• Latest News

    November 20, 2014

    ஜெமீல், நிஸாம் காரியப்பர் மீதான அவதூறு செய்தி: பின்னணியில் மு.கா. வின் பெரும் புள்ளி; சதி அம்பலம்; கதை இதுதான்!

    ஏ.எல்.ஜஹான்-
    கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அம்மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலுக்கு வழங்குமாறு கோரி கல்முனை மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளருமான நிசாம் காரியப்பர், மு.கா. தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் வாயத்தர்க்கப்பட்டதாக ஒரு இணையத் தளத்தில் பிரசுரமான் செய்தியின் பின்னணியில் அக்கட்சியின் முக்கிய பெரும் புள்ளி ஒருவர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    குறித்த பெரும் புள்ளியுடன் தொடர்புடைய ஊடகவியலாளர் ஒருவரே இச்செய்தியை இணையத் தளங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    கிழக்கு மாகாண சபையின் மு.கா தலைவர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோர் மீது சேறு பூசும் வகையில் திட்டமிட்டு- முற்று முழுதாக கற்பனையில் ஒரு செய்திக் கட்டுரையை புனைந்து எழுதி அதனை இணையத் தளங்களில் பிரசுரிப்பதற்காக ஊடக மாபியாக் கும்பல் ஒன்று செயற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஆம் நடந்தது என்ன?

    கடந்த சனி, ஞாயிறு தினங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பம்பலப்பிட்டி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமான இரண்டாம் நாள் நிகழ்வில் குழுக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதித் தேர்தலில் யாராவது ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாயின் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

    இதன்போது முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்றும் கிழக்கின் முதலமைச்சர் பதவியை ஜெமீலுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை பிரதி முதல்வருமான முழக்கம் மஜீத் அவர்கள் முன்மொழிந்ததுடன் இது தொடர்பில் தலைவருடன் விரிவாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆதரித்தனர். ஆனால் ஓர் உறுப்பினர் முதலமைச்சர் பதவியை ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் பெற்றுக் கொள்வோம்- இப்போது இது பற்றி பேசத் தேவை இல்லை என்று கூறினார். எனினும் மற்ற எல்லோரும் ஜெமீலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளியிட்டனர்.

    நடந்தது இதுதான் 

    ஆனால் அப்போதே உடனடியாக இத்தகவல் மேற்படி உறுப்பினர் மூலம் குறித்த பெரும் புள்ளிக்கு தொலைபேசி மூலம் எத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    ஓரிரு இணையத் தளங்களில் கிழக்கின் முதலமைச்சராக ஜெமீல் நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தியும் பிரசுரமானது 

    அதேவேளை அன்று மாலை கிழக்கு மாகாண சபையின் மு.கா  குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சிலர் தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் கூடி நாட்டு நடப்புகள் குறித்து கதைத்துள்ளனர். இதன்போது கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதும் இருந்துள்ளார். அங்கு முதலமைச்சர் பதவி தொடர்பாக எந்த கதையும் இடம்பெறவில்லை. எல்லோரும் வழமை போன்று கதைத்துக் கொண்டிருந்து விட்டு கலைந்து சென்றுள்ளனர். 

    இந்த விடயமும் அந்த பெரும் புள்ளிக்கு எட்டியுள்ளது. உடனடியாகவே அவர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

    சிலவேளை ஜெமீலுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகிறதோ என பயந்த பெரும் புள்ளி தனது ஊடகவியலாளர்களுடன் தொடர்பு கொண்டு ஜெமீலையும் நிசாமையும் பலமாக அடிக்கும் வகையில் செய்திக் கட்டுரை ஒன்றை எழுதுமாறு பணித்துள்ளார். 

    அதற்காக மூத்த ஊடகவியலாளர் என்று பீற்றிக் கொண்டு தனது முக நூலில் ஜெமீலையும் நிசாம் காரியப்பரையும் வசை பாடிக் கொண்டு இந்த பெரும் புள்ளிக்கு வால் பிடித்து எழுதுகின்ற அந்த கிறுக்கு ஊடகரின் பங்களிப்பும் பெறப்பட்டிருக்கிறது. 

    இதன் பின்னணியில் அந்த பெரும் புள்ளி சொன்னது போல் ஒரு செய்திக் கட்டுரையை சோடித்து எழுதி தயாரித்து அனைத்து இணையத் தளங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதனை ஒரு இணையத் தளம் மாத்திரமே பிரசுரித்திருந்தது. ஏனையவை இச்செய்தியின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தி பிரசுரிப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளன.

    காரணம் அந்த செய்தியை அனுப்பியவர் இந்த பெரும் புள்ளியின் செய்திகளை வழமையாக ஊடகங்களுக்கு அனுப்புகின்ற ஊடகவியலாளர் என்பதால் இது இட்டுக்கட்டுப்பட்ட செய்தி என்பதை அவை ஊகித்துள்ளன.

    அட்டாளைச்சேனையை சேர்ந்த இந்த ஊடகவியலாளர் இந்த செய்திக்கு முன்னதாக அன்று காலை இன்னுமொரு செய்தியை எழுதி தனது இணையத் தளத்தில் பிரசுரித்திருந்தார். 

    "கிழக்கின் முதலமைச்சராக ஜெமீல் நியமிக்கப்படலாம்" எனும் தலைப்பில் போடப்பட்ட அந்த செய்தியில் இப்பதவியை ஜெமீலுக்கு பெற்றுக் கொடுக்க தலைவர் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பின்னைய செய்திக்கு வலுச் சேர்ப்பதற்காகவே இந்த செய்தி முன்கூட்டி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

    அதன் பிறகு தலைவருடன் வாய்த்தர்க்கம், அமளி துமளி என்ற செய்தியை தனது இணையத் தளத்தில் போடாமல் ஏனையவற்றுக்கு அனுப்பியுள்ளார்.

