• Latest News

    December 16, 2013

    கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு அவசியம்

    எம்.சஹாப்தீன் ;
    கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்ற காணிப் பிரச்சினைக்கு கிழக்கு மாகாண சபையும், அரசாங்கமும் காலம் தாழ்த்திக் கொண்டு செல்லாது விரைவாக தீர்வினை முன் வைக்க வேண்டும். இல்லையாயின் அரசாங்கத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் மீள் பரிசிலனை செய்ய வேண்டி ஏற்படுமென்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருந்தார்.
    முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவு திட்டத்தினை பயன்படுத்திக் கொள்வதற்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் முன் வருதல் வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எம்.தவம் அறிக்கை ஒன்றின் மூலமாக அழைப்பு விடுத்தார்.
    முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகளை முன் வைக்க வேண்டும். சமூகத்திற்காக பதவிகளையும் தூக்கி வீசுவதற்கு தயாராக உள்ளோம் என்று கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் கிழக்கு மாகாண சபையின் அமர்வொன்றின் போது, நீண்டதொரு சூளுரையாற்றினார்.
    திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் (01.08.2013) கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வடிகான் அமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பிரியந்தபத்திரனவோடு காரசாரமான வாக்குவாத்தில் ஈடுபட்டு, சண்டையிட்டுக் கொண்டார்.
    கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் அன்வர் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை பற்றி அதிக தடவைகள் குரல் கொடுத்துள்ளார்.
    இதே வேளை. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்;கிம், செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி மற்றும் ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை பற்றி பேசியுள்ளார்கள்;: பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
    இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின்  காணிப் பிரச்சினை பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருந்தாலும், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இன்னமும் முழுமையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் காணப்டுகின்றார்கள்.
    கிழக்கு மாகாண சபையில் 2014ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் விவாத்திற்கு எடுத்துக் கொண்ட போது, கிழக்கு மாகாண சபையின் காணி அமைச்சின் விவாத்தின் போது, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் உறுப்பினர்கள் பேசவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றன.
    மக்கள் பிரதிநிதிகளின் சபையில் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு முடியாதென்றால், அச்சபைக்கு மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக ஏன் இவர்களை அனுப்பினார்கள் என்பதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் மட்டுமன்றி ஏனைய பிரச்சனைகளுக்கும் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது பற்றி கூட்டங்களில் விவாதிக்கின்றார்கள். ஆனால், பேச வேண்டிய இடத்தில் பேசுவதில்லை. இதில், எந்தக் கட்சிக்கும் வேறுபாட்டடைக் காண முடியாது.
    முஸ்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் கதைக்க வேண்டியதை பொதுக் கூட்டங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மாகாண சபையில் கதைக்க வேண்டியதற்கும் இதே கதிதான் நடந்து கொண்டிருக்கின்றன.
    எதிர் காலத்தினைப் பற்றி சிந்தித்துக் கொள்ளாத தலைவர்களினால் ஒரு போதும் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது. தற்காலிக சலுகைகளுக்காக அலைமோதிக் கொள்ளளும் அரசியல் தலைரமைகள் அதனையே சமூகத்திழன் உரிமைகளாகவும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
    கிழக்கு மாகாண சபையில் 2014ம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தின் போது காணி அமைச்சின் விவாதத்தில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களுக்குள்ள காணிப் பிரச்சினைகள் பற்றி ஏன் பேசவில்லை என்று ஆளும் தரப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வரவு – செலவு திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் திருகோணமலையில் கூடிய போது, அங்கு ஒரு கொமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கொமிட்டி காணிப் பிரச்சினைகள் பற்றி தகவல்களைப் பெற்று தீர்வொன்றினை முன் வைப்பதற்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்தற்காக இதற்கு முதலும் பல கூட்டங்கள் கூடியுள்ளன. கொமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கொமிட்டிகள் நியமிக்கப்பட்டனவே அன்றி, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
    அந்தக் கொமிட்டிகள் அமைக்கப்பட்டதன் பின்னரும் பலதரப்பட்ட பெயர்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டுள்ளன.
    கிழக்கு மாகாணத்தில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் பலாத்காரமாக சுவிகாரம் செய்யப்பட்டு வருகின்றன.
    முஸ்லிம்களின் காணிகளை கபளிகரம் செய்து கொள்வதற்கு பௌத்த பேரினவாத போக்குடைய பௌத்த தேரர்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். அவர்களுக்கும் முஸ்லிம்களின் காணிகளுக்கும் எநத் சம்பந்தமும் கிடையாது. ஆனால், முஸ்லிம்களின் காணி என்ற ஒரோயொரு  காரணத்திற்காக முஸ்லிம்களின் காணிகளை பறித்துக் கொள்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் காணிகளில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது. ஆனால், வேறு எந்த இனமும் இருக்கலாமெனறறு முஸ்லிம் விரோதப் போக்கினை கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பிபல் இதற்கு முதல் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதிருக்கின்ற நிலையில், இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வழங்குகின்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமென்று நம்புவதற்கில்லை.
    தற்போதைய இலங்கையின் சூழ்நிலையில் பௌத்த கடும்போக்கு பேரினவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றன. அவர்கள் மிகவும் பகிரங்கமாகவே அரசாங்கத்திற்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், அவர்களின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றன.
    ஆதலால், முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றவர்களாக பௌத்த கடும்போக்கு பௌத்த தேரர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு பின்னால் உள்ள பௌத்த இனவாத வாக்குகளை கருத்திற் கொண்டு, அரசாங்கமும் நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
    முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகளுக்கு ஓரளவிற்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால், முஸ்லிம்களின் கட்சிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். சமூகப் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு அரசியல் இலாபம் அடைந்து கொள்வதனை தவிர்த்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனை ஏற்பட வேண்டும். இது போன்ற நல்ல அம்சங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் காண முடியாதுள்ளன.
    இதனால்தான், இன்று எல்லோரும் முஸ்லிம்களின் தலையில் கொச்சிக்காய் அரைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால், துணிவும், நற்சிந்தனையும், சமூகப்பற்றும், புத்திக் கூர்மையும் உள்ள அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கும், ஏனைய சபைகளுக்கும் அனுப்பப்படல் வேண்டும்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு அவசியம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top