• Latest News

    March 19, 2014

    பொதுபலசேனாவின் ஞானசார தேரர் மிகவும் கேவலமாகவும், கீழ்தரமாகவும் நடந்து கொள்வது கவலையளிக்கின்றது.

    எங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு இந்த பலசேனாவினர்க்கு அதிகாரம் அளித்தவர்கள் யார்? ஹக்கிம் கேட்கின்றார் 

    பண்பட்ட பௌத்த தேரர்கள் தமது பக்தர்களுக்கு உபன்னியாசம் (அனுசாசனம்), நல்லுபதேசம் வழங்கும் பொழுது மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் நடந்து கொள்வதைத்தான் பொதுவாக நாங்கள் காண்கிறோம். அதற்கு முற்றிலும் மாற்றமாக, பொதுபலசேனாவின் ஞானசார தேரர் மிகவும் கேவலமாகவும், கீழ்தரமாகவும் நடந்து கொண்டது கவலையளிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

    மேல் மாகாண சபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெயங்கல்ல கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (18) இரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

    பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் மற்றும் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர்களும், ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

    செய்தியாளர் மாநாடு ஒன்றில் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நடந்து கொண்ட விதம் குறித்து அதனைக் கண்ணுற்றவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தவர்களாக காணப்பட்டனர்.

    ஆவேசத்துடன், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக அவர் என்னைப்பற்றி கீழ்தரமான வார்த்தைகளில் கூறியவற்றை பார்த்துக்கொண்டிருக்கவே பலருக்கு சகிக்கவில்லை எனக் கூறினார்கள்.

    எங்களைப் பொறுத்தவரை பௌத்த தர்மத்தில் கருணை, அன்பு (மைத்திரி) பொதிந்திருப்பதாகத்தான் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், சங்கைக்குரிய பௌத்த பிக்கு எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர், இவ்வாறு கேவலமான, கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களை உச்சரிப்பதன் ஊடாக, கண்ணியமான வார்த்தைகளை உதிர்க்கும் இந் நாட்டின் பண்பட்ட பௌத்த குருமார்கள் கூட உண்மையிலேயே கவலையடைவார்கள் என்று நம்புகிறேன்.

    அத்தகைய பண்பட்ட பௌத்த தேரர்கள் தமது பக்தர்களுக்கு உபன்னியாசம் (அனுசாசனம்), நல்லுபதேசம் வழங்கும் பொழுது மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் நடந்து கொள்வதைத்தான் பொதுவாக நாங்கள் காண்கிறோம்.
    அதற்கு முற்றிலும் மாற்றமாக, இந்த பொதுபலசேனாவின் தேரர் மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்டது எங்களுக்கு கவலையளிக்கிறது.

    இந்த நாட்டில் பௌத்த தத்துவம், நல் வார்த்தைகளையே (சம்மாவாசா)  பயன்படுத்த வேண்டும்  என்று குறிப்பிடும் பொழுது, குரோத மனப்பான்மையுடனும், வெறுப்புணர்ச்சியுடனும் கீழ்தரமான அசிங்கமான வார்த்தைகளை அவர் பாவித்த போதிலும் கூட, பௌத்த சமயத்திற்கு இந் நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் வழங்கும் கண்ணியமும், பௌத்த தேரர்களுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதையும் ஒரு போதுமே குறைந்து விட மாட்டாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சமயத் தலைவர்களைப் போன்றே அரசியல்வாதிகளான எங்களுக்கும் ஒரு மகத்தான பொறுப்பு இருக்கிறது.

    கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கத்துக்கு நாங்கள் நெடுகிலும் வலியுறுத்தி வருகிறோம்.
    பாதிப்புக்குள்ளாகியிருக்கும் எமது சமூகத்தைப் பற்றி சர்வதேசத்திற்கு கருத்துரைத்த காரணத்திற்காக திட்டித் தீர்க்கும் அளவிற்கு நாங்கள் எந்தவிதமான துரோகத்தையும், பாவத்தையும் செய்துவிடவில்லை.
    நாங்கள் ஒருபோதும் குரோதத்தையும், வெறுப்புணர்வையும் போஷித்து வளர்ப்பவர்கள் அல்லர் என்பதை இந் நாட்டின் பௌத்த பெருங்குடி மக்களுக்கு மிகவும் வெளிப்படையாக கூறிக்கொள்கின்றேன். அவர்களும் அதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    இந்த நாட்டில் நல்லிணக்கமும், சமாதானமும், சௌஜன்ய சக ஜீவனமும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதுவே எமது அவாவாகும். அவை தொடர்பில் நாம் உரிய கவனம் செலுத்தி வரும் இவ்வாறான காலகட்டத்தில் பொதுபலசேனா தேரரின் ஆத்திரமூட்டும் வாசகங்கள் உண்மையிலேயே கவலைக்குரியவையாகும்.

