• Latest News

    July 25, 2014

    எங்களின் போர் ஓயாது: ஹாலித் மெஷால் திட்டவட்டம்

    காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ரொக்கெட் தாக்குதல் காரணமாக பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவையை இடை நிறுத்தியுள்ளன.

    இஸ்ரேலுக்கும், காஸா பளளத்தாக்கில் ஆட்சி செய்துவரும் பாலஸ்தீன ஹமாஸுகும் இடையே கடந்த 17 நாட்களாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் இதுவரை 640 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நான்காயிரத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஒரு இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இருதரப்பு சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா, எகிப்து நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரியை எகிப்திடமும், அரபு லீக்கிடமும் பேச வைத்தார்.

    ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் எப்படியாவது சண்டை நிறுத்தத்தை அமுல்படுத்தியாக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் காஸா பள்ளத்தாக்கிலிருந்து தங்கள் நாட்டின் மீது வீசப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் பிரதமர் காட்டினார். அதை கண்டு பான் கி மூன், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இன்னொரு புறம், காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி, கடல்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர்.

    இந்த ராக்கெட் வீச்சுகள், சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது. விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வில் பல்வேறு விமான நிறுவனங்களும் இஸ்ரேலுக்கான தங்களது விமான சேவையை நிறுத்தி உள்ளன.

    இஸ்ரேலில் தனது விமான சேவையை முதலில் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது.

    காஸா பள்ளத்தாக்கிலிருந்து ஹமாஸ் வீசிய ராக்கெட், இஸ்ரேலின் மிகப்பெரிய விமான நிலையமான பென் குரியன் விமான நிலையத்தின் அருகில் விழுந்தது. இதையடுத்து அங்கு 273 பயணிகளுடன் தரையிறங்க வந்துகொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பாரீசுக்கு திருப்பி விடப்பட்டது.

    இதேபோன்று அமெரிக்காவின் பெடரல் ஏவியேசன் அட்மினிஸ்டிரேசன் இஸ்ரேலுக்கு போக வேண்டிய, அங்கிருந்து வர வேண்டிய அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி உள்ளது. மேலும், ஏர் பிரான்ஸ், டச்சு ஏர்லைன் நிறுவனம் கே.எல்.எம்., ஆகியவையும் இஸ்ரேலுக்கான தங்களது விமான சேவையை நிறுத்தி உள்ளன. இது இஸ்ரேலின் சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

    எங்களின் போர் ஓயாது: ஹாலித் மெஷால் திட்டவட்டம்

    காஸாவில் நடக்கும் போரை நிறுத்த தயராக இல்லை என ஹமாஸ் இயக்க தலைவர் ஹாலித் மெஷால் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அறிக்கை ஒன்றில் அவர் கூறியதாவது, நாங்கள் போரை நிறுத்த வேண்டுமென்றால் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை இஸ்ரேல் விலக்கி கொள்ள வேண்டும்.

    எகிப்து இடையேயான ரபா எல்லையை திறக்க வேண்டும்.மேலும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இதை செய்யாமல் நாங்கள் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும் அவ்வாறு போரினை நிறுத்தினால் எங்கள் மக்களின் உயிர் தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் எனவும் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எங்களின் போர் ஓயாது: ஹாலித் மெஷால் திட்டவட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top