• Latest News

    December 16, 2013

    கொழும்பு முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்தத் திட்டம்; என்.எம். அமீன்

    பல்கலைக் கழகங்களில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே படிக்கிறார்கள். இதற்குக் காரணம் கொழும்பிலுள்ள பாடசாலைகளின் தற்போதைய நிலையாகும். இந்நிலையை மாற்றுவதற்கு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் தம் பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் கூறியுள்ளார்.

    மொறட்டுவைப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் மூன்றாவது வருட வருடாந்த பொதுக்கூட்டமும் இஸ்லாமிய தினமும் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில், முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் எம். பஹ்தான் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் உரையாற்றுகையில் –

    இங்கு பயிலும் 200 முஸ்லிம் மாணவர்களில் ஒரு முஸ்லிம் மாணவரேனும் கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளினூடாகத் தெரிவானவர்களல்லர். கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் தற்போதைய நிலைக்கு இது நல்ல உதாரணம்.

    1974 களில் முஸ்லிம்களின் பல்கலைக் கழக அநுமதி 3 சதவீதமாக இருந்த்து. அப்போது அனைத்துப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராக நான் இருந்தேன். நாடளாவிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று வார இறுதி வகுப்புக்களை நடாத்தினோம்.

    அதேபோன்று உங்களுக்கும் ஒரு மகத்தான பொறுப்புள்ளது. வார இறுதியில் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நிலையை மேம்படுத்த உங்கள் உதவி தேவைப்படுகின்றது. இது உங்களது சமூகக் கடமையுங்கூட.

    முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் தேசிய நீரோட்டத்தில் பங்குகொள்ள வேண்டும். இந்தப் பல்கலைக் கழகத்தில் கற்ற மாணவர்களிற் சிலர் ஆளில்லாத விமானம் ஒன்றை உருவாக்கினார்கள். அதில் ஒரு முஸ்லிம் மாணவரும் சம்பந்தப்பட்டிருந்ததைக் கண்டு சந்தோசமடைந்தோம்.

    நம் மாணவர்கள் தனிவழியே செல்வதைத் தவிர்த்து செயற்பட வேண்டும். இது எங்கள் தாய்நாடு. நமது மூதாதையர்கள் நம்பிக்கைக்கு அணிகலனாய்த் திகழ்ந்தார்கள். அந்த நம்பிக்கையைத் தொடரும்வகையில் எமது வாழ்வு அமைதல் வேண்டும்.

    பல்கலைக் கழக பிரதி உபவேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பேராசிரியர் எம்.ரி. மர்ஹர்தீன், பொறியியலாளர் எம்.எப்.எம். சப்ரி ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்தத் திட்டம்; என்.எம். அமீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top