• Latest News

    October 27, 2014

    வெகுஜன அமைப்புகள் மற்றும் ரணில் இடையிலான பேச்சுக்கள் இணக்கமின்றி முடிந்தது - பொது வேட்பாளர் தெரிவுக்கு ரணில் எதிர்ப்பு

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில வெகுஜன அமைப்புகளுக்கு இடையில் கோட்டே நாக விகாரையில் நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக நீதிக்கான தேசிய அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நாக விகாரையில் நேற்றிரவு 9 மணியளவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மாதுளுவாவே சோபித தேரரின் நீதிக்கான தேசிய அமைப்பு மற்றும் அத்துரலியே ரத்ன தேரரின் தூய்மையான நாளை அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    இந்த அமைப்பின் பிரதிநிதிகளை தவிர மனோ கணேசன், அசாத் சாலி ஆகிய அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்த குறித்த அமைப்புகள், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தன.

    அவ்வாறான பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற முடியும் என அமைப்பின் பிரதிநிதிகள், ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கியுள்ளனர்.

    இந்த கோரிக்கையை நிராகரித்த ரணில், எதிர்க்கட்சிகளின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதன் அவசியத்தை தெளிவுப்படுத்தியதுடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தீர்மானித்திருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட போவதாகவும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளன.

    பொது வேட்பாளர் தொடர்பாக சரியான முடிவு எட்டப்படும் வரை ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைகளுக்கு இணங்குவதில்லை என சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.

    இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நாக விகாரைக்கு வந்து மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து விட்டு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெகுஜன அமைப்புகள் மற்றும் ரணில் இடையிலான பேச்சுக்கள் இணக்கமின்றி முடிந்தது - பொது வேட்பாளர் தெரிவுக்கு ரணில் எதிர்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top