• Latest News

    March 27, 2015

    காத்தான்குடி : விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம்

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
     வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் இணைந்து விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் 26 இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றது.

    காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் ஆகியோரினால் இன்று 26 காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    இதன் போது காத்தான்குடி நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால்  துவிச்சக்கர வண்டி மற்றும் உழவு இயந்திரங்களுக்கு எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன் அது தொடர்பான துண்டுப் பிரசுரமும் துவிச்சக்கர வண்டி மற்றும் உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

    வீதி விபத்துக்களினால் வருடமொன்றுக்கு இலங்கையில் 2500க்கு அதிகமான நபர்கள் மரணித்து வருகின்றனர் எனவும் பத்து வருடங்களில் 36031 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 2912 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாகவும் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 222 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணித்துள்ளனர் எனவும் இவ்வாறு துர்ப்பாக்கியமான துவிச்சக்கர வண்டி விபத்துக்களினால் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறவர்களின் வாழ்க்கையினைப் பாதுகாத்துக் கொள்வது வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் பொறுப்பாகும் என அச் சபை தெரிவித்துள்ளது.

    வாகனச் சட்டத்தின் 35ஆவது பிரிவின் பிரகாரம் இரவு வேளைகளில் துவிச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் போது வெளிச்சத்தைக் கொண்டிருத்தல் கட்டாயமானதாகும் எனவும் இச் சட்டத்தினை மீறுவதுதண்டனைக்குரிய குற்றமாகும் என வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடி : விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top