• Latest News

    November 05, 2014

    மறுபக்கம்: நடிகையை ரகசிய திருமணம் செய்த சனத் ஜெயசூரியா

    இலங்கை கிரிக்கெட் அணியின் சாதனை வீரராக சனத் ஜெயசூரியா இருந்தாலும், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
    இலங்கை அணியினை பல தருணங்களில் தனியொரு வீரராக தோளில் சுமந்த சனத் ஜெயசூரியா இறுதி 4- 5 வருடங்களில் நடந்து கொண்ட விதம், அவரின் சாதனைகளை மறக்க வைத்துவிட்டது.

    மூத்த வீரர்கள் தங்களுடைய ஆட்டத்திறன் ஓரளவு குறைகின்றது என்று தெரிகிறபோதே ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே அவர்களுக்கும், அணிக்கும் நல்லது. அதனைவிடுத்து, ஓய்வுபெற மாட்டேன் என்று அடம்பிடிப்பது புதிய வீரரொருவருக்கான இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும்.

    அதனையே, சனத் இறுதி 5 வருடங்களில் செய்து கொண்டிருந்தார். இதனால், பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக பலரும் அவரை குற்றம் சாட்டினர்.

    இதற்கு சின்ன உதாரணம், உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக தொடர்ந்தும் செயற்பட்ட ஜீவன் மென்டிஸ் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை 28 வயதில் மேற்கொள்ள வேண்டிய நிலையெல்லாம், சில மூத்த வீரர்களின் அடம் பிடிப்புக்களினாலும் நிகழ்ந்தது.

    டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது வரலாறு. அதுபோல, 15 மாதங்களுக்கும் அதிக காலம் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாத அவர், அரசியலுக்கு சென்ற தருணத்திலாவது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

    அதனையும் செய்யாமல், மீண்டுமொரு சர்வதேசப் போட்டியிலேயே ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பது ஒரு சாதனை வீரனுக்கு அழகாக அமையவில்லை என்றும், அவர் இறுதிக் காலங்களில் நடந்து கொண்ட விதம் அவரின் மீதான மரியாதையை குறைக்கவே செய்தது எனவும் குரல்கள் எழுந்தன.

