• Latest News

    March 19, 2014

    முஸ்லிம், கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு – நிமல்கா பெர்னாண்டோ

    இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் எடுத்துரைக்கப்பட்டன.மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவையின் பிரதிநிதி கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்ததாவது:

    “இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ குழுக்களுக்கு எதிரான வன்முறைகளில் எம்மால் அதிகரிப்பைக் காண முடிகின்றது. குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் தவறியுள்ளது. அமைப்பின் சிபாரிசுகளை கவனத்திற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள முடிவை வழங்குவதற்கு நிர்வாகத்தினரால் சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்.”

    இலங்கை அரசாங்கம் சார்பாக பேசிய எம்.எல்.எப் மஃபூஸா தெரிவித்ததாவது:

    “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு திட்டத்திற்கு அமைய, இந்த சவால் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மதம் மற்றும் இனங்கள் மீதான வன்முறைகள் காரணமாக மனித உரிமை மீறப்படுபவர்களின் துன்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

    குற்றவியல் தண்டனைக் கோவை சட்டத்தின் 2007 ஆம் சரத்தின் 56 ஆவது உறுப்புரைக்கு அமைவாக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான சட்டத்திலும் மதங்கள் மீது குரோதம் ஏற்படும் வகையில் செயற்படுதல், தூண்டுதல், வித்தியாசமாக நடத்துதல், எதிர்ப்பு மற்றும் வன்முறைகள் என்பன குற்றங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு பகுதியாக சிறுபான்மை மதங்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றோம்.”
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம், கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு – நிமல்கா பெர்னாண்டோ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top