• Latest News

    January 28, 2015

    100 நாள் வேலைத்திட்டத்த்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை

    கிழக்கு மாகாணத்தையும், மத்திய மாகாணத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு செயல்திட்டங்களை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைவாக துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஹக்கீம் தமது அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   

    கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் கண்டி மாவட்டத்தை முதன்மைப்படுத்தி  மத்திய மாகாணத்திலும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு என்பன தொடர்பில் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்  உயர்மட்ட  கலந்துரையாடலொன்று  புதன்கிழமை (29) முற்பகல் பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் உள்ள அமைச்சர் ஹக்கீமின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்தார். 

    திகாமடுல்லை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை தேர்தல் தொகுதிகளில்; தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு செயற்திட்டங்களின் வரைபடங்களை பார்வையிட்டதோடு, அவை பற்றிய விளக்கங்களையும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ஹக்கீம், வறட்சியாலும், மாரி காலத்தில் வெள்ளப்பெருக்காலும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் சுட்டிக்காட்டி, அவற்றிற்கு தீர்வாக விசேட திட்டங்களைப் பற்றி பரிசீலிக்குமாறும் பணிப்புரை விடுத்தார். அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, பொத்துவில், மட்டக்களப்பு, காத்தான்குடி, மூதூர், கிண்ணியா, திருகோணமலை உட்பட ஏனைய நகர்ப் புறங்களில்  புதிதாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ள செயல்திட்டங்கள் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார். கண்டி மாவட்டம் பற்றி அதிகாரிகளுடனான அடுத்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்படுமென்றும் அவர் கூறினார். 

    நகர அபிவிருத்தி செயல்திட்டங்களைப் பொறுத்தவரை பாரிய வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களும், சிறிய அளவிலான செயற்திட்டங்களுக்கு அமைச்சர் ஹக்கீமின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, காணி ஒழுங்குபடுத்தல் கூட்டுத்தாபனம் என்பனவும் உரிய நிதியை ஒதுக்கீடு செய்து வருகின்றன.  

    இந்த வார இறுதியில் அமைச்சர் ஹக்கீம் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் பொழுது நிலைமையை நேரில் சென்று அவதானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரிகளையும் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். 

    இக் கலந்துரையாடலில் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நகர அபிவிருத்தி நீர்பாசன மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், இணைப்புச் செயலாளர் யு.எல்.எம். முபீன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிஹால் பெர்னான்டோ மற்றும் உயர் அதிகாரிகள் பங்குபற்றினர். 






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 100 நாள் வேலைத்திட்டத்த்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top