சட்டத்தையும், ஒழுங்கையும் சரிவர நிலைநாட்டுவதிலும், சட்டத்தின் ஆட்சியை உரிய முறையில் செயல்படுத்துவதிலும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்நாட்டின் சிறுபான்மை சமுகத்தினரான முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத வன்செயல்கள் வெகுவாக உணர்த்துவதாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரெங்கினிடம்; தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் பற்றி கவனஞ் செலுத்தப்பட்டு வரும்காலகட்டத்தில் தீவிரவாத அமைப்புகள் சில இந்நாட்டு முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை மிதவாத பௌத்தர்கள் கூட ஆதரிப்பதில்லை என்று அமைச்சர் கூறினார்.
சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சுட்டிக்காட்டும்போது தம்மை நாட்டைக் காட்டிக்கொடுப்பவர் என்றும், சமூகத்துரோகி என்றும் பேரினவாத அரசியல்வாதிகள் சிலரும் ஏனைய சிங்கள பௌத்த இனவாதிகளும் குறிப்பிடுவதாகத் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம்,ஆனால், தமது கடமையையே தாம் நிறைவேற்றி வருவதாகக்குறிப்பிட்டார்;. இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக தாம் ஜெனிவாவுக்குச் சென்று தமது பங்களிப்பை உரிய விதத்தில் செய்ததாகவும் அமைச்சர் சொன்னார்.
அடிப்படைவாத முஸ்லிம்களின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்து வருவதாக கூறப்படுவதற்கு காரணம் இஸ்லாத்தின் மீதான பீதியேயாகும் என்றும், அவ்வாறு கூறப்படுவதில் உண்மைத்தன்மை இருக்குமானால், யுத்தத்தின் பின்னர் மும்மடங்காகியுள்ள உளவு பிரிவினரால் அத்தகையோரை கண்டுபிடிப்பது பெரிய காரியமாக இருந்திராது என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.
முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை கூட்டாக சந்தித்து உரையாடியதாகவும், இந்த பிரச்சினை ஒரு சமூகத்துக்கு மட்டும் உரியதல்ல என்றும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக உருவாகியுள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை விடுக்குமாறும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு வேண்டிக் கொண்டதாகவும் கூறினார்.அதற்கு ஜனாதிபதி உடனடியாகவே இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் சொன்னார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் தாம் செவ்வாய்க்கிழமை சந்தித்து இதுபற்றி கலந்துரையாடியதாகவும்அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இங்கு இடம்பெறும் நிகழ்வுகள் பற்றி தமக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளும், தகவல்களும் கிடைத்த வண்ணம் இருப்பதாக உயர்ஸ்தானிகர் கூறிய போது, நவீன விஞ்ஞான தொழிநுட்ப யுகத்தில் இணையத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஓரிடத்தில் இடம்பெறும் சம்பவம் தொடர்பான செய்திகள் நொடிப்பொழுதில் உலகமெங்கும் சென்றடைவதாக அமைச்சர் ஹக்கீம் சொன்னார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுவிட்சர்லாந்து வெளிநாட்டு அமைச்சின் மனித பாதுகாப்புப் பிரிவின் பிரதித் தலவர் ஒபோனிலெங்ஸ்கி, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிட்சேர் மற்றும் உயர் அதிகாரிகள், நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தவைருமான ரவூப் ஹக்கீமை; 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் சந்தித்து அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடினர். முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகார பணிப்பாளர் ஏ.எம். பாயிஸூம் அதில் கலந்துகொண்டார்.



0 comments:
Post a Comment