பத்து நாட்களுக்கு முன்னர்
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய
சமிக்ஞைகள் தனது ராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, இப்போது அண்டை நாடான
தாய்லாந்து கூறுகிறது.
இந்த சமிக்ஞைகள் மலாக்கா ஜலசந்தியை நோக்கி அந்த விமானம் மேற்குப்புறமாகப் பறந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதாக அது கூறியது.
மலேசியா தகவல் கோரி முதலில் கொடுத்த வேண்டுகோள் குறிப்பானதாக இல்லாமல் இருந்ததால் இந்தத் தரவை இப்போது வரை வெளியிடவில்லை என்று தாய்லாந்து விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் மோண்டோல் சுச்சோகோர்ன் கூறினார்.
தேடும் முயற்சியில் மேலும் 9 சீனக் கப்பல்கள்
இதனிடையே, காணாமல் போன இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக, சீனா, மேலும் 9 கப்பல்களை புதிய பல பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறது.
இந்தக் கப்பல்கள் வங்களா விரிகுடாவுக்கு
தென்கிழக்குப் பகுதிக்கும், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதிகளுக்கும்
அனுப்பப்பட்டிருக்கின்றன.
இந்த விமானத்தைத் தேடும் பணியில் இப்போது 26 நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன.
தேடும் பணி இப்போது ஆஸ்திரேலியா அளவுள்ள ஒரு பகுதியில் நடத்தப்படுகிறது.
சீனக்கப்பல்கள் சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை
அதிகாலை புறப்பட்டு, சுமார் மூன்று லட்சம் சதுர கிமீ பரப்பளவுள்ள பகுதியில்
தேடுதல் வேட்டையை நடத்தச் சென்றிருப்பதாக, சீன அரசச் செய்தி நிறுவனமான
ஷின்ஹுவா தெரிவித்தது.
மாலத்தீவில் தாழ்வாகப் பறந்த விமானம்?
மற்றுமொரு திருப்பமாக, மாலத்தீவில் சிலர் இந்த
விமானம் காணாமல் போன நாளில், குடா ஹுவாதோ தீவில் வானில் மிகவும் குறைவான
உயரத்தில் ஒர் விமானம் பறந்துகொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறியதை
அடுத்து, மாலத்தீவு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர் என்று
ஏ.எப்.பி செய்தி நிறுவனம் கூறியது.
ஆனால் இது போன்று முன்னர் கிடைத்த பல தகவல்கள் சரியானதல்ல என்று பின்னர் தெரியவந்தது.
விமானத்தைத் தேடும் இந்த முயற்சி இப்போது உலகம்
முழுவதும் சுமார் 2.24 மிலியன் சதுர கடல் மைல்கள் பகுதியில் நடப்பதாக
மலேசிய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, நியுசிலாந்து,
கொரியா, ஜப்பான் , ஐக்கிய அரபு எமிரேட்டுகள் உட்பட பல நாடுகள் விமானங்கள்
மற்றும் கப்பல்களை இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபடுத்தியிருக்கின்றன.
இந்த விமானத்தில் பயணித்த 153 சீனப் பயணிகளின்
உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தங்களுக்கு சரியான தகவல்கள் தரப்படாவிட்டால்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
BBC-
0 comments:
Post a Comment