ஏ.எம். ஹூசைனி: ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி கடும்போக்குடைய பேரினவாத அமைப்புக்களுடன் பேசத் தயாராகவுள்ளது என்ற அறிக்கையை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம், அரசாங்கத்திற்கு தனது மறைமுக ஆதரவினை அவரது முகநூலில் வெளியிட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பி அகில இலங்கை இஸ்லாமிய சம்மேளனம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதானது,இந்நாட்டில் முஸ்லிம்கள் மீது பலதரப்பட்ட நெருக்குவாரங்களை சிங்கள கடும்போக்குடைய அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான உறுதியினை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
இக்கடும் போக்குடைய பேரினவாத அமைப்புக்களின் பின்னணியில் அரசின் ஆசிர்வாதம் இருக்கின்றது என்பது முஸ்லிம்களின் எண்ணமாகும். இதனால் அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.
நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. இத்தேர்தலில் தாங்கள் கட்சியின் வெற்றிக்காக பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தும் அதனை ஊவா மாகாண முஸ்லிம்கள் நிராகரித்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து அரசாங்கத்தின் மீதுள்ள தங்ளது அதிருப்தியினை வெளிக்காட்டியுள்ளதை தாங்கள் புரிந்து கொள்ளவில்லையா? எனக்கேட்க விரும்புகின்றோம்;.
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டிருந்த பிரச்சாரத்திற்கு எதிராகவும், இவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்காக யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பேரினவாத அமைப்புக்களுடன் கூட்டுச்சேர முனைகின்றனர் என்ற தங்களின் குற்றச்சாட்டின் உள்நோக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
இக்குற்றச்சாட்டின் மூலம் அரசாங்கத்திற்கான தங்களது மறைமுக ஆதரவினை வெளியிட்டுள்ளதுடன் உங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவும் செயற்பாடுகின்றீர்கள் என எண்ணத் தோன்றுகின்றது.
பொதுபல சேனாவுடன் ஜே.வி.பி, சரத்பொன்சேகாவின் கட்சி, ஹெல உறுமய போன்ற கட்சிகள் பேச முன்வராத போது, ஏன் ஐக்கிய தேசியக் கட்சி மட்டும் பேச முற்பட்டுள்ளது என்ற கூற்று தங்களின் அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை காட்டுகின்றது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment