• Latest News

    September 27, 2014

    சர்ச்சைக்குரிய நூலக உதவியாளர் நியமனத்தை இடைநிறுத்துமாறு உத்தரவு

    அப்துல்லாஹ் ;
    அட்டாளைச்சேனை பிரதேச சபையில் வழங்கப்படவிருந்த சர்ச்சைக்குரிய நிரந்தர நூலக உதவியாளர் பதவியினை இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்ச்சைக்குரிய நியமனமானது பாராபட்சமான முறையில் வழங்கப்படவுள்ளமை குறித்து, நேற்று வெள்ளிக்கிழமை(26) ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

    இதனையடுத்தே, குறித்த நியமனத்தை இடைநிறுத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டதாக அறியமுடிகிறது.

    அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை நூலகத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளருக்கான கடமையினை மேற்கொண்டுவரும் தொழிலாளி நியமனத்தினை நிரந்தரமாக வழங்கிவிட்டு, அனுபவமும், தொழில் தகைமையும் குறைந்த நபரொருவருக்கு நிரந்தர நூலக உதவியாளர் நியமனத்தினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, கிழக்கு மாகாண ஆளுநர் - குறித்த இருவரின் நியமனத்தினையும் இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

    பாலமுனை நூலகத்தில் கடமையாற்றும் ஊழியர், தன்னை விடவும் குறைந்த தொழில் அனுபவம் மற்றும் தகைமையுடைய ஒருவருக்கு நிரந்தர நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்படவுள்ளமையினை ஆட்சேபித்து அண்மையில் ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளரிட்ட பலருக்கு கடிதங்களை எழுதியிருந்தார்.

    இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் கீழுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றும் சுமார் 600 தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிணங்க, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்;திலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் கடமையாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனம் இன்று சனிக்கிழமை(27) பிற்பகல் வழங்கப்பட்டது.

    இந்த நிலையிலேயே, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய நூலக உதவியாளர் நியமனத்தினை இடைநிறுத்துமாறும், உரிய விசாரணைகளின் பின்னர் தகுதியானவருக்கு – குறித்த நியமனத்தினை வழங்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

    கிழக்கு மாகாணசபையில் உயரிய பதவியொன்றை வகிக்கும் ஒருவர்,அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தற்காலிகமாகக் கடமையாற்றும் தனது உறவினர் ஒருவருக்கு நூலக உதவியாளர் பதவியை வழங்குவதற்காகவே, மேற்படி பெண்ணுக்கு அநீதியிழைத்ததாகவும், நியமனத்தில் குழறுபடி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    நியமனம் தொடர்பில் அநீதிழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தொழிலாளி, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில்   சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்ச்சைக்குரிய நூலக உதவியாளர் நியமனத்தை இடைநிறுத்துமாறு உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top