• Latest News

    December 09, 2014

    இலங்கையில் முஸ்லிம் அரசியல் எழுச்சியும் அதன் இன்றைய நிலையும்

    தெற்காசிய நாடுகளுள் இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கையானது சிங்களவர், தமிழர், முஸ்லிம், இந்தியத்தமிழர், கிறிஸ்தவர்கள் மற்றும் பறங்கியர் வாழும் அழகிய நாடாகும். இங்கு பெரும்பான்மையாக சிங்களவர்களும் ஏனைய இனத்;தவர்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர். இச் சிறுபான்மை இனத்தவர்களில் முஸ்லிம்கள் அண்மைய சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 9.4மூ ஆக காணப்படுகின்றனர். இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீகமானது மிகவும் பழமை வாய்ந்ததாகவே காணப்படுகின்றது. இலங்கைக்கு அரேபியர்கள் வணிக நோக்கத்தினடிப்படையிலும், ஆதம் மலையை தரிசிப்பதற்காகவும் வருகை தந்ததன் மூலமாக முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது.

    இலங்கைக்கும் அரேபியர்களுக்குமான தொடர்பானது மிக பழமை வாய்ந்ததும் இஸ்லாத்தின் தொடர்பானது சுமார் 1400 வருடங்கள் பழமை வாய்ந்ததுமாகவே காணப்படுவது கண்கூடாகும். வர்த்தக நோக்கம் கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அரேபியர்கள் துறைமுக மற்றும் கரையோர நகரங்களில் குடியேறி சுதேசியப் பெண்களை திருமணம் செய்ததன் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகம் தோற்றம் பெற்றது.

    மதத்தில் பூரணமான பற்றும் அவர்களின் நாணயமான செயற்பாடுகளும் முஸ்லிம்கள் மீது சிங்கள மன்னர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அரச சபையில் பல முக்கிய பதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர்கள் இலங்கையை கைப்பற்றிய போது வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களை எதிரிகளாக எண்ணி முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் கண்டிய செனரத் மன்னனிடம் புகழிடம் கோரிய முஸ்லிம்களில் சுமார் 4000 பேர்களை 1626 களில் கிழக்கின் கரையோரங்களில் குடியேற்றினார். இப்பிரதேசங்களில் ஏலவே வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினருடன் முஸ்லிம்கள் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல ஒட்டி உறவாடி வாழ்ந்தனர்.இதனால் காலப் போக்கில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சமூகமாக மாற்றமுற்றனர்.

    ஆரம்ப காலங்களில் வாணிபம் மற்றும் கமத்தொழில் ஆகியவற்றுக்கு அதிக ஆர்வம் கொண்டிருந்த முஸ்லிம்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே முஸ்லிம்களிடையே அறிவியல் ரீதியான எழுச்சியும் அரசியல் சிந்தனைகளும் வேரூன்றின. பிரித்தானியர் இலங்கையின் சுதேச மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த போது முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக வாதாடிய போது முஸ்லிம்களுக்கு எதிராக சேர் பொன் இராமநாதன் 'முஸ்லிம்கள் தனியொரு இனம் அல்ல, தமிழர்களின் வழித்தோன்றல், அவர்களுக்கு பிரத்தியேகமான பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்கள் இஸ்லாமிய தமிழர்கள் என்று குறிப்பிட்டு பிரித்தானிய அரசாங்கத்திடம் மகஜர் முன்வைத்தார். இக் கருத்துக்கு எதிராக ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம் மற்றும் பாரம்பரியத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தியதுடன் முஸ்லிம்களின் அரசியல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டதுடன் வாதிட்டனர்.