    ஆனால் வாசிக்கும் போதே குறித்த பெரும் புள்ளியின் ஊடகவியலாளர், தனது பெரியவரின் அரசியல் போட்டியாளர்களை அவதூறு செய்து கற்பனையில் சோடிக்கப்பட்ட கதையை செய்தியாக்கி அனுப்பியுள்ளார் என்று உணர்ந்து கொண்ட இணையத் தளங்கள் அதனை பிரசுரிக்கவில்லை.

    ஆனால் குறித்த பெரும் புள்ளியின் மற்றொரு ஊடகவியலாளருடன் தொடர்புடைய ஒரு இணையத் தளம் மாத்திரம் அந்த செய்தியை பெரும் பரபரப்பாக வெளியிட்டிருந்தது.

    மருதமுனையை சேர்ந்த இந்த ஊடகவியலாளர் தனது பெரியவருக்கு போட்டியான அரசியல் வாதிகள் மீது வசைபாடி அவதூறான செய்திகளை எழுதுவதிலும் அவற்றை வெளியிடுவதிலும் கை தேர்ந்த ஒருவர். அதனால் இந்த செய்தி அவருக்கு ஜுஜுபி. 

    இவர் ஒரு தினசரிப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றிய போது அந்த நிறுவனத்தினால் ஒரு முஸ்லிம் வாரப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதில் தனது பெரியவருக்கு வேண்டியளவு வால் பிடித்து செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்த இவர் பெரியவருக்கு போட்டியான அரசியல் வாதிகள் மீது இல்லாத பொல்லாத அவதூறுகளை செய்திகளாக வெளியிட்டும் வந்தார்.

    இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டோர் ஜெமீலும் நிசாம் காரியப்பரும் தான். அத்துடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பற்றியும் மோசமாக சித்தரித்து அவரை மானபங்கப்படுத்தும் வகையில் சில செய்திகளை பிரசுரித்திருந்தார். அதற்காக மானநஷ்ட ஈடு கோரி மன்சூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

    முன்னாள் பிரதி அமைச்சர் நிஜாமுதீன் இந்த ஊடகவியலாளரை ஒரு "முடாக்குடிகாரன்" என்று வர்ணித்திருந்தார்.

    இப்படி முஸ்லிம் பத்திரிகை ஒன்றை தனது பெரியவரின் அரசியலுக்காக பாவிக்க முற்பட்டு அதனை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதால் அப்பத்திரிகையை தொடர்ந்தும் வெளியிடுவதில் சிக்கலை எதிர்கொண்ட குறித்த நிறுவனம் அதனை தொடர்ந்தும் வெளியிடுவதில் இருந்தும் நிறுத்திக் கொண்டதுடன் இவரையும் அங்கிருந்து விரட்டியடித்து விட்டது.

    இதனால் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் அமைச்சில் அவர் வேலைக்கு சேர்ந்தார்.  அதேவேளை தான் பிரதி அமைச்சரானால் உம்மை எனது ஊடக இணைப்பாளராக நியமிப்பேன் என்று பெரியவர் உறுதி மொழி வழங்கியுள்ளார்.

    முஸ்லிம் காங்கிரசின் பரம எதிரியான இந்த ஊடகவியலாளர் இன்னொரு முஸ்லிம் கட்சிக்கு நூறு வீதம் விசுவாசமானவர். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் பெரும் புள்ளிக்கு தனிப்பட்ட நெருக்கம் காரணமாக அவருக்கு இரு நூறு வீதம் விசுவாசமானவர்.

    இதனால் இந்தப் பெரும் புள்ளி தான் சார்ந்த கட்சியையும் அதிலுள்ள முக்கியஸ்தர்களையும் இலாவகமாக தாக்கி எழுதுவதற்கு இந்த முடாக் குடிக் காரரை பயன்படுத்தி வருகின்றது.

    அந்த வரிசையிலேயே ஜெமீலையும் நிசாம் காரியப்பரையும் போட்டுத் தாக்கி அவர்களை கட்சிப் போராளிகள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் செல்லாக்காசாக மாற்ற வேண்டும் என்ற பாரிய சதியை தீட்டி- அந்த இணையத் தளத்தில் அபாண்டமான முறையில் கட்டுக் கதைகளைப் புனைந்து செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தப் பெரும் புள்ளி.

    இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசில் குழப்பம், கட்சிக்குள் பிளவு என்றெல்லாம் பர பரப்பாக கதை அடிபடும் அதேவேளை அதனை சாட்டாக வைத்து தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இந்த பெரும் புள்ளி முயற்சித்து வருவது கட்சித் தலைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் தலைவர் கடுமையாக விசனம் அடைந்துள்ளார் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தனது தொகுதியில் தான் மட்டும் தனிக்காட்டு ராஜாவாக இருந்து ஆள வேண்டும் என கங்கணம் கட்டி செயற்படுகின்ற இந்த பெரும் புள்ளியின் சதி அம்பலத்திற்கு வந்திருப்பது அவரது காதுக்கும் எட்டியிருப்பதாக அறியக் கிடைக்கிறது.

    இப்போது அவரது சதி நடவடிக்கை அம்பலத்திற்கு வந்துள்ளதால் அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று தலைவரிடம் சத்தியம் செய்ய தூது அனுப்பியுள்ளதாம் இந்தப் பெரும் புள்ளி.

    இந்த பெரும் புள்ளியின் அடுத்த நகர்வுகள் எப்படி அமையும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜெமீல், நிஸாம் காரியப்பர் மீதான அவதூறு செய்தி: பின்னணியில் மு.கா. வின் பெரும் புள்ளி; சதி அம்பலம்; கதை இதுதான்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top