இலங்கையில்
உள்ள முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தி
பிரச்சினையை உருவாக்க சர்வதேச சக்திகள் முனைந்துவருவதாக பொருளாதார
அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் காத்தான்குடி
பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான
நிதியுதவி 458 பேருக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்
திங்கட்கிழமை (13) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
‘இந்த நாட்டில் மீண்டும் இன முறுகலை
ஏற்படுத்துவதற்கு சர்வதேச சக்திகள் கங்கனம் கட்டி செயற்பட்டுவருகின்றன.
இதற்காக, இலங்கையில் உள்ள சில முகவர்கள் சர்வதேச சக்திகளிடம் பணம் பெற்று
ஒப்பந்த அடிப்படையில் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப
செயற்பட்டுவருகின்றனர்.
உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில்
முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அழித்தொழிக்கும் சதி
வேலையை சர்வதேச சக்திகள் செய்துவருகின்றன. அமைதியாக இருந்த ஈராக்
நாட்டிற்குள் புகுந்து அங்கு ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தி அங்குள்ள
முஸ்லிம்களை கொலை செய்தும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையிலேயே, இலங்கையில்
முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்தி ஜனாதிபதி
மீதான வெறுப்பை முஸ்லிம்களுக்குள் ஏற்படுத்த இந்தத் தீய சக்திகள்
முனைந்துள்ளன. இந்த அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தவும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ மீது எதிர்ப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தில் இந்த தீய சக்திகள்
இறங்கியுள்ளன.
இந்த தீய சக்திகளின் நடவடிக்கை தொடர்பில்
முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டுச் சக்திகளின் முகவர்களாக
இருந்து இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைபவர்கள் மீது அவதானமாக
இருக்க வேண்டும்.
இந்த நாட்டில் கொடூர யுத்தத்தை முடிவுக்கு
கொண்டுவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,அடுத்த மூன்றாண்டுகளுக்குள் வறுமை
எனும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
அதற்காக, மக்களின் வாழ்வதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின்
ஆலோசனையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில், அதற்காக ‘வாழ்வின்
எழுச்சித் திணைக்களம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திணைக்களம் இன்னும்
சில வாரங்களில் முழுமையாக செயற்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.
வறுமையிலிருந்து இந்த நாட்டை மீட்டு
நாட்டின் சகல வளங்களையும் பயன்படுத்த ஜனாதிபதி எடுத்துவரும்
முயற்சிகளுக்கு நாம் பங்களிப்புச் செய்ய வேண்டும்’ என்றார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின்
ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில்;
நடைபெற்ற இந்த நிகழ்வில்; பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர்
சிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்
ஏ.கருணாகரன், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ரூபகரன் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.-TM
0 comments:
Post a Comment