• Latest News

    December 15, 2013

    நெல்சன் மண்டேலா விடைபெற்றார்; நல்லடக்கம் நிறைவேறியது

    மண்டேலாவுக்கான இறுதி மரியாதை
    மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியவர் நெல்சன் மண்டேலா. இனவெறியை எதிர்த்து 27 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த மண்டேலாவை தென்னாபிரிக்க தந்தை என்று போற்றுகின்றனர்.

    அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்ற மண்டேலா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 6ஆம் திகதி உயிரிழந்தார். மண்டேலா மறைவையடுத்து பல நாடுகளில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு அந் நாடுகளின் தேசிய கொடிகளும் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.

    மேலும் மண்டேலா மறைவையடுத்து 10 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என ஜனாதிபதி ஜாக்கோப் ஜூமா அறிவித்திருந்தார். இந்நிலையில் மண்டேலா நினைவு இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அரசு கடந்த 10ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

    அதிபர் ஜாக்கோப் ஜூமா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஜனாதிபதி பிரணாப், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ், கிளின்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். உலகிலேயே மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்தது இன்று மண்டேலாவின் சொந்த கிராமமான கிழக்கு கேப் டவுனில் இருக்கும் குனு கிராமத்தில் அவரது சொந்த வீட்டின் அருகே நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று இலட்சக்கணக்கான தென்னாபிரிக்க மக்கள் சாலையின் இரு புறமும் திரண்டு நின்று கண்ணீரோடு வழியனுப்பி வைக்க மண்டேலாவின் உடல் அரச வாகனத்தில் குனுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தங்களது நேசமிகு தலைவரின் இறுதி ஊர்வலத்தை பூக்கள் தூவியும், கண்ணீரால் நனைத்தும் வழியனுப்பிய காட்சி இந்த நூற்றாண்டில் இனவெறிக்கு எதிராக போராடிய ஒரு தலைவனுக்கு கிடைத்த உண்மையான பாராட்டுகள் என உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில் தென்னாபிரிக்க மரபுப்படி, அரசு முறைப்படியும் நல்லடக்க நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணிக்கே தொடங்கின. இதில் மண்டேலாவின் குடும்பத்தினர்இ நண்பர்கள், மகள்கள் மகாசிவி மற்றும் லிண்டிவி சிசிலு, அவரது மனைவி கிரேசா மாச்சல், முன்னாள் மனைவி வின்னி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், நிகரகுவா துணை அதிபர், தான்சானியா முன்னாள் அதிபரின் மனைவி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    தென்னாபிரிக்கா முழுவதிலும் இருந்து பிரமுகர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் ஊர்வலமாக திரண்டு வந்து மலர்க்கொத்துகளையும், பூக்களையும் வாரி இறைத்தனர்.

    பின்னர் 21 குண்டுகள் முழங்க மதியம் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. உங்களை பத்திரமாக அனுப்பி வைத்து உள்ளோம். அங்கே உங்கள் ஆத்மா ஓய்வு பெறட்டும் என அதிபர் ஜாக்கோப் ஜூமா உருக்கமாக குறிப்பிட்டார்.

    'பயணம் முடிந்தாலும் வழித்தடம் தொடரும்'

    நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கான நீண்ட பயணம் முடிந்து விட்டாலும் அவரது வழித்தடங்களை பின்பற்றி கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தென்னாப்ரிக்காவின் தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா கூறினார்.

    தென்னாப்ரிக்க மக்கள் அடுத்தவர்கள் மீது குற்றஞ்சொல்வதை நிறுத்திவிட்டு, மண்டேலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, அவர் எப்படி நாட்டை வழி நடத்தினாரோ அதுபோல நாட்டை வழிநடத்த வேண்டும் என்று அவரது பேத்தி நண்டி தெரிவித்துள்ளார்.

    மண்டேலாவுடன் சிறையில் இருந்த அஹ்மத் கத்ராடா, தான் ஒரு சகோதரனை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை இப்போது சூனியமாக உள்ளதாகவும் பிரச்சனைகள் என்றால் யாரிடம் செல்வது என தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.













    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நெல்சன் மண்டேலா விடைபெற்றார்; நல்லடக்கம் நிறைவேறியது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top