸ்லிம்களுக்கு அநீதி இளைக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை எல்லை நிர்ணயக் குழு தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

    அத்துடன் கல்முனை பிரதேசத்தை சுக்கு நூறாக்கும் எந்த செயலுக்கும் நாம் உடன் படமாட்டோம் என றவூப்ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பீ ஆகியோர் தெரிவித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை முஸ்லிம் மக்களுக்கு திட்டமிட்ட அநீதி நடைபெறுகின்றது என்று உரத்த குரலில் சத்தமிட்டார்.

    பிரதி அமைச்சர் சரத்வீர சேகர 29 கிராம சேவகர் பிரிவு உள்ள பிரதேசத்துக்கு தனிபிரதேச செயலகம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் போலி வரை படத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம் பிரதேசத்தை அபகரிப்பு செய்யும் நோக்கில் செயற்படுவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    அமைச்சர் தயாரத்னா பேசமுற்பட்ட போது, கல்முனையில் உள்ள மக்களை பிரிப் தற்கு முயற்சிக்க வேண்டாம். கல்முனை முஸ்லிம்களை சிறுமைப்படுத்த எடுக்கும் முயற்சியே இதுவாகும் என கூறி அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இருந்தும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு அரசாங்க அதிபரை நாம் ஏற்றுக்கொண்டு இனவாதம் பேசாமல் வாழ்கின்றோம். கரையோர மாவட்டம் எமக்குத் தரப்பட வேண்டும் எங்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி நடைபெறுகின்றது என்று பலத்த சத்தமிட்ட ஹரீஸ், இங்கு நடைபெறுகின்ற அநீதிகளை ஏற்கமாட்டோம் என்று மேசை கதிரையை தள்ளிவிட்டு பீறிட்டு எழுந்தார். அப்போது பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவும், தயாரத்னவும் ஹரீசை பிடித்து அமர செய்தார்கள்.

    இந்த விடயமாக நான் தெளிவில்லாமல் இருந்தேன். ஹரீஸ் எம்.பீ யும் அமைச்சர் றவூப் ஹக்கீமும் தெளிவுபடுத்திய பின்னர்தான் உண்மை நிலையை அறிந்தேன். ஹரீஸ் எம்.பீ இந்த விடயங்களை தெளிவுபடுத்தாமல் இருந்திருந்தால் நான் தமிழ் பிரதேச செயலகம் தனியாக அனுமதியை இன்று வழங்கியிருப்பேன் என பொது நிருவாக அமைச்சர் தெரிவித்தார்.

    உண்மை நிலையை அறிந்த அங்கிருந்த சிங்கள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குசுகுசுக்கத் தொடங்கியதும் இந்த விடயம் விஸ்வரூபம் எடுக்கப் போவதை அறிந்து இந்த விடயத்தை ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    நாங்கள் கல்முனை மாநகர சபையில் ஒற்றுமையுடன் இருக்கின்றோம் 29 கிராம சேவகர் பிரிவுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கான தனி பிரதேச செயலகம் அமைப்பது பற்றி நாம் முதலில் பேசவேண்டும். தங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் பெரும்பான்மையாக உள்ள கல்முனை முஸ்லிம்களின் முடிவுகளையும் பெறவேண்டும் என் கல்முனை மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை அரசாங்க அதிபரை பொதுநிருவாக அமைச்சர் விசாரித்த போது கல்முனையில் இயங்கும் உப-பிரதேச செயலகத்துக்கு எந்த அநீதியும் இடம்பெறவில்லை. தமிழ் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளும் முஸ்லிம் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளும் தடைஇன்றி இடம்பெறுவதாக அரசாங்க அதிபர் அங்கு தெரிவித்தார்.

    அங்கு சென்றிருந்த தமிழ் சிவில் சமூகத்தினர் ஹரீஸ் எம்.பீ எங்களுக்கு அநீதி இழைப்பதாக தெரிவித்தனர். எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவை அமைச்சர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தபோது, இந்த விடயத்தை ஆழமாக ஆராய வேண்டியுள்ளது இதனை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

    குறித்த கூட்டத்தில் தமிழ் மக்களின் சிவில் சமுக பிரதிநிதிகள், கல்முனை பிரதே சத்தை சேர்ந்தவர்கள் என 25 பேர் கலந்து கொண்டனர். முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில் றவூப் ஹக்கீம், ஹரீஸ் M.P பைசால் காசீம் M.P ஹஸன்அலி M.P,  கல்முனை மேயர் நிசாம் காரியப்பர்  மற்றும் சிரேஸ்ட அமைச்சர் பீ.தயாரடன, பிரதி அமைச்சர் சரத்வீர சேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் இழுபறியில்! போலி ஆவணங்கள் காட்சிப்படுத்தல்! ஜனாதிபதியின் கவனத்திற்கு விடயம் செல்லுகின்றது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top