• Latest News

    October 17, 2014

    ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையும் நிறுத்தி வைப்பு!

    சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

    அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

    இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் விசாரணை நடைபெற்றது.

    ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்டு வரும் மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன், ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம்.

    தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

    ஜாமீன் வழங்கி உத்தரவு

    இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.

    மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும், 3 மாதத்தில் விசாரித்து  முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், 2 மாதத்திற்குள் கோப்புகளை சரிபார்த்து கர்நாடக நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்றும், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

    வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என நிபந்தனை

    மேலும் உடல் நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள 2 மாத காலத்திற்கும் ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

    மேலும் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் ஜெயலலிதா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னதாக ஜெயலலிதாவுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் பாலி நாரிமனும் இது தொடர்பான உத்தரவாதத்தை அளித்தார்.

    அதிமுகவினர் மகிழ்ச்சி

    இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், ஜெயலலிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் ஜாமீன் கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

    ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

    இதன்படி, இரண்டு மாதங்களுக்குள் வழக்கிற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மேல் ஒரு நாள் கூட அவகாசம் தரப்படமாட்டாது.

    மேலும், தங்கள் கட்சியினர் எந்த வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிபந்தனைகளுக்கு உட்படுவதாகவும், கர்நாடகா ஐகோர்ட்டில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஜெயலலிதா தரப்பில் நீதிபதிகளிடம் ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில்தான் இருக்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி

    ஜெயலலிதா வழக்கு விசாரணையையொட்டி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருந்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

    'ஜெயலலிதாவிற்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இவர் வீட்டிலேயே தான் இருக்க வேண்டும், கட்சியினரை சந்திக்க கூடாது.

    மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை ஆளுநர் ரோசையா கண்காணிக்க வேண்டும்.

    அதேவேளையில், தனது கட்சியினருக்கு தேவையான கட்டுப்பாடுகளை ஜெயலலிதா விதிக்க வேண்டும் என்று கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையும் நிறுத்தி வைப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top