    மாணவர்களை தாக்கிய சனத் ஜெயசூரியா
    இந்த ஆண்டு யூன் மாதம் சனத் ஜெயசூரியா பல்கலைக் கழக மாணவர்களைத் தாக்கியதாக ஒரு புகார் எழுந்தது.
    ருகுண பல்கலைக் கழக மாணவர்களை கும்பல் ஒன்றைத் திரட்டிச் சென்று ஜெயசூரியா தாக்கியதாக ஜனதா விமுக்தி பெரமுணா குற்றம்சாட்டியது. ஆனால் இதனை ஜெயசூரியா கடுமையாக மறுத்துள்ளார்.
    மாத்தரையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கண்காட்சி வைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த தாக்குதல் என்றும் ஜனதா விமுக்தி பெரமுணா கூறியிருந்தது. ஆனால் ஜெயசூரியாவோ கிராம மக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவே தான் சென்றதாகக் கூறினார்.
    மேலும் பல்கலைக் கழக மாணவர்களைக் கண்டித்து கிராம மக்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் உள்ளூர் எம்.பி. என்ற முறையிலேயே தான் கலந்து கொண்டதாகவும், தாக்குதல் நடந்தபோது தான் அங்கு இல்லவேயில்லை என்றும் மறுத்துள்ளார் ஜெயசூரியா.
    நடிகையுடன் ரகசிய திருமணம்
    சனத் ஜெயசூரியா 2012ம் ஆண்டு 3வது முறையாக திருமணம் செய்தார். இந்த திருமணம் ரகசியமாக நடைபெற்றது. மணமகள் மலீகா.
    மூன்றாவதாக தெரிவு செய்யப்பட்ட மனைவியும் ஒரு விமானப் பணிப்பெண் ஆவார். அதுமட்டுமல்லாது இவர் ஒரு நடிகையும் கூட. இவர் சூப்பர் சிக்ஸ் என்ற சிங்கள படத்தில் பவோடா சந்தீபனி, அருணி போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்து இருக்கிறார்.
    ஜெயசூரியாவுடன் பிரச்சனை: நியூசிலாந்திற்கு அழைக்கப்பட்ட திசர பெரேரா
    நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மை தான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர்.
    எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து அழைப்பை ஏற்கலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன். நமக்கு எங்கு அங்கீகாரம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்ய வேண்டியதுதானே. ஆனால் நான் நிறைய யோசித்தேன் கடைசியில் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்தேன் என்று திசர பெரேரா கூறியிருந்தார்.
    திசர பெரேராவுக்கும் அணித் தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கும் பிரச்சனைகள் இருந்ததாகவும், கரிபியன் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட பெரேரா அனுமதி கேட்கும் போது, ஜெயசூரியா இவரை இலங்கை ஏ அணிக்கு விளையாடுமாறு வலியுறுத்தினார் என்றும், ஆனால் இவர் ஏ அணியில் விளையாட இயலாது என்று விலகிக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
    சாதனைகளில் சனத் ஜெயசூரியா
    இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக வலம் வந்ததில் ஜெயசூரியாவின் பங்கு அதிகம். இவரும் முரளிதரனும் தான் இலங்கை அணியின் வரலாற்றை புரட்டிப் போட்டவர்களாக இருக்கும்.
    சனத் ஜெயசூரியா யூன் மாதம் 1969ல் பிறந்தார். 1989 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தத்தில் இருந்தார். 22 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி பல சாதனைகள், வெற்றிகளை பெற்றுத் தந்து இலங்கை கிரிக்கெட் அணியின் பெருமையை உலகறியச் செய்தார்.
    110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6973 ஓட்டங்களும் (340 ஓட்டங்கள் அதிகபட்சம்), 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,430 ஓட்டங்களும் (189 அதிகபட்சம்) குவித்துள்ளார்.
    ஜெயசூரியா ஆரம்பகாலங்களில் அணியில் ஒருபந்து வீச்சாளராகவே அறிமுகமானார். அனால் 1992 காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தன்னை ஒரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நிலைநிறுத்திக் கொண்டார்.
    பின்னர் 1996ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் தன் முழுத்திறமையை காட்டி அந்த ஆண்டு இலங்கை அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்ற சிறந்த முறையில் வழிகாட்டினார் என்றே சொல்ல வேண்டும்.
    சனத் அதிரடி என்ற ஒரு புது முறையால் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். இதனை யாரும் மறுக்க இயலாது. இவர் பெற்ற ஒரு சிறந்த பாராட்டு இவரது வாழ்க்கையில் என்னவென்றால் 1996 உலகக்கிண்ண தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றமையே. இதுவே1996 இலங்கை கிண்ணத்தை வெல்வதற்கு இவர் மேற்க்கொண்ட பங்களிப்பையும் காட்டி நிற்கின்றது.
    1996ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளை தொடர்ந்து அப்போதைய அணித்தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க ஓய்வு பெற 1999 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவராக சனத் நியமிக்கப்பட்டார்.
    அதனை தொடர்ந்து சிறந்த தலைவராகவும் செயற்பட்டு அணியினை வழி நடத்திச்சென்றார். ஆனாலும் 2003 உலகக்கிண்ண இலங்கை அணி பெரிதாக சோபிக்க தவறியது. இதற்கான பொறுப்பை தலைவர் என்ற முறையில் ஏற்று தனது தலைமைப்பதவியை இராஜினாம செய்து கொண்டு அணியில் ஒரு சாதாரண வீரராக செயற்பட்டார்.
    தற்போது இலங்கை அணியில் இருந்து சனத் ஜெயசூரியா ஓய்வு பெற்று விட்டாலும், தெரிவுக் குழு தலைவராக சிறந்த ஒரு பங்களிப்பை அளித்து வருகிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மறுபக்கம்: நடிகையை ரகசிய திருமணம் செய்த சனத் ஜெயசூரியா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top