சஹாப்தீன் -
மஹிந்தராஜபக்ஷ மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமென்று உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்தராஜபக்ஷ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி என்பது எந்த வேட்பாளருக்கும் இலகுவானதாக இருக்கப் போவதில்லை. சிறுபான்மையினரின் வாக்குகள்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றவரை தீர்மானிக்க இருக்கின்றதென்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மஹிந்தராஜபக்ஷ மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமென்று உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்தராஜபக்ஷ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி என்பது எந்த வேட்பாளருக்கும் இலகுவானதாக இருக்கப் போவதில்லை. சிறுபான்மையினரின் வாக்குகள்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றவரை தீர்மானிக்க இருக்கின்றதென்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் அரசியலில் பல தடவைகள் சிறுபான்மையினர்தான் ஆட்சியை தீர்மானித்துள்ளார்கள். அத்தகையதொரு சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தை சிறுபான்மையினக் கட்சிகள் எவ்வாறு கையாளப் போகின்றதென்பதில்தான் அக்கட்சிகளின் எதிர்காலமும், அக்கட்சிகளுக்கு சமூகத்தின் செல்வாக்கும் அமைய இருக்கின்றது.
இந்தவகையில், இலங்கையில் சுமார் 23 இலட்சம் முஸ்லிம்கள் உள்ளார்கள். இவர்களில் சுமார் 11 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இத்தொகை வாக்குகளை வைத்துள்ள முஸ்லிம் சமூகத்தினை சமூக, அரசியல், மதத் தலைவர்கள் சரியாக வழிப்படுத்தினால், ஆட்சியாளர்களை தீர்மானிக்கலாம். பௌத்த இனவாதத்தை நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் தலைமைகளுக்கு பாடம் கற்பிக்கலாம்.
இன்று எந்தத் தேர்தல் வந்தாலும் முஸ்லிம்களின் வாக்குகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளிhனலும், கட்சிகளினாலும் சிதறடிக்கப்படுவதாகவே இருக்கின்றது. ஆட்சியை தீர்மானிக்கின்றவர்களாக இருந்த முஸ்லிம் வாக்குகள், மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்களின் வாக்குகளுக்கு பெறுமதியில்லாமல் போயுள்ளன. பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப முஸ்லிம் அரசியலவாதிகளும், கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை காண்கின்றோம். இவ்வாறு செயற்பட்டதன் விளைவுதான், முஸ்லிம்களின் பெரும்பான்மை செல்வாக்கைப் பெற்ற கட்சி என்று போற்றப்பட்ட கட்சி, ஊவா மாகாண சபைத் தேர்தலில் அதனை இழந்து நிற்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாது பௌத்த இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு மறைகரமாக உத்தாசை வழங்கியவர்கள், அந்த அமைப்புக்களின் பின்னால் உள்ள வாக்குகள் தமது வெற்றிக்கு தேவைப்படுமென்று கூட்டல், கழித்தலில் ஈடுப்பட்டவர்கள், முஸ்லிம் சமூகத்தின் மீது அன்பும், பாசமும் காட்டுவதனை காண்கின்றோம். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது, அவற்றிக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட போது, அவைகள் தாக்கப்படும் போது, எதுவும் நடக்கவில்லை. என்னிடம் எந்த முஸ்லிம் தலைவரும் இவைகளை பற்றி சொல்லவில்லை என்றெல்லாம் சொன்னவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை கேட்கின்றார்கள்.
நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் கடமைக்கு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம்களின் தேவைகள் உணரப்பட்டுள்ளது. பொது பல சேன போன்ற அமைப்புக்கள் தங்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை அடக்கி வாசித்துக் கொண்டும், பெரும்பான்மை பௌத்த சமூகம் பாதிக்கப்படாத வகையில் சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இவைகள் யாவும் தேர்தலுக்காக என்பதனை சாதாரணமான ஒருவராலும் கூட உணர்ந்து கொள்ளலாம்.
சுமார் 11 இலட்சம் வாக்குகளைப் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் அரசியல் கட்சிகளின் சுயநலப் போக்குகளுக்கு பலயாகிக் வருவதனை தடுக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும், மதத் தலைவர்களுக்கும், சமூக அமைப்புக்களுக்கும் இருக்கின்றது. இதனை செய்வது இத்தரப்புக்களின் கடமையுமாகும். ஆனால், இன்று முஸ்லிம் சமூகம் தனியே அரசியல்வாதிகளின் பொறுப்பில் விடப்பட்டிருப்பது குரங்கின் கையில் பூமாலை கொடுக்கப்பட்டதற்கு சமமாகும். எந்த சமூகத்தில் தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவார்களோ அந்த சமூகம் சீரழிவை நோக்கிச் செல்வதனை, அடுத்த சமூகத்தால் நசுக்கப்படுவதனை தவிர்க்க முடியாது. இதனையே இன்று முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களுக்கு பல படுபாதகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வந்துள்ள போதிலும், எதிர்காலத்தில் படுபாதகச் செயல்கள் நடைபெற மாட்டாதென்ற உத்தரவாதங்கள், நடவடிக்கைகள் எதுவுமில்லாத நிலையில் கூட, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் சரணாகதி அரசியலை நோக்கி சென்று கொண்டிருப்பதனை காண்கின்றோம். என்னதான் வீராப்பு பேசினாலும், அறைகளுக்குள் அடங்கியவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் உள்ளார்கள்.