    தனிப்பிரதிநிதித்துவத்திற்கான முஸ்லிம் சீர்திருத்த வாதிகளின் கோரிக்கையை அடுத்து பிரித்தானிய அரசு முதன்முதலில் 1889 இல் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக எம்.சீ. அப்துர் ரஹ்மான் அவர்களை சட்ட நிரூபண சபைக்கு நியமித்தது. மேலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடையும் பொருட்டு பல அரசியல் இயக்கங்கள் தோற்றம் பெற்றன. 1923களில் ரீ.பி. ஜாயா தலைமையிலான 'இலங்கை முஸ்லிம் லீக்', 'இலங்கை சோனகர் சங்கம்', 1903 களில் 'அகில இலங்கை முஸ்லிம் சங்கம் என்பன முஸ்லிம்களைப் பிரதிபலிக்கும் இயக்கங்களாக தம்மை மாற்றிக் கொண்டன. 1915இல் இடம்பெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் முஸ்லிம்களே என்று அன்றைய சட்ட சபையில் சேர் பொன் இராமநாதன் குற்றஞ்சாட்டினார். எனவே இக் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதிலும் முஸ்லிம்களின் தனித்துவத்தினைப் பாதுகாப்பதிலும் இவ் இயக்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. சுதந்திரத்திற்கு முன்பு இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான அரசியலுக்கு பங்களிப்புச் செய்தவர்களாக அறிஞர் எம்.சீ.. சித்திலெப்பை, ரீ.பி. ஜாயா, சேர் றாஸிக் பரீட், எஸ்.எல்.எம். அஷீர், டபில்யூ.எம்.  சஹீட் ஆகியோர்களைக் குறிப்பிடலாம்.

    இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்பு ஆரம்பத்தில் சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளான UNP, SLFP கட்சிகளிலும் பின்னர் தமிழர்களின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சமஷ்டிக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றிலும் முஸ்லிம்கள் கவரப்பட்டு தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர். விஷேடமாக UNP ஆட்சிக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அரசியல் தலைவர்களான ஏ.சி.எஸ். ஹமீத் வெளிவிவகார அமைச்சராகவும், ஏ.ஆர். மன்சூர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராகவும் தொழிற்பட்டனர். இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். ளுடுகுP அரசாங்கங்களில் கல்வியமைச்சராக கலாநிதி பதியுதீன் மஹ்மூத், போக்குவரத்து அமைச்சராக ஏ.எச்.எம். பௌஸி ஆகியோர்களைக் குறிப்பிடலாம். இக்காலப்பகுதிகளில் முஸ்லிம் பிரதேசங்களில் பல குறிப்பிடத்தக்க அபிவிருத்தி பணிகள் இடம்பெற்ற போதிலும் முஸ்லிம்களின்  உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே காணப்பட்டது. முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களால் முஸ்லிம்களுக்கென்று முதன் முறையாக தனிக்கட்சியாக 'அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி|| என்ற பெயரில் சூரியன் சின்னத்தில் உருவாக்கிய போதிலும் சந்தர்ப்ப சூழ் நிலையின் காரணமாக அக்கட்சியினால் நீடித்து நிலைத்திருக்க முடியவில்லை.

    1980களின் பின்னரான முஸ்லிம்களின் அரசியற் போக்கானது முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாக தனித்துவம் மற்றும் முஸ்லிம்களுக்கென்று தனியொரு அரசியற் கட்சியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி இருந்தது. 1980களுக்குப் பின்னர் சிங்கள மக்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரமனது தமிழர்கள் மத்தியில் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து ஆயுத ரீதியில்; போராட ஆரம்பித்தனர். தனிநாட்டுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ்க்குழுக்கள் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய அநீதிகளை மேற்கொண்டனர். அம்பாறையில் 44 முஸ்லிம் பொலிஸார் கொல்லப்பட்டமை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டமை, மற்றும் வடக்கிலிருந்;து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை என்பவற்றை சான்றாகக் குறிப்பிடலாம். அரசியல் ரீதியில் 1981 மாவட்டசபைத் தேர்தலும் கூட முஸ்லிம்களை புறக்கணிப்பதாகக் காணப்பட்டது.

    முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை அக்காலப்பகுதிகளில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தட்டிக்கேட்காமை மற்றும் தமிழ்மக்களின் விடுதலையில் பெரிதும் அக்கறையுடன் செயற்பட்ட எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்ணுற்று தனியான அரசியல் கட்சி மூலமாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ரீதியான பலத்தினை உறுதிப்படுத்த முடியும் என்ற படிப்பினையைப் பெற்று 1981.09.21 இல் தனது முயற்சியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தினை தொடக்கி வைத்தார். இவ் அரசியல் இயக்கத்தினை 1986.11.29 இல் இலங்கை அரசியல் வரலாற்றில் தனித்துவமிக்க  முஸ்லிம் அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ளுடுஆஊ) உதயமானது. இலங்கை முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் தனித்துவத்திற்காகவும் உரிமைக்காகவும் பெரிதும் குரல் கொடுத்ததன் காரணத்தினால் முஸ்லிம்களின் ஆதரவு விஷேடமாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவு அதிகரிக்க வந்தது.

    இக்கட்சியானது 1988 இல் நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் நாடு பூராகவும் 29 ஆசனங்களைப் பெற்றதுடன் வடகிழக்கு மாகாண சபையில் 17 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக தொழிற்பட்டது. மேலும் மர்{ஹம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் சாணக்கியம் மற்றும் பேரம் பேசும் சக்திக்கு கிடைத்த வெற்றியாக சிறுபான்மையினரின் அரசியலுக்கு பாதகமாக அமைந்த 12.5 வெட்டுப்புள்ளியை 5மூ ஆக குறைத்தமையானது சிறுபான்மை அரசியலுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும். 1989 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனியொரு கட்சியின் மூலமாக 4 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றமையானது பேரினவாதக் கட்சிகள் தமது ஆட்சியினைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நாடி வந்தமையைக் குறிப்பிடலாம். 1994இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டு பல சபைகளைக் கைப்பற்றியது. இதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொது ஜன முன்னணிக்கு Pயு அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையாக அமைந்த 8 ஆசனங்களில் 7 ஆசனங்களை முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சியான ளுடுஆஊ  யானது பேரம் பேசி முஸ்லிம்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் சம பங்காளியாக மாறிய இந்நிகழ்வானது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன் ஓர் சிறுபான்மைக் கட்சியினால்கூட இந்நாட்டின் ஆட்சியினைத் தீர்மானி;க்க முடியும் என பேரினவாத சமூகத்திற்கு மாத்திரமன்றி சர்வதேசத்திற்கே எடுத்துக்காட்டாக அமைந்தது.

    முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தி;க்காக மர்{ஹம் எம்.எச்.எம். அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தார். இன்று இப் பல்கலைக்கழகமானது 5 பீடங்களுடன் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று இன மாணவர்களையும்; அரவணைத்து இன நல்லிணக்கத்திற்கு சிறந்ததொரு தேசிய பல்கலைக்கழகமாக தொழிற்படுவதைக் காணலாம். அதுமட்டுமன்றி வேலை வாய்ப்புக்கள், ஒலுவில் துறைமுகம் என்பன வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள நிலையான அபிவிருத்திகளாகக் குறிப்பிடலாம். துரதிஷ்டவசமாக டுவுவுநு மற்றும் சில சிங்கள அரசியல் தலைவர்கள் எம்.எச்.எம்.  அஷ்ரப் அவர்களின் தனித்துவ அரசியலை தொடர்ந்து எதிர்த்தே வந்தனர். முஸ்லிம் அரசியலுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டிருந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 2000.09.16 இல் மரணிக்கும் வரை முஸ்லிம் அரசியல் ஒரு பன்மைத்துவத்தையே கொண்டிருந்தது.

    2002 களில் இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்து கொண்டு தமது உரிமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சியின் போது முஸ்லிம்களின் நிலை தொடர்பாகவும் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தமையானது முஸ்லிம்களுக்கென்று தனியொரு கட்சி காணப்பட்டமையைக் குறிப்பிடலாம். மர்{ஹம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மரணத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது தலைமைத்துவ முரண்பாட்டின் காரணமாக பிளவுபட்டு இன்று முஸ்லிம்களின் மத்தியில் பல கட்சிகள் தோற்றம் பெற்றமையானது முஸ்லிம்களின் அரசியல் பேரம் பேசும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்துள்ளன.