    2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த பொதுபலசேனா அமைப்பினர் மேற்கொண்டு வரும் இனவிரோத, சமய விரோத நடவடிக்கைகள் நாட்டை அதளபாதாளத்திற்கு இட்டுச்செல்லக் கூடியவை என்பதை தொடர்ச்சியாக நாம் கூறிவருகிறோம். அந்த ஆபத்திலிருந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டுமானால் நாம் மிகவும் தைரியமாக உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும்.

    எங்களை அச்சுறுத்தும் விதத்தில் அவ்வளவு தூரம் மோசமாக தேரர் கதைப்பதானால், அதனை அறவே அலட்டிக்கொள்ளாமலும், சற்றேனும் பொருட்படுத்தாமலும், கலக்கம் அடையாமலும் நாம் இந்த நாட்டில் சம உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற  வகையில் வெளிப்படையாகவும், மனந்திறந்தும் கதைப்பதற்கானதும், கருத்துகளை தெரிவிப்பதற்கானதுமான எங்களது போராட்டத்தை மிகவும் துணிச்சலுடன் முன்னெடுப்போம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    எங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு இந்த பலசேனாவினர்க்கு அதிகாரம் அளித்தவர்கள் யார் என்பதை கேட்பதற்கான உரிமை இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்த எங்களுக்கு இருக்கின்றது.

    அனைத்தையும் இழந்த ஒரு சமூகமாக நாங்கள் வாழ முடியாது என்ற உணர்வோடு தான் கதைக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைந்து விட்டோம் என்பதற்காகவும், யுத்தத்திற்கு முடிவு கட்டிவிட்டோம் என்பதற்காகவும் கர்வத்தோடும், ஆணவத்தோடும் சில விடயங்கள் அணுகப்படுவதைப் பார்த்து சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அங்கலாய்ப்பு, ஆத்திரம் என்பன கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடக்கூடிய நிலைமையில் தான் அவற்றைப் பற்றி கதைப்பதற்கான நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    எனது சக அமைச்சர்களோடு தேவையற்ற விதத்தில் முரண்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக அமைச்சர்கள் சிலரும், எங்களது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் இன்று என்னை விமர்சித்திருப்பதை அறிந்தேன். ஆனால், அவர்களை நான் மாறி விமர்சிப்பதன் ஊடாக எனது அரசியல் அசிங்கப்படுவதை நான் விரும்பவில்லை.

    இன்று சமூகம் கவலைப்படுகிறது. இந்த நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் ஒற்றுமையை சீர்குலைக்கிற நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட வேண்டும். எங்களுக்குள் நாங்களே முட்டி, மோதி பழி தீர்த்துக்கொள்ளும் நய வஞ்சகத் தனத்தை நீக்கிக்கொள்ள முன்வர வேண்டும்.

    போட்டிப் போட்டுக் கொண்டு வாக்குகளை திரட்டுவதற்காக பழி பாவங்களை மேடைகளில் கொண்டு வந்து கொட்டித் தீர்க்கின்ற ஒரு காலமாக இந்தத் தேர்தல் காலத்தை சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், முதுகெலும்புடன் தலை நிமிர்ந்து நின்று சில விடயங்களை பேசியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தினால் தான் இவ்வாறான விடயங்களை நாங்கள் கதைக்கின்றோம்.

    கடந்த காலங்களில் நான் எவற்றையும் பேசவில்லை என்று குறை சொன்னார்கள். அமைச்சரவையில் இருந்து கொண்டு, தேவையான அழுத்தத்தைக் கொடுத்துப் பேசி, ஜனாதிபதியோடும் அடிக்கடி முரண்படுகின்ற நிலைமையிலும் கூட, ஊடகங்களை அணுகி அவற்றை வெளிவரச் செய்கின்ற வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவன் அல்லன் நான். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் சம்பந்தமாக அரசாங்கம் பாதகமான நடவடிக்கைகளில் இறங்க எத்தனிக்கின்ற போது, அவற்றைத் தடுக்கின்ற முயற்சியில் மிகவும் காத்திரமாக அவற்றை கையாண்டவன் என்ற அடிப்படையில் நான் மிகவும் நேர்மையாக அவை பற்றி கூறுகிறேன்.

    அரசாங்கங்களில் இருந்து என்னை வெளியேற்றவும், நானாக வெளியேறவும் நேர்ந்திருக்கிறது. எனது மறைந்த தலைவரின் காலத்தில் அவ்வாறான சந்தர்ப்பங்களில்  எதிர்க்கட்சியில் இருந்து  கொண்டும் கூட எங்களது அரசியலை செய்வதற்கு தயங்காத தலைமை என்ற அடிப்படையில் சரியான சந்தர்ப்பத்தில் தான் சரியான விடயங்களை கையாள வேண்டும். பிழையான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் சரியான முடிவும் பிழையாகிப் போய் விடும் என்பதை அவர் எங்களுக்கு அனுபவ ரீதியாக உணர்த்தியிருந்தார்.

