• Latest News

    October 19, 2014

    ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம் கட்சிகளின் முடிவை எதிர்பார்த்திருக்கும் முஸ்லிம் மக்கள்

    சஹாப்தீன் -
    2015 ஜனவரியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எந்த முடிவினை எடுக்கப் போகின்றன என்பதனை முஸ்லிம்கள் பெரிதும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இக்கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களான ரவூப் ஹக்கிம், றிசாத் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர்கள் தெரிவித்திருந்தார்கள். இவர்களுள் அதாவுல்லாவைத் தவிர மற்ற இரு அமைச்சர்களும் இன்றைய அரசாங்கம் பொதுபல சேன போன்ற அமைப்புக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்காது இருப்பதாக கடும்சொற்களால் தாக்கினார்கள்.

    இதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகளினாலும், அவைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் போதிய கவனம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முஸ்லிம்களிடையே பரவலாக காணப்படுகின்றன.

    மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதித் தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் குறித்துத்தான் அதிக அச்சம் உள்ளன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இன்றைய அரசாங்கத்துடன் கூடுதல் விருப்பமில்லை. ஏனெனில், முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கின்றதென்ற ஒரு பார்வையும், பேச்சும் உள்ளன. இவை தேர்தல்களிலும் பிரதிபலித்துள்ளமையை 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.
    ஆயினும், அரசாங்கத்தோடுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் சமூகத்தின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளை எடுத்துச் செயற்படுவதற்குரிய இயலுமையைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை.

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தராஜபக்ஷதான் வெற்றி பெறுவாரென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் அகட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால், ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முஸ்லிம்களின் உணர்வுகளை உணர்ந்து கொண்டதன் பின்னர் ஆப்பிழுத்து மாட்டிக் கொண்டவர்களைப் போல் மாறியுள்ளார்கள். ஊவா மாகாண சபைத் தேர்தலில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு, அரசாங்கத்தை விமர்சனம் செய்தும், முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றியும் விடியவிடிய பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இக்கட்சிகளின் இணைவை தோற்கடித்துள்ளார்கள். இக்கட்சிகளின் இணைவு ஊவா மாகாண சபையில் முஸ்லிம் ஒருவரை உறுப்பினராக பெற்றுக் கொள்ள இருந்த வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது.

    முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நடவடிக்கைகளினால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பெரும் அதிருப்தியில் உள்ளார்கள். இதனை இக்கட்சிகள் தெளிவாக உணர்ந்துள்ளன. இதனால், இக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்பு வேட்பாளரை ஆதரிப்பது என்பதனை வெளிப்படையாக சொல்லிக் கொள்ள முடியாது மெல்லவும், விழுங்கவும் முடியாதுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் தாம் எடுக்கும் முடிவு பொதுத் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாதென்பதில் உறுதியாக உள்ளன.

    இவ்வாறு, இக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் தமது முடிவுளை மக்களுக்கு தெரிவிப்பதற்கு தயங்கிக் கொண்டிருந்தாலும், மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதற்கே முடிவுகளைச் செய்துள்ளன என்பது வெளிவராத இரகசியமாகும்.

    ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக எந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும், அவரை தோற்கடிக்க முடியாது என்பதே இக்கட்சிகளின் நிலைப்பாடாகும். இவ்வாறு தமது முடிவினை அறிவித்ததன் பின்னர் முஸ்லிம்கள் இதற்கு மாற்றமாக நடந்து கொண்டால் தங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும். ஐ.தே.கவில் சிறந்த முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், அவர்களுக்கு முஸ்லிம்கள் தங்களின் அதிகபட்சமான வாக்குகளை வழங்கலாம் என்றதொரு பீதியும் இக்கட்சிகளிடம் உள்ளன. ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பெற்ற வாக்குகளை விடவும், ஐ.தே.கவில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி ஏனைய இடங்களிலும் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன.

    இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கிம் தமது கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி ஜனாதிபதித் தேர்தல் பற்றி சரியான அறிவிப்பு வராத நிலையில் எந்த முடிவினையும் தங்களின் கட்சி எடுக்காதென்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எப்போது முடிவுகளை எடுத்தாலும் மஹிந்தராஜபக்ஷவையே ஆதரிக்கும் என்பது உறுதியாகும்.

    இத்தகைய முடிவில் உள்ள இக்கட்சிகள் தங்களின் முடிவினை மக்களின் முடிவாக மாற்றுவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு மாற்றிக் கொண்டால்தான் பொதுத் தேர்தலில் உங்களின் முடிவுகளின் படியே ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானங்களை எடுத்துச் செயற்பட்டோம் என்று சொல்ல முடியும். பொதுத் தேர்தலில் வாக்குகளையும் பெறலாம் என்பது இக்கட்சிகளின் கணிப்பாகும்.

    கடந்த பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களுக்கு பின்னர் தங்களின் ஆசாபாசங்களுக்கு செயற்பட்டுவிட்டு, தற்போது மற்றுமொரு தேர்தலுக்காக தாம் நினைக்கும் முடிவுகளை எடுத்து அதனை மக்களின் தலையில் கட்டுவதற்கு மக்களின் காலடிக்கு வருவதற்கு முஸ்லிம் கட்சிக்காரர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இதன் பின்னர், மற்றுமொரு தேர்தல் வரும்போதுதான் இவர்கள் மக்களின் காலடிக்கு வருவார்கள். இவர்கள் பல தேர்தல்களில் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் பாக்கியாக இருக்கும் நிலையில் மற்றுமொரு தேர்தலில் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கேட்க உள்ளார்கள்.

    ஆதலால், முஸ்லிம் கட்சிகளிடமும், அவற்றின் பிரதிநிதிகளிடமும் தாங்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டுமாயின் எங்களின் பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்த்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதேச ரீதியாக உடன்படிக்கைகள் செய்யப்பட வேண்டும். அத்தகைய உடன்படிக்கைகளின் பிரதிகள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளுக்கு ஏமாந்த கதைகள் இனியும் இடம்பெறாது இருப்பதற்கு முஸ்லிம் வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

    ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசாங்கம் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை மடக்கிப் போட்டுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தம்முடனும் நாடாளுமன்ற  உறுப்பினர்களான பைசல் காசிம், தௌபீக் ஆகிய மூவருடனும் அமைச்சர் பசில்ராஜபக்ஷ பிரதி அமைச்சர் பதவி குறித்து பேசியதாகவும்,  அந்த நேரம் தலைவர் நாட்டில் இருக்கவில்லை. இருந்த போதும், தலைவருக்கு தெரியாமல் பதவி பெறுவதை நாம் மூவரும் நிராகரித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதே வேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு பேரம் பேசப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்படுகின்றன. தேர்தல்களை முன்னிட்டு, பேரம் பேசுதல் மூலமாக சமூகத்தின் தேவைகளை அடைந்து காட்டிய பெருமை மர்ஹும் அஸ்ரப்புக்கு இருக்கின்றது. அவரின் மரணத்தின் பின்னர் பேரம் பேசுதல் என்பது முழுமையாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டாலும், அவை நிறைவேற்றப்படவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்தவர்களும், சட்ட மூலங்களுக்கு கைகளை உயர்த்தி ஜனநாயக செயற்பாடுகளுக்கு பெருந் தடைகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தவர்கள் பதவிகளை மாத்திரம் பெற்றுக் கொண்டார்கள். முஸ்லிம்களின் வாக்குகள் பதவிகளுக்காகவே பேரம்பேசப்பட்டன என்பதே உண்மையாகும்.

    ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அரசியல் கட்சிகளின் பசப்பு வார்த்தைகளுக்கும், வீரச் சொற்களுக்கும், அபிவிருத்திகளுக்கும் வழங்காது, சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வெளிப்படையாக முன் வைக்கும் வேட்பாளருக்கே அளிக்க வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதனை விடவும் சமூகத்திற்காக வாக்களித்தோம் என்பதுதான் பெருமையாகும்.
    Virakesari weekly


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம் கட்சிகளின் முடிவை எதிர்பார்த்திருக்கும் முஸ்லிம் மக்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top