    2009 யுத்த வெற்றியின் பின்னர் இலங்கையின் அரசியல் போக்கானது புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அண்மைக்காலமாக கடும் பௌத்த வாத சிங்கள இயக்கங்களான பொதுபலசேனா, ராணவ பலய, சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்பன முஸ்லிம்களின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருவதனை அவதானிக்கலாம். அதாவது 2011 இல் அநுராதபுர சியாரம், தம்புள்ள பள்ளிவாசல், கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உட்பட பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடையான ஹிஜாப் பிரச்சினை, ஹலால் சான்றிதழ்ப் பிரச்சினை, முஸ்லிம்களுக்கெதிராக அழுத்கமையில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டமை ஆகிய முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற சம்பவங்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை தற்கால அரசாங்கத்தில் முஸ்லிம் அரசியற் தலைவர்களின் நிலையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

    இன்றைய முஸ்லிம் அரசியற் தலைவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக காணப்படுகின்ற போதிலும் 5 முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள் காணப்படுகின்ற போதிலும் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தடுக்க முடியாது ஊடக அறிக்கையை விடுபவர்களாக காணப்படுகின்றனர். மேலும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருந்த போதிலும் தற்காலத்தில் இக்கட்சிகளால் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் கனவான கல்முனை கரையோர மாவட்டத்தினை இன்றுவரை பெற முடியாத நிலையிலேயே இன்றைய முஸ்லிம் அரசியற் தலைவர்கள் காணப்படுகின்றனர். இன்று முஸ்லிம் கட்சிகளுக்கிடையே காணப்படாத ஒற்றுமையே பேரினவாத சக்திகளால் இலகுவான முறையில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்க கூடிய சந்தர்பத்தை வழங்கியுள்ளது.

    தற்கால அரசியல் கள நிலவரமானது ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி காணப்படுகின்ற தருவாயி;ல் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினை பெரும்பான்மை வேட்பாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற வேளையில் முஸ்லிம் கட்சிகளின் முடிவினையே அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இச்சந்தர்பத்தினைப் பயன்படுத்தி முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம் சமுகத்தின் தற்கால பிரச்சினைகள், காணிப்பிரச்சினை, வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், மத சுதந்திரம், எதிர்கால இருப்பு, உரிமைகள் என்பவற்றை முன்னிறுத்தி அதனை ஏற்றுக்கொள்ளும் அபேட்சகருக்கு ஆதரவினை வழங்க முன்வர வேண்டும். சமுக நலனுக்கு மாற்றமாக அரசியல் தலைவர்கள் தமது பதவி, சுகபோகம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுத்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய முன்வருவார்களேயானால் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட மக்கள் தயாராகவே உள்ளனர் என்பதனை அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளல் வேண்டும். 

    எனவே மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்கள் என மார்தட்டுபவர்கள் முஸ்லிம் சமுகத்தின் விடிவுக்காகவும் எதிர்கால இருப்புக்காகவும் தமக்கு கிடைத்துள்ள பேரம் பேசும் வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும். இவ்வரிய வாய்ப்பினையும் தவறவிடுவார்களேயானால் மக்கள் இவ்வரசியல்வாதிகளை புறந்தள்ளிவிட்டு புதியதொரு அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் தலைமைத்துவத்தை நாடுவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. சரியான நேரத்தில் எடுக்கும் பிழையான முடிவுகளும் பிழையான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுகளும் என்றுமே சமுகத்திற்கு விமோசனத்தைப் பெற்றுத்தராது.
    எம்.வை.எம். யூசுப் இம்றான்
    அரசியல் மற்றும் சமாதான கற்கைகள் துறை
    கலை மற்றும் கலாசார பீடம்
    இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் முஸ்லிம் அரசியல் எழுச்சியும் அதன் இன்றைய நிலையும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top