    இன்று சரியான சந்தர்ப்பத்தில் சரியான முறையில் பேசியாக வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

    இணக்க அரசியலைப் பற்றி நாங்கள் சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் அரசாங்கத்துக்குள் இவற்றை மிகவும் சாணக்கியமான முறையில் நாங்கள் கையாண்டு வந்தோம். ஆனால், ஒரு சில இன,மத வெறியர்களின் பணயக் கைதியாக இந்த அரசாங்கம் மாறிவிடுவதில் இருந்து அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு வேறு வழி இல்லை என்ற காரணத்தினால் அதுவரை எமக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இதனை கொண்டு செல்ல நேர்ந்தது.

    2012ஆம் ஆண்டு நான் ஒரு மாத காலம் ஜெனீவாவில் தங்கியிருந்து இந்த அரசாங்கத்தின் சார்பில், அதனைக் காப்பாற்றுவதற்காக ஜெனீவா மனித உரிமை கவுன்சிலின் உறுப்புரிமை பெற்றிருந்த எட்டு அரபு நாடுகளை அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவும் வாக்களிப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை நான் செய்திருக்கிறேன். அத்துடன் ஜனாதிபதியின் செய்தியோடு அரபு நாடுகளுக்குச் சென்று அந் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

    இந்த நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும், அது இரவோடு இரவாக செய்யப்படக் கூடிய காரியமல்ல, முப்பது வருட கால யுத்தம் ஓய்ந்து நாட்டில் சமாதானம் நிலவ ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் கால நீடிப்பு தேவையென்று கேட்டிருந்தேன்.

    ஆனால், சென்ற வருடம் தான் ஜெனீவா பிரேரணையில் மத நல்லிணக்கம், மத சகிப்புத் தன்மை என்ற விடயத்தில் பாரதூரமான பாதிப்புகள் அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்றன. அதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் தவறி விட்டது என்ற பாங்கில் அந்தப் பிரேரணையில் ஓர் அம்சம் உட்புகுத்தப்பட்டது. அதற்கு முன் உள்ள பிரேரணைகளில் அடங்கியிராத ஒரு விடயம் உட்புகுத்தப்படுவதற்கான காரணம் இந்த பலசேனா இயக்கத்தின் அட்டகாசம் தான் என்பதை இந்த அரசாங்கம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இந்த பலசேனா கும்பல் இல்லையென்றால் பிரேரணைகளில் அந்த அம்சம் உள்ளடக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்ற வருடம் மாத்திரம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னூற்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறான சம்பவங்கள் தான் நாம் அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இனிமேலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத் தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதை மிகப் பெரியதொரு தேசத் துரோகமாக கூறுகிறார்கள். 1990 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கூட அவர் எதிர்க்கட்சியில் இருந்த பொழுது ஜெனீவாவுக்குச் சென்ற சம்பவத்தை நான் முன்னைய கூட்டங்களில் விபரித்திருக்கிறேன். விமான நிலையத்தில் அவர் கொண்டு சென்ற ஆவணங்களும், புகைப்படங்களும் பறிக்கப்பட்ட நிலையில் தாம் மட்டும் அங்கு சென்று வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் தெரிந்த விடயமாகும். அந்த மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி இருக்கும் நிலையில் தான் நாங்கள் அவரது அமைச்சரவையில் இருக்கிறோம்.

    இந்த நாட்டில் சீர்குலைந்து வருகின்ற மத சகிப்புத் தன்மையற்ற நிலைமையால் சிறுபான்மை சமூகங்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது அதனைத் தடுத்து நிறுத்துகின்ற எமது முயற்சிக்கு எதிராக எழுந்துள்ள இனவாத கும்பல்களின் விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதில் இனியும் காலதாமதம் செய்யக் கூடாது. எமது இந்த காரியத்தை தேசத் துரோகம் என்று யாரும் கருதுவது அர்த்தமற்றது.



    இந்தத் தேர்தலில் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பிரதிநிதித்துவத்தை மாகாண சபையில் வென்றெடுக்க முடியாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு வாக்களித்து எமது வேட்பாளர்களை மாகாண சபைக்கு தெரிவு செய்யுங்கள் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுபலசேனாவின் ஞானசார தேரர் மிகவும் கேவலமாகவும், கீழ்தரமாகவும் நடந்து கொள்வது கவலையளிக்கின்றது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top