எம்.சஹாப்தீன்-
வரலாறு என்ற சொல் இறந்த காலத்தை குறிக்கின்றது. பொது வரலாறு என்பது மனிதர்களின் வாழ்வியலைக் குறிக்கின்றது. வரலாறு எனும் போது அது எழுத்து வடிவில்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. வாய்மொழியாகவும் இருக்கலாம். மனிதர்கள் எழுதப் படிக்க தெரியாத காலத்தில் இருந்து மனித வரலாறு பேசப்படுகின்றது. இதனை தொல் பழங்காலம் என்பர்.
வரலாறு பற்றி வரலாற்று ஆய்வாளர் நிவேதா உதயராஜன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு இனத்தின் பதிவுகள் எங்கு அடையாளப் படுத்தப்படுகிறதோ அல்லது பதியப்படுகிறதோ அதுதான் வரலாறு.
• நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் எழுதுவது.
• மற்றவர்கள் ஆராய்ந்து எழுதியதை வாசித்து தம் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து எழுதுவது.
• தொல்லியற் சான்றுகளினூடாக ஆய்வுசெய்து எழுதுவது என்பன வரலாற்றுப் பதிவாகின்றன.
எதைப்பற்றி எழுதுவது வரலாறு?
ஒரு நாடு, இனம், மொழி, பண்பாடு, தனிமனிதன், தலம், பொருள், போர் எனப் பல இருந்தாலும், முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனித இனம் தோன்றிப் பரவிப் பெருகி அழிந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த இனங்களின் பழைமை, தொன்மை, நாகரிகம், வாழ்வியல் என்பவற்றை எழுதுவது வரலாறு.
வரலாற்றை ஆதாரங்களுடன் எழுதப் பயன்படுபவை: அகழ்வாய்வுகள், மண்படைச் சரிதவியல், கல்வெட்டுக்கள், மட்பாண்டச் சரிதவியல், ரேடியோ கார்பன் ஆய்வு 14, மரபுயிரியற் சோதனை, கல்லறைகள், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவை.
இவைகளை கருத்திற் கொண்டே நிந்தவூரின் வரலாறு எழுதப்படல் வேண்டும்.
நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும் எனும் இந்நூல் நிந்தவூரின் வரலாற்றை முழுமையாக சொல்லுவதற்கு அதிக அளவில் தவறியுள்ளது என்பதே எனது கருத்தாகும். ஆயினும், இம்முயற்சியில் ஈடுபட்டவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.
இம்மலருக்கு ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் மலர்க் குழுவின் ஆலோசகர்கள், தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூலில் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ.ஏ.ஜலீலின் செய்தி 04 பக்கங்களில் உள்ளன. இதில் அவர் இந்நூல் ஒரு வாரத்திற்குள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மிகவும் அவசரமாகவும், நெருக்கடியான சூழலிலும் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிகின்றது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன்அலி, பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி.வணிகசிங்க, மேலதிக அரசாங்க அதிபர்களான கே.விமலநாதன், எம்.ஐ.எம்.அமீர், ஓய்வு பெற்ற நிர்வாக சேவை உத்தியோகத்தர் கே.எம்.எம்.சரிப், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.இப்றாலெப்பை, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.யூ.டபிள்யூ.விக்கிரம ஆராச்சி, நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் ஆர்.திரவியராஜ், மலர்க்குழு தலைவர் திருமதி மைமூனா செயினுலாப்தீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆகியோர்களின் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் எஸ்.எச்.எல்.அலியாரின் கட்டுரை முதலில் இடம்பெற்றுள்ளது. இதனை நாம் முதலில் பார்ப்போம்.
இவர் தமது கட்டுரைக்கான ஆதாரங்களை பல நூல்களிலும், வேறு ஆவணங்களிலும் பெற்றுள்ளார். சிறப்பாக தொகுத்துள்ளார். அவர் தமது கட்டுரையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை சுருக்கமாக சொல்லியுள்ளார். அத்தோடு, கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் நிந்தவூர் என்ற பெயருக்கான ஆதாரங்களையும் முன் வைத்து நிருவியுள்ளார்.
இவரின் கட்டுரையின் ஊடாக நிந்தவூரில் 1880ம் ஆண்டிற்கு முன்னமே மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று அறிய முடிகின்றது. நிந்தவூரின் முதற் குடியேற்றம் இடம்பெற்றதாக கருதப்படும் இடத்தையும் தொட்டுக் காட்டியுள்ளார்.
நுpந்தவூரினை பற்றிய குறிப்புக்கள் பெரிதாக எழுத்து வடிவில் இல்லை என்று குறிப்பிடும் இவர் இரண்டு எழுத்து வடிவிலான ஆதாரங்களை முன் வைக்கின்றார். ஒன்று நூலின் தலைவர் நல்லம்மா( திருமதி மைமூனா செயினுலாப்தீன்) அதிபரின் பாட்டனாரின் உறுதி (1903) மற்றது எஸ்.எச்.எல்.ஏ.இப்றாகிம் அதிபரின் குடும்பக் குறிப்பு. இவர் கட்டுரையாளரின் சகோதரர் ஆவார்.
ஆகவே, தேடல் மலர் குழுவிற்குள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதா என்று எண்ணத் தோன்றுகின்றது.
நிந்தவூரைப் பற்றி சாய்ந்தமருதைச் சேர்ந்த ஆசுகவி மீராலெப்பை சீயம் 1880 ஜுலை 17ம் திகதி பாடிய பாடலை கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எம்மால் தற்போது தரப்பட்டுள்ளவற்றின் படி கட்டுரையாளர் 1880 ஜுலை 17, இற்கு பின்னர் 1903, 1935, 1968 ஆண்டுகளை குறிப்பிட்டுள்ளார். இவைகளுக்கு இடைப்பட்ட காலங்கள் அதிமாக உள்ளன. ஆகவே, கட்டுரையாளின் முயற்சியோடு நாமும் இணைந்து தேடல்களை மேற்கொள்ள வேண்டும். அப்போது நிச்சயமாக ஆதாரங்களை பெற முடியும். நமது தேடல்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். இடைப்பட்ட காலங்களிலும் 1880இற்கு முன்னரும் தகவல்களை வைத்திருப்போர் ஆதாரங்களுடன் தகவல்களை முன் வைத்தால் நல்லது.
இக்கட்டுரை பற்றிய பார்வை தொடரும்.......











0 comments:
Post a Comment