• Latest News

    November 20, 2014

    'சிங்கள மேலாதிக்கவாத சிறையிலிருந்து மஹிந்த விடுவிக்கப்படுவார்' : பசீர் சேகுதாவூத்

    எம்.எஸ்.எம்.நூர்தீன்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிங்கள மேலாதிக்கவாதி என்று காட்டி, அந்தக் கருத்துச் சிறையில் சிங்கள மேலாதிக்கவாதிகள் அடைத்து வைத்திருந்தார்கள் என்று ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

    மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் கொரிய வைத்திய முகாமை புதன்கிழமை (19)  ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

    இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

    'புதிதாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில், எங்களின் ஜனநாயகவாதியாக இருக்கின்ற இலங்கையில் பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள மற்றும் எதிர்காலத்தில் பெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கருத்துச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன்.

    இன்று இந்த அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய என்கின்ற சிங்கள பௌத்த மேலாதிக்கத்தோடு அரசியல் செய்ய விரும்புகின்ற குழு ஒன்று,  தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்ததாக அறிவித்துள்ளது. இன்று இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலை எடுத்துப் பார்த்தால், பழைய காலங்களைப் போல் இல்லை.

    சுதந்திரத்துக்கு பிற்பாடு நீண்டகாலமாக இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளும் முறுகல்களும் பிரச்சினைகளும் யுத்தமும் பிரிவினைவாதமும் கடந்த 60 வருடங்களாக மேலோங்கியிருந்தன. கடந்த 30 வருடங்களாக அது வன்முறை அரசியல் வடிமாகவும் அதற்கு முற்பட்ட 30 வருடங்கள் ஜனநாயக செயற்பாட்டு அரசியல் வடிவமாகவும் இடம்பெற்றன.

    தமிழ் அரசியலுக்கும் சிங்கள அரசியலுக்கும் இடையில் பிரச்சினை, தமிழ் அரசியலுக்கும் முஸ்லிம் அரசியலுக்கும் பிரச்சினை, சிங்கள அரசியலுக்கும் முஸ்லிம் அரசியலுக்கும் இடையில் பிரச்சினை. இவ்வாறு இந்த நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு அற்ற தன்மை நீண்டகாலமாக நிலவிவந்தது.

    இந்தச் சூழ்நிலை மெல்ல, மெல்ல வேறு வடிவங்களை எடுத்தது.

    இன்று அண்மைக்காலமாக, ஜனாதிபதித் தேர்தலை அடியொட்டிய  சூழ்நிலை மாற்றத்தை ஜாதிக ஹெல உறுமயவினுடைய  பதவிகளின் இராஜினாமாவையும் அரசிலிருந்து வெளியேறும் அரசியல் உபாதங்களையும் பார்க்கின்றபோது, சிங்கள மேலாண்மைவாதத்தை இலங்கையில் பின்பற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கின்ற குழுக்களுக்கு இடையில் பிரிவினை தோன்றியுள்ளதையே இதன் மூலம் அடையாளமாகக் காணமுடியும்.

    ஜாதிக ஹெல உறுமய என்கின்ற மேலாதிக்கச்சக்தி ஒருவித அரசியலாகவும் இன்னும் அன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரன்ஸ  தலைமையில் நடத்திய கூட்டத்தில் அதில் பங்குபற்றிய சிங்கள மேலாண்மைவாத அமைப்புக்களின் போக்கு ஒருவிதமாகவும் இவை இரண்டுக்கும் ஒவ்வாத வகையில் பொது பல சேனாவின் மேலாண்மை அரசியல்போக்கு வேறுவிதமாகவும் இருப்பதையும் நாம் காண்கிறோம்.
    இன்று தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலிருந்த  பிரிவினை சரியாக ஒற்றுமைப்படாத சூழ்நிலை, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த பிரிவினை முழுமையாக முற்றுப் பெற்று ஒற்றுமைக்கு வராத  சூழ்நிலை, முஸ்லிம்களுக்கும்  சிங்கள கடும் போக்குவாதிகளுக்கும் இடையில் புதிதாக உருவாகியுள்ள பிரச்சினைகள் முடிவுறாத சூழ்நிலையில் சிங்கள கடும்போக்குவாத மேலாதிக்கவாதிகளுக்குள் ஒரு பெரிய பிரிவினை தோற்றம் பெற்று வருவதையும் புதிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் பார்க்க முடியும். இவற்றையே  இந்த புதிய சூழ்நிலை எடுத்துக்காட்டுகின்றது.

    சிறுபான்மை மக்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகப்பெரிய சிங்கள மேலாதிக்கவாதி என்று பிரச்சாரம் செய்யப்பட்டு காட்டப்பட்டுவருகின்ற சூழ்நிலையை நாங்கள் பார்க்கிறோம்.

    பொது பல சேனாவின் வெளியேற்றமும் ஜாதிக ஹெல உறுமயவின்  இராஜினாமாவும் ஏனைய சிங்கள மேலாண்மைச் சக்திகளுக்குள் இருக்கின்ற உட்பிரச்சினையும் பிரிவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிங்கள மேலாதிக்கவாதி என்று காட்டி, அந்தக் கருத்துச் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

    எதிர்காலத்தில் எங்களின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் சகல மக்களுக்குமான ஜனாதிபதி என்பதையும் இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோருக்கும் பொதுவான மனிதர் என்பதையும் மத, மொழி வேறுபாடு அற்ற அடிப்படையில்; செயற்படக்கூடியவராகவும் நிரூபிக்கின்ற எதிர்காலம் மலரப்போகின்றது என்று நான் நம்புகிறேன்.

    நாங்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாடு சிங்கள மக்களை பெரும்பான்;மையாகக் கொண்ட நாடு. ஆனால், இது சிங்கள பௌத்த நாடு என்று சிங்கள கடும்போக்குவாதிகள்  கூறுகின்றார்கள். சிங்கள பௌத்த நாடு எனக் கூறுவது ஒரு பாசிசக் கருத்தாகும்.

    இந்த நாடு சிங்கள பௌத்த மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்று சொல்வது யதார்த்தம். சிங்கள பௌத்த நாடு என்ற அந்த பாசிசக் குறியீடை புறந்தள்ளி, இது சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களைக் கொண்ட நாடு என்கின்ற ஜனநாயக ரீதியான, யதார்த்தமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, அந்தப் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மையான  தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றாக வாழமுடியும் என்ற அரசியல் யதார்தத்தை உருவாக்கும் காலத்தை அடையமுடியுமாக இருந்தால், அதுவே இந்த நாட்டில் வாழ்கின்ற இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் வாழ நாங்கள் தயார் என்;று சொல்கின்ற சந்தர்ப்பமாக இருக்கும்' எனக் கூறினார்.
    tamilmirror
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'சிங்கள மேலாதிக்கவாத சிறையிலிருந்து மஹிந்த விடுவிக்கப்படுவார்' : பசீர் சேகுதாவூத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top