• Latest News

    November 20, 2014

    ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

    ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீகொத்தா சென்றடைந்த பின்னர் அதுகுறித்து ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு செய்தியாளர்களை சந்திக்கவும் வசந்த சேனநாயக்க திட்டமிட்டுள்ளார்.

    இதற்கிடையே வசந்த சேனநாயக்க ஸ்ரீகொத்தாவை சென்றடையும் முன்னர் அவரைத் தடுத்து அழைத்து வர ஆளுங்கட்சியின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பாதுகாப்பு புடைசூழ பிட்டகோட்டே பிரதேசத்தில் நிலைகொண்டுள்ளனர்.

    அப்பகுதியில் உள்ள அனைத்துப் பாதைகளிலும் வசந்த சேனநாயக்கவின் வருகையைக் கண்காணிப்பதற்கென புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    எக்காரணம் கொண்டும் வசந்த சேனநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விடக் கூடாது என்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியுடன் இருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

    வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப்போகும் தகவல் சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கு கசியாத நிலையில் தமிழ்வின் மாத்திரம் குறித்த செய்தியைப் பிரசுரித்திருந்தது.

    அரசாங்கத்தின் பலத்த தடைகள், கட்டுப்பாடுகளை மீறி ஸ்ரீகொத்தாவை சென்றடைந்த வசந்த சேனநாயக்கவுக்கு அங்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வசந்த சேனநாயக்க, ஊடகவியலாளர் சந்திப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

    தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் தற்போதைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே வசந்த சேனநாயக்கவை இடைநடுவில் தடுத்து அலரிமாளிகைக்கு அழைத்துவரும் பொறுப்பை ஏற்றிருந்த அமைச்சர்கள் இருவரும் வெறுங்கையுடன் அலரிமாளிகைக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்து கடுமையான வார்த்தைகளில் அர்ச்சனை கிடைத்திருப்பதாக அலரிமாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஐக்கிய தேசியக்கட்சியில் வசந்த சேனாநாயக்க இணைவு

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொண்டார்

    இன்று மாலை அவர் இந்த அறிவித்தலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து வெளியிட்டார்

    ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் விரைவில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்திற்குள் பாரிய பிளவும்: வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

    ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பலர் விலக தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    20 முதல் 28 அமைச்சர்கள் அரசாங்கத்தில் வெளியேற உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை அரசாங்கத்துடன் இணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

    எனினும் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முயற்சித்து வருவது உறுதியாகியுள்ளது

    இவர்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் மாத்திரமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் அடங்குவதாக தெரியவருகிறது.

    அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தாங்கி கொள்ள முடியாத பல சம்பவங்கள் நடக்கும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    நவின் திஸாநாயக்க விவாதத்தில் பங்கேற்கவில்லை

    முகாமைத்துவ மீளமைப்புத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க நேற்று தமது அமைச்சுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தின் போது பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நவின் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

    இந்தநிலையிலேயே அவரும் தமது அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top