• Latest News

    October 15, 2014

    ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்….

    நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கப் போவதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 
     
    அத்துரலிய ரத்ன தேரரின் “தூய்மையான நாளை” அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான வரைபை அறிமுகப்படுத்தும் முக்கிய கூட்டம் ஒன்று இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

    அவ்வமயம், அந்த கூட்டத்தில் கடும் ஆவேசத்துடன் உரையாற்றிய அத்துரலியே ரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.. இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார்.

    இதனை எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்து வாக்களித்து வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அதுவரை செயல்பாட்டில் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான 17 வது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டுஇ சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டன. நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.

    ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வலுப்படுத்திய பின்பே அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்காக 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    அவ்வாறு அவர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பதற்கு தயங்க மாட்டோம். அவருக்கு எதிராக வீதியில் இறங்கி போராடவும் தயாராக இருக்கின்றோம். இதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் நாங்கள் தயார் என்றும் ஆவேசமாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் மாதுளுவாவே சோபித தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பசில் ராஜபக்ஷ,  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்பட ஆளும், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர் .
    1 3 2
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்…. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top