ஊழல், இலஞ்சம் போன்றவற்றை செய்வதாக முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பற்றி பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. அண்மையில், தனித்துவக்கட்சி ஒன்றின் மாகாண சபை உறுப்பினர் தொழில்களை பொருட்கள் போன்று விற்பனை செய்து கொண்டிருக்கின்றார் என்று அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினர், அக்கட்சியின் உயர்பீட கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதனை, அந்த உயர்பீடமோ, அதன் தலைவரோ கண்டு கொள்ளவில்லை என்பதே வேதனைக்குரியதாகும். இந்தக் குழுவினர் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்த தகுதியுடையவர்களா? என்று கேட்கின்றோம். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள்தான் பொதுத் தேர்தலிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். இவர்களின் இழிந்த செயல்கள் கட்சிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு உதவாது. சமூகத்தின் எழுச்சிக்கும் உதவாது. இவைகளை பற்றி கவலைப்படாது, சரணாகதி அரசியலைச் செய்வதற்கு முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம்களின் அரசியலை வங்குரோத்து நிலைக்குள்ளாக்கி உள்ளார்கள்.
நாட்டின் பல பாகங்களிலும் இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள், அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம்கள் பெரும் அதிருப்திக்கும், வெறுப்புக்குமுள்ளாகி உள்ளார்கள். முஸ்லிம்கள் இன்று அடைந்துள்ள வெறுப்புக்கள் பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன், ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் நன்மைகளை கருத்திற் கொண்டு எமது கட்சி முடிவுகளை எடுக்கும். பொதுபல சேன ஹலாலில் தொடங்கி குர்ஆன் வரை பிரச்சினைகளை உண்டாக்கியது. இதனால், 20 இலட்சம் முஸ்லிம்களின் மனங்களில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கு நடவடிக்கைகளை எடுக்க தவறியதன் காரணமாக, அரசாங்கத்தின் மீதும் முஸ்லிம்களுக்கு வெறுப்பு எற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஒரு முடிவுக்கு வந்தவர்களாகவே உள்ளார்கள். பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்புக்கும், முஸ்லிம் அரசியல் தலைவர்களினதும், கட்சிகளினதும் விருப்பத்திற்கு இடையே எதிர்க் கணிய தொடர்பு இருப்பதனை அறியக் கூடியதாகவுள்ளது. இதுதான், இன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் இருக்கின்ற இடியப்ப சிக்கலாகும். கட்சியின் ஆதரவாளர்களுக்கும், தங்களுக்குமிடையே காணப்படுகின்ற இந்த முரண்பாட்டு நிலையை ஒரு சமரசத்திற்கு கொண்டு வருவதற்கு வழி தெரியாது தவித்துக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இதே வேளை, மு.கா ஜனாதிபதித் தேர்தலுக்குரிய திகதி குறிக்கப்படாதவரை யாரை ஆதரிப்பதென்று முடிவு செய்ய முடியாதென்றும், கரையோர மாவட்டம் என்றும் கோரிக்கைகளை விடுத்த போதிலும், அரசாங்கத்தரப்பினர் அதற்கு மசியவில்லை. மு.காவின் கோரிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. மு.கா தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பதனையும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதே வேளை, இவ்விரு கட்சிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுக்களுக்கு இனவாத அமைப்புக்கள் பிரிவினைவாத நிறத்தை பூசிக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை நிபந்தனைகளின்றி பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் எத்தகையதொரு போக்கை பின்பற்றுவார்கள் என்பதனைக் கூட தீர்மானிக்க முடியாதவர்களாகவே முஸ்லிம்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் உள்ளன. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், மீண்டும் முறுங்கை மரம் ஏறவிடமாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாத பரிதாபத்திற்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள், தங்களின் சரணாகதி அரசியலை செய்து, பொதுத் தேர்தலில் தங்களின் வெற்றிக்கு ஆப்பு வந்தால் என்ன செய்வதென்றும் சிந்திக்கின்றார்கள்.
இதே வேளை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சிங்ஹா கடந்த 08.11.2014 சனிக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும், மு.காவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கதையுள்ள இன்றைய சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பு இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பேச்சுவார்த்தைகளின் போது என்ன விடயங்கள் ஆராயப்பட்டன என்பது பற்றி தெளிவாக அறிய முடியாதுள்ளது. ஆயினும், ஜனாதிபதித் தேர்தல், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு, முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, தங்களின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பேரினவாத கட்சிகளும், வெளிநாடுகளும் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் போது, முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும், சமூக அமைப்புக்களும் எந்தவொரு திட்டத்தையும் வகுத்துக் கொள்ளாது, அவர் வெல்லுவார், இவர் தோற்வார் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. யார் வெல்லுவார், யார் தோற்பார் என்பது முக்கியமல்ல. எங்களின் வாக்குகளினால் வெல்ல வைக்க முடியும் என்று காட்டுதல் வேண்டும். இதனைச் செய்வதற்கு முஸ்லிம் வாக்காளர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். சுமார் 70 வீதமான முஸ்லிம்களை ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்த முடியுமாக இருந்தால், நிச்சயமாக பேரினவாத கட்சிகள் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசியல் கட்சிகள் இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாதிருப்பது அரசியல் இலாபங்களுக்காகவேயாகும். முஸ்லிம்கள் ஒற்றுமைப்படும் போது, தங்களின் அரசியல் பிழைத்துவிடுமென்று கருதி, முஸ்லிம்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முன்வராது போனாலும், அதிகபட்சமான தேவைகளை பூர்த்தி செய்து தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையை ஏற்படுத்துவதற்கு வெறுமனவே ஊவா மாகாண சபைத் தேர்தலில் மாத்திரம் ஒற்றுமைப்பட்டால் போதாது. எல்லாத் தேர்தல்களிலும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமைப்படாத சமூகம் சரித்திரம் படைத்ததாக எங்குமில்லை.

0 comments:
Post a Comment